பாசுரம் – 21

by Parimelazhagan P
140 views

நேற்றையப் பாசுரத்தில் நப்பின்னைப் பிராட்டியை மீண்டும் புகழ்ந்து எழுப்பியதில், கோபியருக்கும் பிராட்டிக்கும் உடன்பாடு ஏற்பட்டு, சமாதானமாகி., நப்பின்னை எழுந்து வந்து, ‘என்னருமைப் பெண்களே! நான் உங்கள் கோரிக்கையை நிறைவேற்றித் தருகிறேன். நாம் அனைவரும் சேர்ந்து கண்ணபிரானைத் துயில் எழுந்து வர வேண்டுவோம்,’ என்றாள். கோபியர் அனைவரும் இதைக் கேட்டு மிகவும் மகிழ்ந்து, அனைவரும் கண்ணனை எழுப்பச் செல்கிறார்கள் என்பது தான் இன்றைய பாசுரம்.

நந்தகோபனுடைய செல்வச் செழிப்பையும், அறநெறி பிறழா வாழ்க்கைச் சிறப்பையும், வீரபிரதாபங்களைப் பற்றியும் ஏற்கனவே வந்த பாசுரங்களில் பார்த்தோம். இன்றைய பாசுரத்தில், நந்தகோபனிடமுள்ள கறவைச் செல்வ சிறப்பை அறிவோம்.

“ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப”…. வைக்கும் பாத்திரம் எல்லாம் பால் பெருக்கி, எதிர்த்துப் பொங்கி வழிகிற அளவில்., நந்தகோபனின் வள்ளல் பெரும் பசுக்கள் பால் சொரிகின்றன. மீண்டும் மீண்டும் வேகமாக பாத்திங்கள் வைத்துப் பால் பிடிக்க ஆயர்களால் முடியாதது தான் குறையே அன்றி பால் கொடுக்கும் பசுக்களின் வள்ளற்தன்மைக்கு குறைவே இல்லை.

கிருஷ்ண பக்தியின் பெருமை இதன் மூலம் நமக்கு விளக்கப் படுகிறது. நந்தகோபன் பசுக்களும் கண்ணனைப் போலவே அருள்கின்றனவாம். கண்ணனின் கருணைக்கு ஆசைப் படாதவர்களின் குற்றமே குற்றம்; அல்லாது பக்தர்களுக்கு, கண்ணன்அருள் பாலிப்பதில் குறையேதும் இல்லை என்பதாம். கருணைக்கடல் நம் கண்ணன்.

நப்பின்னை, ஆய்ச்சியர் சேர்ந்து கண்ணனை எழுப்புதல்.

ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளற்பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்!
ஊற்றம் உடையாய்., பெரியாய், உலகினில்

தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலி தொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் அடிபணியுமா போலே,
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.

விளக்கம்:

கண்ணா! தூக்கிப் பிடித்த பாத்திரங்களில் எல்லாம் கறந்த பால் நிறைந்து, எதிர்த்துப் பொங்கி வழியும் வண்ணம், இடைவிடாது பால் சொரியும் வள்ளல் பெரும்பசுக்களையுடையச் செல்வச் சீமான், நந்தகோபனின் அருமை மகனே! எழுந்திருப்பாயாக! எங்கள் மேல் அதிகப் பிரியம் உடையவனே, வேதங்களனைத்துக்கும் எட்டாத நுண்ணியனே, பெரியோனே!

“தோற்றமாய் நின்ற சுடரே”…. பிறப்பு இறப்பு இல்லாத ஆதிமூலத்தின் அம்சம் கண்ணன். உலகத்தார் படும் துயர் தீர்க்க பல அவதாரங்களில் பூமியில் வந்துதித்தவன். அவ்வாறு தோன்றிய அவதாரங்களில் எல்லாம் பட்டை தீட்டிய மாணிக்கமாய் ஒளி உமிழ்ந்த சுடரே! கண்ணா! எம் பொருட்டு எழுந்திருப்பாயாக.

பகைவர்கள், உன் வலிமை கண்டு தங்கள் வலிமையனைத்தையும் தொலைத்து, உன்னிடம் தோற்று, மிகவும் பணிந்து உன் வாசற் படியில் வரிசையாய் அணி செய்வதைப் போல, நாங்களும் உன் நல்ல குணங்களுக்காக உன்னிடம் தோற்று, உன்னைப் புகழ்ந்து பல்லாண்டு பாடி, உன் திருவடி பணிகின்றோம். கண்ண பிரானே! எங்களை ஆட்கொண்டருளுமென்று ஆய்ச்சியர் நப்பின்னையோடு சேர்ந்து தொழுது நின்றனர்.

“போற்றி யாம் வந்தோம்” ……உனக்குக் கைங்கரியம் செய்து, மங்களாசாசனம் செய்த ஆழ்வார்கள், வாழ்நாள் முழுதும் தங்களைப் பேணாது உன்னையே போற்றிப் பேணிணர். அது போலவே, இடைக்குலத்தில் பிறந்தும், எங்களைச் சற்றும் பேண நினையாது, உன்னையே போற்றினோம், என்பதாம்.

நண்பர்களே! இறைபக்தியின் மகத்துவம், மிகச் சிறப்பான இக வாழ்க்கைக்கு உத்திரவாதமாய் இருப்பதே. துணிந்து பக்தி செய்வோம். தூயவன் அருள் பெறுவோம். வாழ்க.

“ஆண்டாள் திருவடிகளே சரணம்”

“ஓம்! நமோ நாராயணா!!”

You may also like