ஆயர்பாடிப் பெண்கள் மற்ற பெண்களை நோன்பு நோற்க அழைத்தல்.
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர்! போதுமினோ., நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்!
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே, நமக்கே பறை தருவான்,
பாரோரர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.
நேர்இழையிர் – அழகிய அணிகளை உடையவர்கள்.
மதி நிறைந்த நன்னாளால் – பௌர்ணமி; சுக்கில பட்சநாள்.
ஏர் ஆர்ந்த கண்ணி – அழகிய பெரிய கண்களையுடைய
விளக்கம்:
அழகிய அணிகள் அணிந்துள்ள ஆயர்பாடிச் சிறுமிகளே! மகா விஷ்ணுவின் அவதார கண்ணனே நாம் அனைவரும் இந்த பாவை நோன்பை சிறப்பாக நிறைவேற்றும் பொருட்டு, நமக்குத் தேவையானவற்றை எல்லாம் தரச் சித்தமாய் இருக்கின்றான். நம் ஆயர்பாடிக்கு நன்மை உண்டாக இந்த மார்கழி மாதத்தில் முழுநிலவாய் பௌர்ணமி நன்னாள் வாய்த்திருக்கிறது. நோன்பில் விருப்பம் உள்ளவர்கள் அனைவரும் நீராட வாருங்கள் என்று மிகுந்த வாஞ்சையோடுஅழைக்கிறார்கள்.
நன்னாளால் என்றதால், பாவை நோன்பு நோற்கும் காலம், கண்ணனின் பூரண அருள் பெறத்தக்கது மார்கழி மாதம் என்றும்., அம்மாதத்தின் சுக்கிலபட்சம்., முழுநிலவு நாளான பௌர்ணமியே பொருத்தமாய் வாய்த்திருக்கிறது என்கிறார்கள். இதுகாறும் கண்ணனைப் பிரிந்திருந்த தாபம் தீரவும், நீராடி அவனுடைய அருளன்பை முழுதும் பெறவும் எல்லோரும் ஆசையோடு நீராட வாருங்கள் என்ற அழைப்பு., போதுவீர்; போதுமினோ என்றதால் விளங்கும்.
பால், நெய் ஆகிய சீர்மல்கும் ஆயர் பாடி, கண்ணனும் அங்கு வளர்வதால் இன்னும் கூடுதலான செழிப்புடனே விளங்குமல்லவா? எனவே, அங்குள்ள சிறுமியர் ஸ்ரீகிருஷ்ண கடாட்சத்திற்கும் உரியவர் அல்லவா.
மிகவும் சாதுவான நந்தகோபன் கூட, தன் வளர்ப்புப் பிள்ளையான கண்ணனுக்கு ஏதேனும் ஆபத்து வருமோ என்று எண்ணி கூரிய வேல் தாங்கி கொடுந்தொழில் புரியத் தயாராகிறான். அவ்வளவு பாசம் கண்ணன் மேல். தாய் யசோதைக்கோ, அழகிய கண்ணனையே விடாமல் பார்த்துக் கொண்டே இருப்பதால், கண்கள் மேலும் விரிந்து அழகாய் தோற்றம் தருகிறதாம்.
கண்ணன் மேல் கொண்ட எல்லா ஆசைகளும் தணியும் என்பதால், கார்மேனி., குளிர்ந்த மேனி என்றும், காதலில் குளிர்ந்து நோக்கும் கண்களைச் செங்கண் என்றாள். பிரகாசமான சூரிய ஒளியும், குளிர்விக்கும் நிலவொளியும் ஒருங்கே கொண்ட திருமுகம், கதிர் மதியம் போல் இருக்கிறதாம். பார் என்ற உலகத்தின் சிறுபகுதி ஆயர்பாடி. அங்கே கண்ணனுடன் சேரக்கூடாது என்ற முதியவர்களே, கண்ணனை அழைத்து புகழ்ந்து பாடி அவனே நோன்பிற்கு பறை தருவான் என்று சொல்லி அங்குள்ள பெண்களை நோன்பு நோற்க சொல்கிறார்கள்.
“ஆண்டாள் திருவடிகளே சரணம்”
“ஓம்! நமோ நாராயணா!!”
2 comments
Test comment
Test comment for pending approval
Comments are closed.