பழைய சோறு..ன்னா எனக்கு உசுரு..ன்னு பல பதிவு போட்டாச்சு.
அதிலியும் பழைய சோத்துக்கு உண்டான ருசியான தொடுகறிகள் அந்தக்காலத்திலே ஏராளம்.
Yeah.. plenty of choices.
இன்னிக்கு அன்புத்தங்கை Thangam Thangam Vallinayagam சுண்டக் கீரையை பற்றி ஒரு கிறக்கும் பதிவு போட்டு வுட்ருக்காங்க.கீரை சட்டி படத்தையும் போட்டு..
உடனே நம்ம வண்டி இளமைக்கால கிராம வாழ்க்கையை நோக்கி தலைதெறிக்க ஓடிட்டு.
கிராமத்துல விவசாயிகள் வீட்டுல எப்பவும் கிடைக்கிற பண்டந்தான் வகை வகையான கீரைகள்.
அதிலியும் தண்டங்கீரை மொளவுசெடி வயக்காட்டுகள்..ல சகட்டுமேனிக்கு விதைய தூவி விட்ருவாங்க..வயல் பூராவும் ஆங்காங்ஙே முளைச்சு பச்சைப்பசேல்ன்னு நிக்கும்.
தண்டங்கீரையிலே எங்காத்தா கீரைப் பொரியல்..கடைஞ்ச கீரை..பொரியரிசி அரைச்சு போட்டு கீரை பொருமா..ன்னு பலவிதமா பண்ணுவா..எல்லாமே நல்ல ருசியா இருக்கும்…சும்மாவே ஒரு சிரட்டையிலே கோரி போட்டு சுடச்சுட திம்போம்.
அதுவும் புளிக்குழம்புக்கு இந்தக் கீரைகள் எல்லாம் தொடுகறின்னா..போதும்..வெளுத்திருவோம்.
மிஞ்சுன கீரையையும் புளிக்குழம்பையும் சுண்ட வச்சு ..சூடு பண்ணிய கடைஞ்ச கீரை மறுநா பழையத்துக்கு தொட்டுக்க ஏக ருசியா இருக்கும்.
கீரை..அல்லவா..அதை ராத்திரி அப்பிடியே நடு அடுப்பில் வைத்து சுண்ட வைக்க மாட்டார்கள்.அதிக தீயில் சட்டி ஓரமெல்லாம் கரிஞ்சு கீரையும் தீப்புடிச்சு போயி தீஞ்ச வாசனை வந்துரும்.அந்தக்கீரை சாப்பிட நல்லா இருக்காது..கழனித் தண்ணியோடு சேத்து மாட்டுத்தொட்டியிலே கொண்டு போயி ஊத்த வேண்டியது தான்.
அதுக்கு தான் அந்த சொலவடை..”கருப்பு ஒரு அழகு; காந்தல் ஒரு ருசி“ன்னு.
ஆம்பளைகளிலே நல்லா காடுகரைகளிலே வேலை செஞ்சவன் ஒடம்பு கருப்பா ஒன்னு போல முறுக்கி விட்ட கம்பா இருப்பான்.அவன் தான் எல்லா வேலைக்கும் பொருத்தமானவன்.
வேலை செய்யாம நிழலிலே உறங்குத ஆம்பிளைகள் வெளுத்து பூசின மாதிரி இருப்பாங்க..அவனுகளுக்கு எங்கூரிலே..”பொந்தன்”..சொல்லி பொட்டை புள்ளைக சிரிப்பாளுவொ..பொத்து..பொத்துன்னு இருக்காமுல்லா..வேலை வெட்டிக்கு லாயக்கில்லாம..அதான் பொந்தன்..
அது போல கீரை போன்ற மிருதுவான சமாச்சாரங்களை கறி வைக்கும்போது கொடி அடுப்புல வைப்பாங்க.இல்லேன்னா ஒரு வித்தடிக்குள்ளே குழைஞ்சு கூழா போயிடும்.ருசி இருக்காது.கொடி அடுப்பு காந்தலிலோ..அல்லது அடுப்புல லேசான தீயிலேயோ கீரையை வேக வைச்சு சமைப்பாங்க.ருசி நல்லாஇருக்கும்.
ராத்திரி சுண்டக்கறியாக்கும் போதும் லேசான தீ காந்தலிலே தான் மறுபடியும் சூடாக்கி லேசா கட்டியானதும் தீயை பிரிச்சு விறகை அடுப்புல இருந்து இழுத்து தண்ணி ஊத்தி ஆத்தி வுட்ருவாங்க.
மறுநா கடைஞ்சகீரையும் புளிக்குழம்பும் கலந்த சுண்டக்கீரை ருசியிலே பழைய சோத்தை கொண்டா..கொண்டா..ங்கும்..ஆக..காந்தல் ஒரு தனி ருசின்னா..இப்ப தெரியுதா..
நம்மூரு சொலவடைகளை அடிச்சுக்க ஆளே கிடையாதுய்ய்யா..எப்பேர்ப்பட்ட சூட்சமத்தையும் நாலு வார்த்தைக்குள்ள அடக்கி வைச்சி வாழ்ந்தவன் நம்ம முன்னோர்கள் ஐயா.
பே.பரிமேலழகன்
May 23, 2020