பாசுரம் – 9

by Parimelazhagan P
126 views
பாசுரம் – 9

கண்ணன் வருகிறபோது வரட்டும். அதற்காக தூக்கத்தை விட முடியாது என பிடிவாதமாய் படுத்துறங்கும் ஒருத்தியை, மச்சினி முறையோடு அழைத்து அதட்டியும் கிண்டல் செய்தும் அவள் அம்மாவையும் துணைக்கழைத்துத் துயில் எழுப்பும் பாசுரம்.

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியத்
தூபங்கமழத் துயிலணை மேல் கண் வளரும்

மாமன் மகளே மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள் தான்

ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ
ஏமப்பெருந்துயில் மந்திரப் பட்டாளோ

மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.

விளக்கம்:

ஆயர்பாடி பெண்கள் தங்கள் மாமன் முறை உள்ளவர் மாளிகை சென்று, தங்கள் மச்சினியை நோக்கி, அடியே! நாங்கள் எல்லோரும் விடியுமுன்னே எழுந்து வீடுவீடாகச் சென்று அலைந்து திரிந்து எல்லோரையும் எழுப்பி உடன் அழைத்து வந்து கொண்டிருக்கிறோம். ஆனால் நீயோ, செல்வச்செழிப்பில், தூய்மையான ரத்தினங்கள் இழைத்துச் செய்த மாளிகையில், சுற்றிலும் பிரகாசமான விளக்குகள் பளபளக்க, நறுமணப் பொருட்களாம் அகில், சந்தண வாசனைப் புகை கமகமக்க, சுகமான மெல்லிய படுக்கையிலே கண்ணனைப் பற்றியோ, நோன்பைப் பற்றியோ எந்தக் கவலையும் இல்லாமல் தூங்குகிறாயே… இது நியாயமா? உடனே எழுந்து உன் மணிக்கதவைத் திறந்து வெளியில் வா.. என்கிறார்கள்.

இவ்வளவு சொல்லியும் எழ வில்லையே என்று அவளுடைய தாயை அழைத்து, அன்புள்ள மாமி! நாங்கள் இவ்வளவு கூவியும் உங்கள் மகள் முழிக்கவில்லையே; பதில் கூடச் சொல்லவில்லையே; அவள் என்ன ஊமையா, செவிடா அல்லது அளவுக்கு மீறி சோர்ந்து போய் விட்டாளோ? இப்பிடி எழ முடியாதபடி மாயமந்திரத்தால் கட்டுண்டு விட்டாளோ? நீங்களாவது எழுப்புங்கள் என்கிறார்கள். அம்மாவிடமே பெண்ணைக் கிண்டல் செய்கிறார்கள். உடனே மாமி, அவளை எழுப்ப கண்ணபகவானின் திருநாமங்களை உரக்கச் சொல்லுங்கள் என்றாள்.

ஆயர்பாடி மக்கள் வியக்கும் வண்ணம் பல அதிசய அற்புதங்கள் நிகழ்த்தியதால் கண்ணன், “மாமாயன்”.

செல்வம் குவிந்த மகாலட்சுமியின், திருமகளின் நாயகன், “மாதவன்”, மாதுவுக்கு உரியன்.

பரமபதமான ஸ்ரீவைகுண்டத்தின் அதிபதி, எம்பெருமாள், “ஸ்ரீவைகுந்தன்”. என்று திருமாலின் பலவித நாமங்களையும் சொல்லிவிட்டோம், இனியாவது உம் மகளை எழுப்புங்கள் என்று தோழிகள் மாமியிடம் கேட்கிறார்கள்.

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி., ஆண்டாளின் கவிநயம் மிக்கப் பாசுரங்களில் இதுவும் ஒன்று.

தூமணி மாடம் …என்று பெருமாளின் குற்றமற்ற., தூய திருமேனியையும், சுற்றும் விளக்கெரிய …என்று பெருமாளின் திருமேனி பிரகாசிக்கும் ஞானத்தையும் குறிக்கும் அழகு மெச்சத்தக்கது.

நண்பர்களே! தூக்கத்தினின்றும் எழுப்புவது என்பது எவ்வளவு சிரமம் பாருங்கள். நாமும் தூங்குவது போல் பாசாங்கு செய்யாமல், பகவான் கடைக்கண் பார்வை நம்மேல் விழ, விரைவாய் விழிப்போமா!?

“ஆண்டாள் திருவடிகளே சரணம்”

“ஓம்! நமோ நாராயணா!!”

Image courtesy (with Thanks): Sourced via Google from Trident Talkies site.

You may also like