நேற்றையப் பாசுரம் வரை., நோன்பு முறைகளைப் பற்றி ஆயர்பாடி பெண்கள் விரிவாகப் பேசியதைக் கண்டோம். இன்று முதல் பத்து நாட்களுக்கு., திருப்பாவையில் “பள்ளிஎழுச்சிப் பாசுரங்கள்” தான்.
சீர் மல்கும் ஆயர்பாடி அல்லவா! செல்வச் செழிப்பில் திளைக்கும் ஆயர்பாடி இடைக்குல மகளிர் பேசி முடித்ததும்., அதிகாலையில் நாம் எல்லோரும் கூட்டமாய் சென்று கண்ணனை எழுப்பி அழைத்துக் கொண்டு நீராடப் போகலாம்; முதலில் துயில் நீங்கி எழுபவர்கள் மற்றவரின் மாளிகைக்குச் சென்று துயில் நீங்காதவர்களை எழுப்பி அழைக்க வேண்டும் என முடிவு செய்து அவரவர் மாளிகைக்குச் சென்று படுத்தனர்.
அதன்படி, சீக்கிரம் எழுந்தவர்கள் இன்னும் எழுந்திரிக்காதவர்களைச் சென்று எழுப்புகிறார்கள். விடிந்து விட்டது என்பதற்கு ஆதாரமாகச் சில அடையாளங்களைச் சொல்லி விரைந்து எழுந்து வர வேண்டுவதே இன்றைய பாசுரம்.
திருப்பாவையின் முதல் பள்ளியெழுச்சிப் பாசுரம்.
புள்ளும் சிலம்பின காண்; புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு,
கள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சி,
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்!
விளக்கம்:
அதற்குள் பொழுது விடிந்து விட்டதா? என்ற கேள்விக்குப் பதிலாக, பெண்ணே! பறவைகள் எழுந்து குரல் எழுப்புவதை பார்; பறவைகளின் ராஜாவான கருடாழ்வாரின் தலைவனான கண்ணன் கோயில் சந்நிதியில் எல்லோரையும் எழுப்ப, திருப்பள்ளியெழுச்சிக்கு ஓங்கி ஒலிக்கும் வெண்சங்கின் பேரொலி உன் காதில் கேட்க வில்லையா? பெண்ணே! விரைந்து எழுந்து வா என்று தோழிமார் எழுப்புகின்றனர்.
நம்முடைய கண்ணன், பேய் மகளான பூதகியை அவளின் நஞ்சு தடவிய முலைக்காம்புகளை கடித்து உறிஞ்சி அழித்தவன். வஞ்சகனான சடகாசுரனை அவன் வண்டியோடு நொறுங்கி அழியும்படி தன் காலால் ஓங்கி உதைத்து மக்களைக் காத்தருளும் ஆபத்பாந்தவன் அல்லவா என்றாள். அந்த கண்ணன் தான் திருப்பாற்கடலிலே தேவியரோடு யோகநித்திரை வாசம் செய்து, அனைத்து அவதாரங்களுக்கும் வித்தாய் விளங்குகின்றான். அப்பேர்பட்ட பகவானை முனிவர்களும் யோகிகளும், கர்ப்ப ஸ்தீரிகள் வயிற்றுப் பிள்ளைக்கு நோகாமல் மெள்ள எழுந்திருப்பதைப் போல எழுந்து, “ஹரி,..ஹரி..” என்று பேரொலி எழுப்பியது உன் உள்ளம் புகுந்து குளிர்ந்திருக்கும். இனியாகிலும் எழுந்து வா என்று அழைக்கிறார்கள்.
நண்பர்களே! காலை எழும்போதே பகவத் சிந்தனையோடு எழுந்து பகவானை மிகுந்த விருப்பத்தோடு வணங்கி ஒவ்வொரு நாளையும் தொடங்குவோமேயானல் நிம்மதியும், மகிழ்ச்சியும், காரிய வெற்றியும் நம்முடனே தொடர்ந்து வாசம் செய்வது திண்ணம்.
“ஆண்டாள் திருவடிகளே சரணம்”
“ஓம்! நமோ நாராயணா!!”
Image courtesy (with Thanks): Sourced via Google from Webdunia site.