பாசுரம் – 15

by Parimelazhagan P
83 views
பாசுரம் – 15

இன்று உரையாடல் பாணியில் எழுப்பும் காட்சி. ஆயர்பாடி பெண்கள் அனைவரும் சேர்ந்து வந்து தன்னை எழுப்புகிறார்களா பார்ப்போம், என்றொருத்தி முழிப்பு வந்த பின்பும் உறக்க பாவனையில் கிடக்கிறாள்.

நேற்றைய பாசுரம், “பங்கயக் கண்ணானைப் பாடேலோர்” என்று பக்கத்து வீட்டுக்காரியை எழுப்புவதைக் கேட்ட இவள், அந்த பாசுரச் சொல்லினிமையில் மனதைப் பறி கொடுத்து மெல்லிய குரலில் முணுமுணுப்பாய் பாடிக் கொண்டு படுத்திருக்கிறாள். அச்சமயம் தோழிமார் எல்லாரும் வந்து, அடியே! இளங்கிளியே!! என சத்தமிடவும்., பாசுரம் பாடுவதற்கு இடையூறாகக் கருதி, ‘சில்’ லென்று அழைக்காதீர்கள்; நானே எழுந்து வருகிறேன் என்று சொல்லி உரையாடலைத் துவக்கி வைக்கிறாள். இதுவே இன்றைய சொல் வழக்கிலும், சில்வண்டா வந்து காதுக்குள்ள இரையாதே; என்றிருக்கிறது.

இப்பாசுரத்தில், ‘நானே தான் ஆயிடுக’ என்று ஆண்டாள் நாச்சியார் பாடியது… மற்றவர்களின் குற்றத்தையும் தன் குற்றமாகவே ஏற்று, உள்ளிருக்கும் பெண் மற்றவரை சமாதானம் செய்கிறாள். இது ஸ்ரீ வைஷ்ணவ லட்சணம் என்றும் வியாக்யானம் இருக்கிறது. பிறகு, தோழிகளிடம்., இந்த குற்றவாளி இனி என்ன செய்யனும் என்று கேட்டு பணிகிறாள். பாசுரம் பார்ப்போம்.

எல்லே இளங்கிளியே; இன்னும் உறங்குதியோ?
சில்லென்றழையேன்மின், நங்கைமீர்! போதர்கின்றேன்
வல்லை உன் கட்டுரைகள்! பண்டே உன் வாயறிதும்!
வல்லீர்கள் நீங்களே, நானே தான் ஆயிடுக

ஒல்லை நீ போதாய், உனக்கென்ன வேறுடையை?
எல்லாரும் போந்தாரோ? போந்தார், போந்தெண்ணிக்கொள்.
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.

விளக்கம்:

வந்தவர்கள்: ஏண்டி! இளைய கிளி போல் இனிப்பாய் பேசுபவளே; இன்னுமா உறங்குகிறாய்?

உள்ளிருப்பவள்: சில்லென்று காதினுள் இரைந்து அழைக்க வேண்டாம்; இதோ நானே வருகிறேன்.

வந்தவர்கள்: ஆகா! உன்னைத் தெரியாதா? நீ கட்டுக்கதை சொல்வதில் வல்லவள் ஆயிற்றே! பெரிய ‘வாயாடி’ என்பதையும் நாங்கள் நன்றாய் அறிவோமே!

உள்ளிருப்பவள்: நானல்ல; நீங்கள் தான் சாமர்த்தியசாலிகள்! அப்படியே நீங்கள் சொல்வது போல் நான் தான் வல்லவள் என்றாலும் இருந்துவிட்டுப் போகிறேன். நமக்குள் சண்டை வேண்டாம்.

வந்தவர்கள்: நீ மட்டும் அப்படியென்ன உசத்தி, இன்னும் எழுந்து வராமல்? எங்களைவிட என்ன அதிசயம் வைத்திருக்கிறாய்?

உள்ளிருப்பவள்: (ஓரளவு சமாதானமாக ) என்னை எழுப்ப தோழிமார் எல்லோரும் வந்தாயிற்றா?

வந்தவர்கள்: (முடிவாக) எல்லோரும் வந்து விட்டார்கள். உனக்கு ஏதேனும் சந்தேகம் இருக்குமானால், நீயே வந்து எண்ணிப் பார்த்து தெரிந்து கொள். இனிமேலும் நாங்கள் உன் பொருட்டுத் தாமதிக்க முடியாது; புரிந்து கொள்.

நம் கண்ணனைப் பாடி மகிழும் நேரம் கூடி விட்டது. “குவலயாபீடம்” எனும் வலிமைமிக்க யானையைக் கொன்றவனும், எதிரிகளை நேருக்குநேர் நின்று போரிட்டு அழிப்பதில் வல்லவனும், நம் ஆயர்பாடியில் பல அதிசய அற்புதங்களை செய்த மாயனும் ஆகிய கண்ணனை நாம் அனைவரும் பக்தி பரவசத்தோடு பாடி மகிழ., விரைவாய் எழுந்து வருவாயாக! என்று அழைக்கின்றனர்.

பாகவதம் செய்வோரைக் காண ஆசை கொண்டுள்ளோரை எழுப்பி உணர்த்துவது உட்பொருள். திருமங்கையாழ்வாரை உணர்த்தும் பாசுரம் இது.

நண்பர்களே! பரதனைப் போல் பிறர் குற்றத்தையும் தன் குற்றமாக ஏற்று வாழ்க்கையைச் செம்மைப் படுத்துவோர் இன்றும் உண்டு. அவர்களே இவ்வுலகம் சுபிட்சமாய் விளங்கக் காரணமானவர்கள். இதையே, புறநானூறு பாடல் “உண்டால் அம்ம இவ்வுலகம்…” உணர்த்துகிறது. பிறர்க்கும் சேர்த்து வாழ்வோம்; இப்பிறவியின் பொருள் உணர்வோம்.

“ஆண்டாள் திருவடிகளே சரணம்”

“ஓம்! நமோ நாராயணா!!”

Image courtesy (with Thanks): Sourced via Google from VedicFolks site.

You may also like