பாசுரம் – 13

by Parimelazhagan P
101 views
பாசுரம் – 13

இறைவன் படைத்த அழகுகளில் சிறந்தது, அவன் படைத்த பெண்கள். அதிலும் அவ்வழகை., பெண்ணுக்குப் பெண்ணே ரசித்து பாராட்டுதல் கூடுதல் அழகு.

ஆண்டாள் நாச்சியார்., திருப்பாவையில் பெண்களின் அழகை ரசித்து சிலாகிக்கும் இடங்கள் தாராளம். இந்தப் பாசுரத்தில் “கண்ணழகு” கொண்ட ஆயர் மகளை எழுப்புகின்றனர்.

“போதரிக் கண்ணினாய்” என்று பாராட்டுகின்றார்; போது + அரி + கண்ணினாய். இரண்டு விளக்கம் உண்டு.

  1. தாமரைப் பூவினுள் கருவண்டு பதிந்து கிடப்பதைப் போன்ற கண்களை உடையவள். (அரி – வண்டு)
  2. பூவின் அழகைக் கவர்ந்து கொள்ளை கொண்ட “கண்ணழகு” பெண் என்றும் பொருள். (அரித்தல்-கவர்தல்). தாமரையும் கருங்குவளையும்.

சபாஷ்! சொல்லத் தோன்றுகிறதல்லவா! ஆண்களே, இனியாகிலும் பெண்களை குறிப்பாய் மனைவியை பாராட்டுங்கள். அவரழகை ரசித்து அவர்களிடம் பகிர்ந்து பாருங்கள். இல்லம் சொர்க்கமாகும். சரி, வாருங்கள். பாசுர அழகை ரசிப்போம்.

கோபியரில் ஒருத்தி., என் கண் அழகில் மயங்கி கண்ணன் தானே வந்து என்னைச் சேர்வான் என்று இறுமாந்து கிடக்கும் பெண்ணை துயிலுணர்த்தும் காட்சி.

கண்ணழகியை கண்ணன் பெருமை பாடி எழுப்புதல்.

புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்,
பிள்ளைகள் எல்லாரும் பாவை களம்புக்கார்,
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று

புள்ளும் சிலம்பின காண்; போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளி கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.

விளக்கம்:

நீ பெரிய அழகி என்றாலும், நம் கண்ணனின் வீரபராக்கிரமங்களைச் சொல்கிறோம், கேள்.

பறவை உருவத்தில் வந்து துன்புறுத்திய பகாசுரன் வாயை இரண்டாய் பிளந்து அழித்தவன். தீய செயல் புரிந்த பொல்லா அரக்கன், ராவணனுடைய பத்து தலைகளையும் கிள்ளி எறிந்து, அவன் வம்சத்தையே நாசம் செய்த சக்கரவர்த்தி திருமகன் ஸ்ரீராமனுடைய வீர, வெற்றிப் புகழைப் பாடிக்கொண்டே சிறுமியர் உட்பட அனைத்து ஆயர்குலப் பெண்களும் நீராடும் துறை போய் சேர்ந்தாயிற்று.

வெள்ளி என்னும் சுக்கிரன் உதயமாகி; வியாழன் என்னும் பிரகஸ்பதி உறங்கி விட்டார் என்று பொழுது முற்றிலும் புலர்ந்து விட்டதை உணர்த்துகின்றனர்.

இப்பாசுரத்திலும், புள்ளும் சிலம்பின காண் என்றது, நன்றாய் விடிந்து விட்டதால் பறவைகள் சத்தமிட்டுக் கொண்டே வெளியே பறந்து இரை தேட செல்லுகின்றன என்றனர்.

இதையெல்லாம் கேட்ட பின்னும், அழகிய தாமரையையும், மானையும் போல் “கண்ணழகு” வாய்த்தவளே! எங்களில் சிறந்த அழகியே! நீ இந்த அருமையான நோன்பு பிடிக்கும் நாளில், எங்களோடு சேர்ந்து நீராடும் துறை சேர்ந்து உடம்பு முழுதும் நன்றாய் குளிர்ந்து போகும் வரை நீராடுவதை விட்டு., இப்பிடி உறங்குகிறாயே என்கின்றனர். இப்பிடி கண்ணனைத் தனியே கிடந்து அநுபவிக்கும் கள்ளத்தனத்தை விட்டு எங்களோடு வா; நாம் அனைவரும் ஒன்றாய் கண்ணனை பாடி அநுபவிப்போம் என்று எழுப்புகின்றனர்.

“கிள்ளிக் களைந்தான்” ஸ்ரீராமன் அநாயாசமான வீரத்தினால், மிக எளிதில் பத்து தலைகளையும் கொய்தான்; எப்படி விளைநிலத்தில் முளைத்த களையை வேரோடு பிடிங்கி எறிவோமோ, அது போல் அரக்கர் குலமும் வேரோடு அழிக்கப்பட்டது என்று பொருள் கொள்க.

ஸ்ரீஆண்டாள் வாழ்ந்த காலத்தில், வெள்ளி எழுந்து வந்தபோது வியாழன் அஸ்தமனமும் நிகழ்ந்தது.

நண்பர்களே! திருப்பாவை., அந்நாளின் வாழ்வியல் சித்திரத்தை கண் முன்னே நிறுத்தும் அற்புத அநுபவத்தை தொடர்ந்து அநுபவிப்போம். ஆண்டாள் நாச்சியார் துணையிருப்பார்.

“ஆண்டாள் திருவடிகளே சரணம்”

“ஓம்! நமோ நாராயணா!!”

Image courtesy (with Thanks): Sourced via Google from dhinasari site.

You may also like