பாசுரம் – 24

by Parimelazhagan P
107 views

வேண்டியாருக்கு வேண்டியதை வேண்டுமளவு அளிக்கும் கண்ணன், இதோ, ஆய்ச்சியர் வேண்டியபடி தன்னை அலங்கரித்து அவர்கள் விரும்பும் மன்னனாக ‘சீரிய சிங்காசனம்’ நோக்கி கம்பீரமாய் நடந்து வருகின்றான். அவனின் காயாம்பூ கருமேனி அழகையும், சிங்கம் போன்ற நடை அழகையும் கண்ட ஆய்ச்சியருக்கு எல்லாம் மறந்தது. தாங்கள் எண்ணி வந்த காரியமும் மறந்து கண்ணன் அழகில் மெய்மறந்து மகிழ்கின்றனர்.

கண்ணனைக் கண்ணாற கண்ட பொழுதில் கண்ணனின் அழகும், புகழுமே ஆய்ச்சியரிடம் மேலோங்க, அவனுக்கு ‘பல்லாண்டு’ பாடி, பரவசமாயினர். கண்ணனின் அழகு கோபியரைப் படுத்தும் பாடு பாரீர். அவன் வருவதற்கு முன்பு, என்னென்ன கேட்க வேண்டும் என்று பட்டியலிட்ட ஆய்ச்சியர்., கண்ணன் கண் முன் தோன்றியதும் அவனழகையே போற்றிப் பாடி, அவன் வசமாயினர். தம் வசம் இழந்தனர்.

பல்லாண்டு பாடுகையில் ஆய்ச்சியர் நாவில் ‘அறுசுவை’ பக்தி வெளிப்படுகிறது. ‘அடி போற்றி’, ‘திறல் போற்றி’, ‘புகழ் போற்றி’, ‘கழல் போற்றி’, ‘குணம் போற்றி’, ‘வேல் போற்றி’, என்று கண்ணனின் வீரத்தை சிலாகித்த பின்பு தான் தாங்கள் வந்த காரியம் நினைவுக்கு வந்ததாம்.

ஆய்ச்சியரின் அறுவகை வாழ்த்தும் அவர்களின் நாவிலே அறுசுவையாக மணத்தது, இனித்தது. அந்த வாழ்த்துரையின் மூலம் கண்ணன் கதை நம் கண் முன் ஆகாயமாய் விரிவது, இப்பாசுரச் சிறப்பு.

“கண்ணன் வாழ்த்து”

‘அன்றிவ்வுலகம் அளந்தாய்’ அடி போற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய்! கழல் போற்றி,

குன்று குடையா எடுத்தாய்! குணம் போற்றி,
வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம்., இரங்கேலோர் எம்பாவாய்.

விளக்கம்:

ஆய்ச்சியர் வேண்டியபடி ஆஸ்தான மண்டபத்தில் கண்ணன் எழுந்தருளியதும், அவன் அழகைக் கண்டு, வந்த காரியம் மறந்து, அவன் திருவடிகளை கண்டு,

  • அன்று வாமனாவதாரத்திலே உலகளந்த திருவடிகள் “பல்லாண்டு வாழ்க!”.
  • தன் பத்தினி சீதா பிராட்டியை அபகரித்த ராவணன் வாழ்ந்த இலங்கைக்குச் சென்று, அரக்கர் குலமழித்த ஸ்ரீராமனே! உன் திறம், “பல்லாண்டு வாழ்க!”
  • கம்சன் அனுப்பிய சடகாசுரனை வண்டியோடு உன் பிஞ்சுக் காலால் உதைத்தழித்து அருளிய உன் புகழ், “பல்லாண்டு வாழ்க!”
  • கன்றின் வடிவில் வந்த வத்ஸாசுரனை, விளாங்கனி வடிவில் இருந்த அசுரன் மேல் எறிதடியாக வீசிக் கொன்ற உன் திருவடிகள், “பல்லாண்டு வாழ்க!”
  • கோவர்த்தன மலையை குடையாகத் தூக்கிப் பிடித்து ஆயர்குலம் காத்த குணம், “பல்லாண்டு வாழ்க!”
  • பகைவர்களை வென்றழிக்கும் உன் கை வேல், “பல்லாண்டு வாழ்க!”

என்று கண்ணன் லீலைகளுக்கு ‘மங்களம்’ பாடி, இப்போது நாங்கள் வந்த காரியம், நீ ஆசீர்வதித்துத் தரும் பறையை பெற்றுக் கொள்ளத்தான்; ஆகையால் எங்களுக்கு இரங்குவாய் எனப் பணிகின்றனர்.

“இன்று யாம் வந்தோம் இரங்கு” கண்ணா! உன் அருளைப்பெற உன் வரவை எதிர்பார்த்து நாங்கள் காத்திருக்க வேண்டும். என்றாலும் உன்னை காணும் ஆவலை அடக்க முடியாமலும்; இன்னும் காத்திருக்க வலு இல்லாததாலும் வந்து விட்டோம். பிழை பொறுத்து அருளுவாய் என்றபடி. காத்திருக்கச் சம்மதிக்காத அளவுக்கு காதல்.

நண்பர்களே! இறைவன் மேல் கொண்ட காதல், “பக்தி” எனப்படுகிறது. பக்தி யோகம் புரிந்து பகவானுக்கு நெருக்கமாவோம்.

“ஆண்டாள் திருவடிகளே சரணம்”

“ஓம்! நமோ நாராயணா!!”

You may also like