பாசுரம் – 11

by Parimelazhagan P
134 views
பாசுரம் – 11

அனாதி காலந்தொட்டு பெண்கள் அலாதியானவர்கள். எவருக்கும் எளிதில் வசப்பட்டு விட மாட்டார்கள். அதிலும் அழகும், செல்வமும், மற்றெல்லா வகையிலும் மேன்மை பெற்றவர்களானால், அவர்களிடம் காரியம் சாதிக்க உருட்டல், மிரட்டல் உதவாது. “தாஜா” பண்ணித்தான் முயற்சி செய்யனும். அப்படிப்பட்ட ஒருத்தியை எழுப்புகிறது இன்றைய பாசுரம்.

யார் அவள்? ஆயர்பாடியில் கண்ணனும் அவளும் ஒரே வயதொத்த பருவத்தினள். செல்வம் கொட்டிக் கிடக்கும் “செல்வப் பெண்டாட்டி”. அதனால் சற்று அழிச்சாட்டியம் செய்கிறாள். கண்ணனைப் பெற நான் ஏன் நோன்பு நோற்க வேண்டும்? வேண்டுமானால் கண்ணன் நோன்பிருந்து என்னை அடைந்து கொள்ளட்டும் என்று பஞ்சணையில் சுகமாய் உறங்குகிறாள். தோழிகளும் விடாது, அவள் மாளிகை முற்றம் அடைந்து திருமாலின் புகழைத் தொடர்ந்து பாடி, தோழியை எழுந்து வரப் பணிக்கிறார்கள்.

“அனைத்திலும் சிறந்தவளை அன்பாய் எழுப்புதல்”

கற்றுக் கறவை கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்

குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே!
புறறரவ அல்குல் புனமயிலே! போதராய்

சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட

சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டிநீ
எற்றுக்குறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.

விளக்கம்:

“பொற்கொடியே” “புனமயிலே” “செல்வப் பெண்டாட்டி” என்றெல்லாம் இவள் ஒருத்தியை ஆண்டாள் நாச்சியார் வருணிப்பது காரணமாகத்தான். ஆயர்பாடிக்கு, கண்ணன் தான் எல்லாம். ஆயர்களின் குலமணி, அழகின் நிலையம், செல்வத்துள் செல்வம், உத்தமன். அதைப் போலவே, இவளும் எல்லாவித்திலும் சிறந்து விளங்கும் மேன்மையானவள், கண்ணனை ஒத்தவள் என்று உணர்த்துகிறார்.

கன்றுகளோடு கூட்டமாய், குடும்பமாய்த் திகழும் பசுக்களிடம் பால் கறந்து, குல எதிரிகளை அவரிடத்திற்கே சென்று போரிட்டு வெல்லும் தைரியமிக்கவர்களும், வாழ்வியலில் ஒருவகையிலும் குற்றம் காணமுடியாத கோபாலர்களின் ஆயர்பாடியில் தோன்றிய பொற்கொடி போன்றவளே!

புற்றில் பாதுகாப்பாய் இருக்கும் நாகத்தின் அழகிய படம் போலும் அல்குலும், காட்டில் சுதந்திரமாய் வாழும் அழகிய மயிலின் சாயலும் உடையவளே! செல்வச் செழிப்பும்., மாசற்ற பெண்மையும் வாய்க்கப் பெற்றவளே! எழுந்து எங்களோடு வா, என்றனர்.

மேலும், உன் சுற்றத்தாரும் தோழிமார் அனைவரும், உன் முற்றத்தில் நின்று முகில் வண்ணனாம் கண்ணனின் திருநாமப் புகழ் பாடுகின்றோம். நீயோ, அங்கமோ, நாவோ அசைக்காமல் “தேமே” என்று உறங்குவது என்ன பலன் கருதியோ? இது என்ன செய்கை.? உடனே எழுந்து வருவாயாக, என்று எழுப்புகிறார்கள்.

நாமெல்லாரும் திரளாகச் சென்று கிருஷ்ணபக்திப் பரவச பேரின்பத்தை அநுபவிப்பதை விட்டு, நீ தனியாக இன்பம் அநுபவிப்பது போல் கிடப்பது சரியா? என்றும் பொருள்.

“கோவலர் தம் பொற்கொடி”, பக்தியில் மேன்மைபெற்ற உத்தம பாகவதர்களை குறிக்கிறது.

‘தூக்கம்’ என்பதை ‘உறக்கம்’ என்றே தென்தமிழ் நாட்டவர் சொல்லுவர். ஆண்டாள்., உறங்கும் பொருளேலோர், என்று பாடியிருப்பதும் சிறப்பே.

“ஆண்டாள் திருவடிகளே சரணம்”

“ஓம்! நமோ நாராயணா!!”

Image courtesy (with Thanks): Sourced via Google from divineinfoguru site.

You may also like