பாசுரம் – 10

by Parimelazhagan P
67 views
பாசுரம் – 10

இன்று கண்ணனின் திருமாளிகைக்குப் பக்கத்து மாளிகையில் உள்ள ஒருத்தியை துயில் எழுப்பும் காட்சி. பக்கத்து வீட்டுக்காரி என்பதினால் கண்ணனின் சுகாநுபவத்தை சற்று கூடுதலாக, சொர்க்கத்தில் மூழ்கி அநுபவிக்கும் பொருட்டு இன்னும் ஆழ்ந்த நித்திரை கொண்டிருக்கிறாள். கதவை உள்ளே தாழிட்டுத் தூங்கினாலும், கண்ணன் திருநாமங்கள், அவன் செய்யும் மாயங்கள், விடியலின் பல அடையாளங்கள் ஆகியன சொல்லி உன்னை கூவி அழைக்கும் எங்களுக்கு மறுமொழி சொல்ல வாயையும் தாழிட்டுக் கொண்டாயோ என்று சிரிப்புடன் கேட்கிறார்கள்.

“அருங்கலமே” என்று அழைக்கிறார்கள். பெரிய அழகெல்லாம் பொருந்திய நவரத்தின மாலையின் நடுவிலே, இன்னும் அழகான ரத்தினத்தை பதித்து அழகு பார்ப்பதைப் போல், இந்தத் தோழி எழுந்து வந்து., இவர்கள் கூட்டத்தினில் புகுந்து நடுநாயகமாக ஜொலிக்க வேண்டும் என்று மற்ற தோழிமார்கள் விரும்புகிறார்கள்.

“கண்ணன் நினைவே சொர்க்கம் என்றிருப்பவளை எழுப்புதல்”

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?

நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டொருநாள்

கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகரணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?

ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.

விளக்கம்:

ஸ்ரீ கிருஷ்ணன் அநுபவத்திற்கு நோன்பு நோற்று, சுவர்க்கத்திலே மூழ்கி பரவசமாயிருக்கும் அம்மன் ஆனவளே! எங்களுக்குத் தலைவியே! நீ வாசல் கதவைத் திறக்காவிட்டாலும் எங்களுக்கு மறுமொழியாவது உன் வாய் திறந்து சொல்லக்கூடாதா? அப்பிடியா கண்ணன் அநுபவிப்பில் மயங்கிக் கிடக்கிறாய், சொல் என்றனர்.

நறுமணம் வீசும் துளசி மாலைகளை விரும்பி அணியும், எங்கும் நிறைந்திருக்கும், திருமாலாகிய நாராயணன், நாமெல்லாம் நம் நோன்பு குறித்துப் போற்றிப் பாட உள்ளம் குளிர்ந்து நோன்புக்குரிய பறை தரும் புண்ணிய மூர்த்தி ஆவான்.

இதை நன்கறிந்தும், முன்னொரு நாள் ராமபிரானால் கொல்லப்பட்ட கும்பகர்ணன், தூக்கத்தில் உன்னிடம் தோற்று., உன்னிடமே அந்தப் பெருந்துயிலைத் தந்து மறைந்தானோ?

மிகுந்த சோம்பலைச் சொத்தாய் பாதுகாப்பவளே, கிடைத்தற்கரிய நவரத்தினமாலை போல் எங்களுக்கு ஆபரணமாய் வாய்த்திருப்பவளே! எங்களுக்குத் தலைவியே, தூக்கம் நன்றாகத் தெளிந்து, மலர்ந்த முகத்துடன் வந்து கதவைத் திறந்து எங்களோடு வருவாயாக என அழைக்கின்றனர்.

“நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற” என்றது…. பகவானே கதி என்று பற்றியிருக்கும் பக்தரைக் குறிக்கிறது. அவர்கள் பகவான் அநுபவத்திலேயே ஆழ்ந்து கிடப்பது தான், ‘பெருந்துயில்’. அவர்களை பகவத்ஸம்பந்த கைங்கரியம் செய்ய எழுப்புவதும் ஒரு நோக்கம்.

அக்காலத்தில் போரில் தோற்றவர் பொருளை கைப்பற்றுவது மரபு. அதுபோல், கும்பகர்ணன் ராமபிரானிடம் தோற்று அவன் சொத்தான கும்பகர்ண தூக்கத்தை நீ கைப்பற்றிக் கொண்டாயோ? என்றதும் பாசுரச் சிறப்பு.

நண்பர்களே! நாம் அறிய வேண்டிய உண்மைகள் இவ்வுலகில், இவ்வாழ்வில் ஏராளம். அதில் அதிமுக்கியம், “இறை உணர்வு; இறை பக்தி”. பிறவிக் கடன் தெரிவோம். பகவானிடம் சரணடைவோம். யாவும் இறைவனே!!

“ஆண்டாள் திருவடிகளே சரணம்”

“ஓம்! நமோ நாராயணா!!”

You may also like