பாசுரம் – 12

by Parimelazhagan P
107 views
பாசுரம் – 12

கண்ணனின் உற்ற நண்பன் “நற்செல்வன்” மாளிகை அடைந்து அவன் தங்கையை எழுப்புதல் இன்றைய பாசுரம். இந்த நற்செல்வன் ஒரு இமைப்பொழுது கூட கண்ணனைப் பிரியாமல் கூடித் திரிவதால், வேளாவேளைக்கு சரியாக இவன் வீட்டு மாடுகளிடம் பால் கறப்பதில்லை. அதனால் மடி கட்டிய மாடுகள் கன்றை நினைத்து கருணை பொங்க, பிரவாகமாய் தொழுவில் பால் சொரிகின்றனவாம். அப்பிடி சொரிந்த பால் நற்செல்வன் இல்லம் நனைத்து சேறாக்குகின்றனவாம். “பால் சோறு” தெரியும்; இங்கே “பால் சேறு”. அவ்வளவு செழிப்பான ஆயர்பாடி என்கிறார் ஆண்டாள் நாச்சியார்.

“நற்செல்வன்” என்றது, கண்ணனின் நித்ய சேவைக்காக நிலைபெற்றிருக்கும், அவனிடமே நிலைத்திருக்கும் செல்வம். அச்செல்வம் எளிதில் கரைந்து நீங்கும் செல்வமன்று. கண்ணன் வசிக்கும் ஆயர்பாடி செல்வச்செழிப்பில் இருப்பதை நன்கு நமக்கு விளக்கவே., நற்செல்வன் என்றார். நற்செல்வன் தங்கையை எழுப்புதல்.

கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி
நினைத்து முலைவழியே நின்று பால் சோர

நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச்

சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும் நீ வாய் திறவாய்

இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.

விளக்கம்:

இளங்கன்றுகள் சூழ்ந்திருக்கும் எருமைகள், பால் கறப்பவர்கள் இல்லாததால் மடிகட்டி குமுறுகின்றன. தங்கள் கன்றுகளை கருணையோடு நினைத்த மாத்திரத்தில் மடுக்களின்று பால் ஊற்றாய் சொரிந்து இல்லத்தை சேறும் சகதியுமாக்குகிறது. இவ்வாறு ஆயர்பாடி செல்வத்திற்கு சாட்சியாய் விளங்கும் இல்லத்தான், நற்செல்வன், தங்கையே!

மார்கழிப்பனி எங்கள் தலைமீது விழ, நாங்கள் உன் தலைவாசல் வந்து நின்று, தெற்கே இலங்கை அரசன் ராவணனை, தன் பிராட்டி சீதையை அபகரித்த குற்றத்திற்காக எழுந்த பெரும் கோபத்தினாலும், தர்மத்தை நிலை நிறுத்தவும் கொன்று அழித்த, சக்கரவர்த்தித் திருமகன் ஸ்ரீராமனின் புகழ் பாடுகின்றோம். நம் போன்றவர்கள் அவனை நினைத்தவுடனே., மனத்துக்கு இனியனான ராமபிரான் புகழ் கேட்டும் நீ வாய் திறவாமல் இருக்கிறாயே! விந்தையாய் இருக்கிறது உன் செயல் என்றனர்.

இன்னும் கேளடி! ஆயர்பாடி மக்கள் அனைவரும் எழுந்து விட்டனர். ஆனால் நீ மட்டும் இன்னும் ஓயாது உறங்கலாமா? அனைத்து இல்லத்தாரும் அறிந்தும் உனக்கு வெட்கமில்லையா, உடனே எழுந்து நீராட வா என்றழைக்கின்றனர்.

கோபியர் தலையிலே பனி வெள்ளமிட, வீடெல்லாம் பால் வெள்ளமிட, அனைவர் உள்ளத்திலேயும் கண்ணன் மேலுள்ள காதல் வெள்ளமிட…. வெள்ளத்திலிருந்து தப்பிக்க ஒரு கட்டையைப் பற்றுவார் போன்று, இவளுடைய வாசற்படியின் மேற்கட்டையைப் பற்றி அவளை எழுப்பும் ஓர் சித்திரம் மனதில் தெரிகிறதா!

மொத்த ஆயர்பாடி பெண்களெல்லாம் கூடி இவள் மாளிகை வந்தும் இவள் வாய் திறக்கவும் மறுத்து உறங்குவது., பெரிய செல்வந்தர் வீட்டுப் பெண் நான் என்ற மதிப்பை பெற விரும்பியோ! அப்பிடி ஆயினும், நீ விரும்பும் மதிப்பை உனக்குத் தந்தோம்; இனியாகிலும் எழுந்து எம்மோடு வா என்றும் பொருள்.

நண்பர்களே! கண்ணன் பக்திக்கு நம்மை தயார் செய்ய பலபடிகள் உள்ளதே. வாருங்கள்! விரைந்து நம்மை தயார் செய்து இறை பக்தியில் வாழ்வை அநுபவிப்போம்.

“ஆண்டாள் திருவடிகளே சரணம்”

“ஓம்! நமோ நாராயணா!!”

Image courtesy (with Thanks): Sourced via Google from Dinamalar site.

You may also like