பாசுரம் – 18

by Parimelazhagan P
140 views
பாசுரம் – 18

“மாதங்களில் நான் மார்கழி” என்றானே கண்ணன். அவனோடு கூடியிருக்க ஆயர்பாடி பெண்கள் செய்யும் அத்தனை முயற்சிகளும் பளிங்கு போல் சுத்தமானவை. நமக்கு வாழ்க்கைப் பாடமாய் இருப்பவை. தனியே போனால் கண்ணன் வசப்பட மாட்டானோ? என்று அய்ச்சியர் கூட்டமாய் வந்தனர். பெற்றோரை, அண்ணன் பலராமனை எழுப்பிப் பணிந்து நல்ல பெயர் வாங்கியாயிற்று. கண்ணன் படுக்கையறை வரையும் வந்தாயிற்று. கண்ணன் நப்பின்னை பிராட்டியோடு சயனம். கண்ணனை மட்டும் தனியே எழுப்பினால் பிராட்டி அனுமதிப்பாளா? ஆகவே நப்பின்னையை எழுப்பி, அவள் கருணையோடு கண்ணனை எழுப்பினால்., கண்ணன் உடனே வந்து விடுவான் என்ற நம்பிக்கையில் நப்பின்னையை எழுப்புவதே இன்றைய பாசுரம்.

நம் நாட்டின் வடபகுதியில் “ராதை – கிருஷ்ணன்” என்று போற்றுவதை நாம் அறிவோம். அங்கே ராதைக்கு கொடுத்த இடத்தை தமிழிலக்கியம் நப்பின்னைப் பிராட்டிக்கு அளித்து போற்றுகிறது.

“உந்து மதகளிற்றன் ஓடாத தோள் வலியன்”, மதங்கொண்ட யானை பலத்தோடு போரிட்டு ஜெயிக்க வல்லமையுள்ள தோள்களைக் கொண்டவனாக, இங்கே நந்தகோபனின் வீரபராக்கிரமம் சொல்லப் படுகிறது. காரணம், கம்சனால் ஏவப்படும் துன்பங்களினின்று கண்ணனை காக்கும் வலிமை பெற்றவன், நந்தகோபன் என்பதற்கே.

ஸ்ரீ ராமானுஜர் விரும்பும் பாசுரம் இது.

உந்து மத களிற்றன் ஓடாத தோள்வலியன்,
நந்த கோபாலன் மருமகளே, நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலீ! கடை திறவாய்;
வந்தெங்கும் கோழி அழைத்தன காண்; மாதவிப்

பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய், மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

விளக்கம்:

மதயானை பலத்தோடுகூட்டத்தை அடக்கும் பலசாலியும், பகைவர்களைக் கண்டு பின் வாங்காத தோள் வலிமை பெற்றவனுமான ஆயர்குலத் தலைவன், நந்தகோபன் மருமகளே., நப்பின்னையே! சுகந்தம் வீசும் நறுமண கூந்தலையுடைய அழகுப்பதுமையே! எழுந்து வந்து தாழ்பாள் நீக்கி கதவைத் திற, என்று ஆய்ச்சியர் விண்ணப்பிக்கின்றனர். கண்ணனுக்கு நந்தகோபன் தானே ஆயர்பாடியில் தந்தை. அந்த உறவு முறையிட்டே, நப்பின்னைப் பிராட்டியை, ‘நந்தகோபாலன் மருமகளே’ என்று முறை சொல்லி அழைக்கிறார்கள்.

நப்பின்னையே! வெளியே விடிந்து விட்டது. கோழிகள் கூவுகின்றன். மணம் வீசும் மல்லிகைப் பந்தல் மேல் பலவகையான குயில்கள் கூவி ஆனந்த ஒலியெழுப்பி ஆரவாரம் செய்கின்றன.

பந்து போன்ற தளிர் செண்டினாலான அழகிய விரல்களை உடையவளே! உன் கண்ணுக்கினிய கணவன் கண்ணனின் திருநாமங்களை உன்னோடு கூடி, நாங்களெல்லாம் பாடி வணங்கவே வந்துள்ளோம். நீயும் மகிழ்ச்சியோடு வந்து, உன் செந்தாமரைக் கைகளில் பூட்டியுள்ள வளையல்கள் இன்னிசை ஒலிக்கும்படி கதவைத் திறந்து அருள் புரிய வேண்டும் என்கின்றனர்.

“செந்தாமரை கையால்” என்றது, கண்ணனால் ஆசீர் பெற்ற நாங்கள் அவனைக் கூடியிருக்க உன் கையை நம்பி இருக்கிறோம் என்பதாம். தம்பதி சமேதராய் இருக்கும் பகவானை, பிராட்டியை கொண்டே அடைய முற்பட வேண்டும் என்பதும் உட்பொருள்.

நண்பர்களே! இது தானே உலக வழக்கமாகவும் உள்ளது. தாயின் சிபாரிசில் தானே தந்தையிடம் காரியம் சாதிக்கிறோம். இறைவன் நம்மை எல்லாம் ஆக்கிய தந்தை என்று உணர்வோம். இறைவியைக் கொண்டு இறையருள் பெறுவோம்.

“ஆண்டாள் திருவடிகளே சரணம்”

“ஓம்! நமோ நாராயணா!!”

You may also like