பாசுரம் – 7

by Parimelazhagan P
77 views
பாசுரம் – 7

பள்ளியெழுச்சி தொடர்கிறது. ஆயர்குலப் பெண்கள் மாளிகைதோறும் சென்று தோழியரை எழுப்பித் திரட்டிக் கொண்டு வரும் வேளையில், ஆயர்குலக் கொழுந்து, ஸ்ரீமந் நாராயணன்., கண்ணனையே எண்ணி மெய்மறந்து கிடப்பதைப் போல் தூங்குபவளை விடியலின் அடையாளம் சொல்லி எழுப்பும் காட்சி இன்றைய பாசுரம்.

எல்லோரும் அன்பான தோழிமார்கள் அல்லவா! முதலில், ‘பேய் பெண்ணே’ என்று விசனத்தைக் காட்டியும், நடுவில்., ‘நாயகப் பெண் பிள்ளாய்’ என்று அவளை தலைவி ஆக்கியும், முடிவில், ‘தேசம் உடையாய்’ என்று கண்ணனையே எந்நேரமும் நினைத்திருப்பதால், அவள் திருமுகம் மிக்க ஒளிபொருந்தி பிரகாசமாய் இருப்பதாகவும் சொல்லி அன்புடன் எழுப்புவது இப்பாசுரச் சிறப்பு.

கீசு கீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய் பெண்ணே!

காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்

ஓசை படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி

கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
தேசமுடையாய்! திறவேலோர் எம்பாவாய்.

விளக்கம்:

மதி கெட்ட பெண்ணே, விடியல் வந்து விட்டது. வீதி தோறும் கீச்சு கீச்சு என்று வலியன் குருவிகள் தங்கள் துணையுடன் காலைக்கலவி கலைந்து கூவி பேசிக்கொள்ளும் ஒலியை நீ கேள்.

செல்வச்செழிப்பில் வாழும் ஆயர்பாடி ஆய்ச்சியர்கள், அச்சுத் தாலியும் ஆமைத்தாலியும் கலந்த பெரிய காசுமாலைகள் கலகலவென ஓசை எழுப்ப, மத்தினால் இழுத்து தயிர்கடையும் போது எழும் ஓசை உன் காதில் விழ வில்லையா? அவர்கள் கூந்தலில் சூடிய நறுமண மலர்களின் வாசனை உன்னை அடைய வில்லையோ?

எங்களுக்கெல்லாம் நாயகமாய், தலைவியாய் இருப்பவளே! நாங்கள் உன்னருகே நின்று நாராயண மூர்த்தியையும் அவரின் அவதாரமான கேசவன் கிருஷ்ணனை பற்றிப் பாடும் போதும் நீ கேட்டுக்கொண்டே தூங்குவதைப் போல் கிடக்கலாமோ? கண்ணன் பக்தியால் கூடிய தேஜஸுடன்., பிரகாசமாய் ஜொலிப்பவளே! எழுந்து வந்து கதவைத் திற என்று பாடுகிறார்கள்.

தேசமுடையாய் திற, என்றதால் கண்ணன் பக்தி அநுபவத்தால் பலன் பெற்று உண்டான ஞானத்தைப் பிறரும் அறிய வேண்டி வெளியே வா, எனப் புரியவும்.

காசும் பிறப்பும் கலகலப்ப; என்றதும், மகா மந்திரங்களும் சுலோகங்களும் ஒன்றோடொன்று சேர்ந்து ஒலிக்கும் சுகானுபவம் என்க.

நண்பர்களே! நாமும் அஞ்ஞானத்திலிருந்து விழித்து பகவான் பக்தி யோகம் புரிவோம்.

“ஆண்டாள் திருவடிகளே சரணம்”

“ஓம்! நமோ நாராயணா!!”

Image courtesy (with Thanks): Sourced via Google from VedicFolks site.

You may also like