பாசுரம் – 17

by Parimelazhagan P
104 views
பாசுரம் – 17

செல்வச் செழிப்பில் திளைக்கும் ஆயர்பாடிக்குத் தலைவனான நந்தகோபன், கண்ணன் அருளால் ஆயர்பாடியில் பெருகி வரும் செல்வத்தை, வேண்டுவோருக்கெல்லாம் வேண்டுமளவுக்குத் தர்மம் செய்து வருகிறார். குறிப்பாக உடையும் உணவும்., நாட்டிலுள்ளோருக்கு முழு திருப்தி ஏற்படும் அளவுக்கு கொடைத்திறம் காட்டி காப்பதில் வல்லவர். அப்படிப்பட்ட கொடையாளி நந்தகோபன்., நோன்பு நோற்கும் சிறுமியருக்குத் தேவையானதையும் தாரளமாய் செய்து உதவுவார் என்பதும் குறிப்பாக இப் பாசுரத்தில் சொல்லப் படுகிறது.

ஆயர்பாடி பெண்களின் பெருமாட்டி, நந்தகோபன் சீமாட்டி, கண்ணன் மேல் உயிராய் இருந்து வளர்க்கும் ஆயர்குலக் கொழுந்து, யசோதா பிராட்டியும், தலைவன் போற்றும் தலைவியாய் இருந்து ஆய்ச்சியர்களை அரவணைக்கிறாராம். இப்பேர்ப்பட்ட குலத்தை கண்ணன் தான் வாழுமிடமாகத் தெரிவு செய்ததும் இவர்களின் பாக்கியமே.

கோபியர் இன்றைய பள்ளியெழுச்சியில், முதலில் நந்தகோபன் யசோதையையும், பின்னர் கண்ணனையும் அண்ணன் பலராமனையும் துயிலுணர்த்தும் காட்சி.

அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய்;
கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தே குலவிளக்கே!
எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய்.

அம்பரம் ஊடறுத்தோங்கி உலகளந்த
உம்பர்கோமானே! உறங்கா தெழுந்திராய்,
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்.

விளக்கம்:

உடுக்க ஆடையும், உண்ண உணவும், தண்ணீரும் வேண்டுவோர் திருப்தி அடையும் வண்ணம் தர்மம் செய்து வருகின்ற, எங்கள் ஆயர்பாடி தலைவர் நந்தகோபரே! பொழுது புலர்ந்தது; எழுந்து வாரும்.

ஆயர்குல மகளிர் தலைவியே! உயர்ந்தவளே! இக்குலக் கொழுந்தே! பிரகாசமான தீபம் போன்ற யசோதா பிராட்டியே, துயில் நீங்கி எழுந்திருங்கள்.

விண்ணையே கிழிக்கும் வண்ணம் விஸ்வரூபமாய் ஓங்கி வளர்ந்து, மூன்று உலகத்தையும் காலால் அளந்து காத்த, தேவாதி தேவனான எங்கள் கண்ணனே! துயில் நீங்கி எழுந்தருள் புரிய வேண்டுகிறோம்.

சுத்த பொன்னால் செய்த கால் சதங்கை விளங்கும் திருவடிகளையுடைய செல்வச்சீமான் பலதேவரே! நீயும் உன் தம்பி கண்ணனும் இன்னும் உறங்காமல் எழுந்து, உங்களுடைய ஆசி வேண்டி நிற்கும் ஆய்ச்சியர்களுக்கு அருள் செய்யுங்கள் என்று பள்ளியெழுச்சி பாடுகின்றனர்.

பலதேவரை முன்னிட்டு கண்ணனை எழுப்புவது, பகவானுக்கு அந்தரங்கமாய் நெருக்கம் உள்ளோரை முன்னிட்டு பகவானை எழுப்புதலாகும்.

ஆயர்பாடி சம்சாரிகளின் உறக்கம் தீர்க்க அவதரித்த கண்ணன் உறங்கலாகாது என்பது, “உம்பர் கோமானே! உறங்காதெழுந்திராய்” என்றதால் விளங்கும்.

நண்பர்களே! புத்தாண்டு பிறந்த இந்நாளில், நாமும் நம் கடமைகளின்று பிறழாது, உழைத்து உயர கண்ணன் திருவடியைப் பற்றுவோம்.

“ஆண்டாள் திருவடிகளே சரணம்”

“ஓம்! நமோ நாராயணா!!”

You may also like