விறவுக்கெட்டு

by Parimelazhagan P
358 views
விறவுக்கெட்டு

அதான் ஒங்களுக்கு நல்லாத் தெரியுமே.. எதூஊஊஊ..ம்பீங்களே..

அதாம்மிய்ய்யா..நான் சின்னப் புள்ளையிலே எங்க ஆத்தாளை பெத்த ஐயா..அதான்..வே..எங்க அண்ணாவிதாத்தா..வீட்டிலே தான் வளந்தேன்.

பொறக்கும் போதே ராகு திசை இருப்பில் பொறந்தேனாம்.ராகு இருந்த கட்டத்தினாலே தாய்தாப்பனுக்கு 15 வருசத்துக்கு ஆவாது..ன்னுட்டு..ஜோசிய நிபுணரான எங்க செங்கோட்டை தாத்தா..என்னை தானே வளக்கமின்னு எங்க ஆத்தாகிட்ட சொல்லிட்டு செங்கோட்டைக்கி கூட்டியாந்துட்டாவொ.

இம்புட்டுக்கும் எங்க வீட்டுக்கு நான் தான் நாலாவத பொறந்த மொதல் ஆம்பிளைப்புள்ளே.குடும்பமே சந்தோசத்திலே குதியாட்டம் போட்டிருச்சாம்.

எட்டே நாள்ல..எங்கேயெல்லாமோ சுத்தியடிச்சு ஒரு நல்ல வெள்ளேவெளேருன்னு பால் தருத பசு மாட்டை புடிச்சாந்து தொழுவுல கட்டி..அன்பை பொழிஞ்சவரு எங்கப்பா.

மொத ஆம்பிளை புள்ளைங்கிறதாலே தம்மடியை விட்டு கீழேயே இறக்கமாட்டாளாம் எங்காத்தா..அம்புட்டு உசிரா வளத்திருக்கா.

“பையல்(பையன்/பயல்) என்றபோதேபரிந்தெடுத்து செய்புறத்திலேந்தி..கனகமுலை தந்தாளை..எப்பிறப்பில் காண்பேன்..இனி…பட்டினத்தார்.”

ஆனாலும் தெசை காணாது..ன்னு இந்த ராசப்பா தாத்தா வீட்டுல வளந்து வாரேன்..படிப்பிலெல்லாம் படுசுட்டி..கெட்டி..எப்போதும் பள்ளியிலே முதல் மாணவன்.

சரி ..தம்..பட்டத்தை வுடுங்க..மேலே போவொம்.

செங்கோட்டை சின்ன ஊரு தாமின்னாலும் அந்தக் காலத்திலேயே அதுக்கு ஒரு டவுண் அந்தஸ்தும் இருந்தது..

அங்ஙெ அடுப்பெரிக்கதுக்கு வீட்டுக்கு வீடு விறவு தான் வாங்கியாவனும்.

செங்கோட்டை பார்டரை சுத்தி நிறைய சா மில்லுகள்(SAW MILLS) அதாவது மரம் அறுப்பு மில்லுகள் அதிகம்.அதிலே சைஸ் கட்டைகள் போக.. கழிச்சுப் போடுத கழிவு கட்டைகள் வரிச்சிகளை சல்லுசான விலைக்கு விறவுக்கட்டை சைஸூக்கு முறிச்சு குடுப்பாங்க..கட்டைகள் பாத்தியளா..நல்லா ஒன்னு போல நின்னு அடுப்பெரியும்..அதுதான் மொதோ சாய்ஸ்..எங்க தாத்தா வீட்டுலே.

விறகு அடுக்கி வைக்கதுக்குன்னே ஒரு பெரிய அளி பாச்சுன அட்டம் இருந்துச்சு தாத்தா வீட்டுலே.

அடுத்த சாய்ஸ் வந்து மலங்காட்டுலேயிருந்து தலைச்சுமையா கொண்டு வார விறவுக்கட்டுகளை வாங்குவது தான்.

செங்கோட்டை ஒரு வகையிலே மலையடிவார ஊருதானே..ஊருக்கு மேக்கே கண்ணுப்புளிமெட்டைத் தாண்டினா மேற்குத் தொடர்ச்சி மலை தானே.

செங்கோட்டையைப் போலொரு அழகான ஊரை நான் கண்டதில்லை..உலகத்திலே எங்கேயும் காணாத லேசான ஈரம் தடவிய காற்றை..தென்றலை..அங்கே அநுபவித்ததைப் போல வேறெங்கும் நான் கண்டதில்லை.

செங்கோட்டை காற்றுக்கு சல..சல..எனும் ஒரு ஓசையுண்டு.ஊரைச்சுற்றி ஆறுகளும் தென்னந்தோப்புகளும் நஞ்சை வயல்களும் விளங்காடுகளும் என்று எப்போதும் பச்சை சாத்திய பசும் மண்ணாகவே அந்தக் காலத்தில் செங்கோட்டை ஜொலித்தது.

தெற்காத்து வழியா மேக்கநிக்கி நடந்து தோப்புக்காடு..வயக்காடுகளைத் தாண்டினா..ஐந்தருவிக்கு போயிருவோம். வீட்டுக்குத் தெரியாம கள்ளத்தனமா நடந்து ஐந்தருவி சென்று பலமுறை குளித்திருக்கிறோம்.அந்த இளவயது கோஷ்டிகளின் தைரியமே தனி தான். பசிச்சா..மாங்கா..தேங்கா..நவாப்பழம்..பலாப்பழம்..தான்..எங்களை யாரு கேட்ட..இல்ல கேக்க..??

அந்தக்காலத்திலே செங்கோட்டையை சுத்தியுள்ள ஊர் ஆட்கள் பலருக்கு இந்த மலைக்கு மேலே ஏறி..அங்க காஞ்சு முறிஞ்சு கெடக்க விறவுகட்டைகளையும் சில சமயம் புதுசா பச்சைக் கம்புகளையும் வெட்டியாந்து வீடுவீடா விக்கிறதை பொழைப்பா வச்சுருந்தாங்க.

விறவைத் தவிர ஈத்தலு..கூவிலைகளையும் கெட்டுக்கெட்டா வெட்டியாந்து விப்பாங்க.

அப்பல்லாம் விலைவாசி அதளபாதளத்துல கெடந்த நேரமுல்லா.

ஒரு முழுத்த ஆளு செமந்துட்டு வார விறவுகட்டுக்கு ஒன்னா ரூவாயிலிருந்து ரெண்டு ரூவா வரைக்கும் விலை தீர்த்து துட்டைக் குடுப்பாவொ..எங்க தாத்தா.

பூராவும் காட்டு விறவு தான்.தலைப்பக்கம் ஒடுங்கியும் நடுவுல கூடுதலாவும் வைச்சு காட்டு கொடிகளை வச்சு மூனு நாலு இடத்துல கெட்டி தூக்கிட்டு வருவாங்க.மலங்காட்டுல இருந்து கீழே வரும்போது தலைகுப்புற இறக்கமுல்லா..அதனால தான் முன்னாடி அதிகமா பாரம் வைக்க மாட்டாங்க.

காட்டுக் கொடிகளின் இந்த பயன்பாட்டை பாத்து எனக்கு சிறு வயசில ஆச்சிரியமா இருக்கும்.இவங்களுக்கு எல்லாமே மலைக்குள்ளேயே கிடைச்சுருதே..ன்னு.

விலை தீத்து வாங்கின விறவுகட்டை அந்தாநிக்கி நட்டுக்குத்தலா கீழசுவரோரம் சாத்தி வைச்சுட்டு போவாங்க..அந்த வயத்துபாட்டுக்கு கடும் பிரயாசைப் படும் ஏழை சனங்க.

ஒரு வாரத்துக்குள்ள..நானும் எங்க கடைசி தாய்மாமா (மொத்தம் 11 பேரு..எனக்கு தாய் மாமாக்கள்) 2 பேரும் சேந்து கெட்டை அவுத்து கொடிகளையெல்லாம் தனியா வெட்டி அடுக்கிட்டு..அதக்கும் பெறவு ஒவ்வொரு கட்டையையும் நீளத்தைப் பொறுத்து மூனாவோ..நாலாவோ வெட்டி அடுக்குவோம்.

இதெல்லாம் வீட்டுப் பிறவாசல்..ல நடக்கும்.பொறவு..என்னை ரெண்டு கையையும் நீளமா நீட்டச்சொல்லி..நான் போதும்..போதும்..கண்ணை மறைக்கி..ன்னு அவயக்காடு போடுந்தன்னியும் அடுக்கி வுடுவாங்க.

குத்துமதிப்பா நடந்து மேலோட்டுகுள்ளே போயி செல்ப்பு(Shelf) கிட்ட கொண்டி போடுவோன்.எல்லா விறவுக்கட்யும் வத பிறவு எல்லா அட்டத்திலியும் புடிக்கும் வரை மூனுபேரும் சேந்து ஒன்னுபோல அடுக்கி வைச்சுருவோம்.விறவு அதும்பாட்டுக்கு நிழலுல உக்காந்து காஞ்சுகிட்டு கெடக்கும்.

எனக்கென்னன்னா..அந்த வயசிலேயே அப்பிடி விறவு வெட்டப் போற ஆட்களை நெனைச்சு பாவமா இருக்கும். ஆணும் பொண்ணும் சேந்தே போயி சரிக்குசரியா வெட்டி..செமந்து கொண்டு வருவாங்க. விடியக்காலையிலே குடிச்சிட்டு போற கஞ்சி தான்..அந்தி சாஞ்ச கருக்கல்ல தான் ஊருக்குள்ள சுமையோட வருவாங்க..

அதுல கெடைக்க ஒன்னு ரெண்டு ரூவாக்குள்ள தான் சோறு..கறி..புளி எல்லாம்..புள்ளைகுட்டியெல்லாங்கூட பள்ளிக்கூடம் போவாதுவொ..

ஏய்ய்யா..இந்த விளிம்பு நிலை மக்கள்..ங்கிறாங்களே..இவங்க தான்ய்ய்யா அவங்க..விளிம்பு..ன்னா கடைசி ஓரம்..ன்னு பொருள்.இந்த வாழ்வாதாரம் கூட இல்லைன்னா..அவங்க விளிம்பு..ஓரத்தைத் தாண்டி..பிழைப்பே இல்லாமல் போய் விடுவார்கள்.

விறவு சொமக்கும் ஆட்கள் கூடவும் எனக்கு தோழமை இருந்திருக்குன்னு நான் பெருமையா சொல்லிக்கிடுதேன்..ய்ய்யா.!

பே.பரிமேலழகன்

You may also like