கிராமத்து வாழ்க்கை

by Parimelazhagan P
294 views
கிராமத்து வாழ்க்கை

இது எல்லாமே என்னோட வாழ்க்கையிலே நடந்தது தான்.

கோயில்குளத்துக்குன்னு ஊருவிட்டு ஊரு போனா..கூண்டுகட்டி வண்டியிலே தான் போவாங்க.

சாமான் செட்டு..அரிசி பருப்பு..மாட்டுக்கு வைக்கோல் மொதக்கொண்டு வண்டிலே ஏத்தி கொண்டு போயிருவாங்க.

கூட்டத்துக்கு எல்லாருக்குமா சேத்து ஒரே சோறா கூட்டாஞ்சோறு பொங்குவாங்க.அதுக்கு தொட்டுக்க கறி புளி இல்லாட்டலும் பரவாயில்லை.

வீட்டுல சாப்பிட தாளம்..தட்டு..கும்பா..மரவை..ன்னு பலதும் உண்டு.

வெங்கல கும்பா..பித்தளைக் கும்மா எங்க வீட்டுலேயே இருந்தது.மண் கும்பாவும் உண்டு.சிந்தாம செதறாம சாப்பிட கும்பா தான் தோதுவா இருக்கும்.

வெங்கல கும்பா ஒன்னு எனக்குன்னே எங்க வீட்டுல ஒன்னு இருந்துச்சு.புளியும் சாம்பலும் போட்டு விளக்கி வைச்சாவோ..ன்னா..பளபளன்னு கும்பா மின்னும்.

கும்பாவில சோறு சாப்பிட்ட ருசியே தனி தான்..அது சுடு சோறுன்னாலும் சரி..பழையசோறுன்னாலும் சரி.

அப்போல்லாம் சாய்ங்காலந்தான் சுடுசோறு கறியெல்லாம்.

காடுகரைக்கு வேலைக்கு போன பொம்பளைங்க மத்தியானம் ரெண்டு மூனு மணி சுமாருக்கு ஊருக்குள்ள வந்து வாய்க்காங்கரையிலே துவைச்சு குளுச்சு முழுவிட்டு சுத்தபத்தமா வீட்டுக்குள்ளே வாரதே..ஒரு அழகுல்லா..இப்போ இந்தக் காட்சியெல்லாம் கிராமத்திலேயே இல்லையே.

கருகருன்னு மசங்கையிலே சோறுகறி சுடச்சுட ரெடியாயிரும்.இருக்க வெளிச்சத்திலே முத்தத்துலே ஒக்காந்து எல்லாரும் சாப்பிட்டாவும். வட்டமா உக்காந்திருப்போம்.பல நாட்கள் நிலாச் சோறு தான்.

சாப்பிட்டு ஆனதும்..ஆம்பிளை தனியே..பொம்பளை தனியே அங்கிட்டும் இங்கிட்டுமா செத்தோடம் கதை பேசிகிட்டு இருப்பாங்க.

ஊருக்கு ஊரு வேப்பரம்..அரசமரத்தடிகள் இருக்கும்.எங்கூரிலேயும் மேல வேப்பமரம்..கீழ வேப்பமரம்..ன்னு சுத்தி திண்டு கட்டி..புள்ளையாரு..தங்கம்மன்னு..கோயிலாவும் இருக்கு.

சடைச்ச ஆம்பளைங்க அங்ஙனக்குள்ள ஒக்காந்து ஊர்க்கதை பேசி..விவசாய சோலிகளைப் பத்தியும் பேசி..செத்தோடம் சடவு ஆறிட்டு வருவாங்க.

எட்டு மணிக்கெல்லாம் ஊரே உறங்கிடும்.

பே.பரிமேலழகன்

You may also like