எனக்கு தென்காசி பக்கம் கீழப்புலியூர் தான் சொந்த ஊரு.
நான் சிறு புள்ளையா இருக்கையிலே குற்றாலத்துக்கோ மற்ற அருவிகளுக்கோ பஸ் வசதியே முற்றிலும் கிடையாது.தென்காசியிலிருந்தே நடைதான். நானும் சிறு புள்ளையிலே எந்த அருவிக்கும் போனதே கிடையாது.
நான் சொல்லுறது 1960 களிலே.
குற்றால சீசன் சமயத்தில் இப்போது போல கூட்டமே இருக்காது. பஸ் கிடையாது. கார்..டூவீலரெல்லாம் மிக மிக அபூர்வம்.
எல்லா அருவித் தண்ணீரும் விவசாயத்து பயன்பட்டது.எல்லாசாதி விவசாயிகளும் வயல்வேலை முடிஞ்சதும் அங்ஙன அங்ஙன உள்ள நீர்நிலைகளில் குளிச்சிட்டு வீட்டுக்குப் போவாங்க.
தாயா புள்ளையாத்தான் பழகுவாங்க.வயக்காரர் வீட்டு சோறு தான் எல்லாருக்கும்..சாதி வித்தியாசம் இருந்தது.ஆனா சாதி துவேசம் இருக்கலை.ஒவ்வொரு வேலைக்கும் ஒருத்தரையொருத்தர் நம்பித்தான் வாழ்க்கை ஓடியது. செயல்பாடுகளில் மறக்கமுடியாத பாசம் புழங்கின காலமது.அதுபோலொரு நற்காலம் இனி வரவே வராது.
எனக்கு விவரம் தெரியும்போது காசிமேஜர்புரத்து ஆண்களும் பெண்களும் ஒருமூட்டை துணியை கொண்டு போயி குற்றாலத்து பாறைகளில் உக்காந்து சௌரியமா சோப்பு போட்டு துவைச்சு பாறைகளிலே காயப் போட்டுட்டு..பிற்பாடு அருவியிலே குளிச்சிட்டு வருவாங்க.
அப்போல்லாம் குற்றாலம் மெயின் அருவியைத் தவிர வேற அருவிகளுக்கு நடந்து தான் போகனும்.பஸ் கிடையாது.
நான் சொல்றது 60 வருஷத்துக்கு முந்தின கதை.அப்போ குற்றாலத்தைச் சுத்தி உள்ளவங்க அருவியிலே போயி குளிப்பது அபூர்வம்.ஊரெல்லாம் சாரல் மழை பெஞ்சுகிட்டே இருக்கும்.தினப்படி குளிக்கதே கஷ்டந்தான்.
நாங்களெல்லாம் ராத்திரி தூங்கதுக்கு தரையிலே ஒரு பெரிய நெல்லு சாக்கு விரிச்சு..இன்னொரு நெல்லு சாக்கால உடம்பு பூராத்தையும் மூடித்தான் படுத்து கெடப்போம்.
மீறி குளிக்கப்போனா..எங்கூரு ஆறு குளம்..வாய்க்கல்களிலேயே வெரயலு..ஆட்டிரும்.அப்பிடி ஊர்க்காடு பூராம் எப்பவும் சாரல் பெஞ்சவண்ணமாவே ரெண்டு மாசம் இருக்கும்.ஊரு ஓடையெல்லாம் மழைத்தண்ணீ ஊத்தெடுத்து ஓடிக்கிட்டேயிருக்கும்.அந்த ஓடைகளிலே ஓடி ஓடி சின்னச்சின்ன மீன்களை கடும் பிரயாசப்பட்டு புடிச்சு வெளையாடினது தனிக்கதை.
இப்பவும் தென்காசி..குற்றாலம்..செங்கோட்டை ஊர்களிலும் அதன் சுத்துப்பட்டு கிராமங்களிலும் வாழ்பவர்கள் சீசன் சமயத்தில் மட்டுமல்ல ஆண்டுமுழுக்கவும் அருவிகள் பக்கம் போகாதவர்கள் தான் மெஜாரிட்டி.இது எனக்கு ரெம்ப நல்லாவே தெரியும்.உண்மைய்ய்யா..நம்புங்க.
இப்பவும் சீசனுக்கு வெளியூரிலிருந்து சேக்காளிமார் வந்தானுவொன்னா..உள்ளூர்காரனுவொ அருவிக்கு கூட்டிட்டு போவானுவொ..அவங்களை குளிக்க சொல்லிட்டு உள்ளூர்காரன் குளிக்காமலேயே வீட்டுக்கு வந்துருவான்..நான் உட்பட..இன்னிக்கும் அப்பிடித்தான்.
ஆஷ் துரை காலம் 100 வருஷங்களையும் தாண்டிய காலம்.அதனால அவரு சம்மந்தப்பட்ட குற்றாலச்செய்திகளை எவ்வாறு நம்புவதென்றே தெரியலை.
பே.பரிமேலழகன்
June 19, 2019