ஞாபகம் பழசு.

by Parimelazhagan P
139 views
ஞாபகம் பழசு

அப்போ நான் செங்கோட்டையில எங்க அம்மாவைப் பெத்த தாத்தா வீட்டுல இருந்து படிச்சுட்டுகிட்டு இருந்தேன்.

தாத்தா ஜோதிட நிபுணர். அந்தக்காலத்திலே நெறைய பேருக்கு அனா..ஆவன்னா..சொல்லிக் குடுத்த அண்ணாவி.

அண்ணாவி சோசியர்..ன்னாத்தான் ஊருகாட்டு மக்களுக்குத் தெரியும்.

வாழ்க்கையிலே நேர்மையா இருக்கனுமிங்கதுக்கும் திட்டமிட்டுத்தான் எந்தக்காரியமானாலும் செய்யனுமிங்கதுக்கும் பாரபட்சமில்லாம எல்லாரையும் ஒன்னுபோல நடத்தனுமிங்கதுக்கும்… எனக்கு எங்க அண்ணாவி தாத்தா தான் இன்னிக்கு வரைக்கும் “ரோல் மாடல்.” அண்ணாவி தாத்தாவை நெனைச்சு வியக்காத நாளே கிடையாதும்பேன்.

ஆனா தாத்தா ரெம்ப கண்டிப்பாவங்க.. தப்பு செஞ்சா கம்போ.. குச்சியோ.. கட்டைவாரியலோ பிய்ய பிய்ய அடி பிறுத்துறுவாவொ.

நான் அப்போ சின்னப்பய தானே.. சேட்டைன்னா..சுழிச்சேட்டை பன்னுவேமில்லா.

அதுல்லாம் தாத்தா காதுக்கு போனா.. கன பூசை நடக்கும்.கம்பு..குச்சி ஒடிஞ்சு போவும்.வாரியலு பிஞ்சு போவும். நிறைய நேரம் குண்டித்தோலு பிஞ்சு ரெத்தம் வந்துரும். கரண்டைக்காலுல சிராய்ப்பு பிஞ்சும் ரெத்தம் வந்துரும்.

ஓஓஓ..ன்னு அழுதுகிட்டும் பயந்து நடுங்கிட்டும் மேல வூட்டுல ஒரு ஓரமா கெடப்பேன்.

சித்தநேரம் கழிச்சு ..ஏலே..ஏ..ராசப்பா..ன்னு தாத்தா கூப்பிடுவாவொ. உடனே அந் அழுகைய அடக்கிகிட்டு கூட்டிஎந்திச்சு ஓடுவேன். பக்கத்திலே வரச்சொல்லி டவுசரை கழத்ச்சொல்லி அடி பட்ட இடத்தை தாத்தா பாக்கும். வீக்கம்..ரெத்தம் விளாறின இடத்தை மெதுவா தொட்டு தொட்டு பாக்கும்..அந்தால நான் தாத்தா மொவத்தை பாப்பேன். கோவத்தோட அடிச்ச மொவத்துக்கும் இந்த மொவத்துக்கும் அப்பிடியொரு மாத்தமிருக்கும். முகத்து சதையெல்லாமும் உதடுகளும் படபடத்து நெகிழும். எங்க சித்தியை கூப்பிட்டு..ஏ.! பொல்லாமுருவம்..அந்த தேங்காஎண்ணெய் குடுத்திய எடுத்துட்டு வா..ங்கும்.

தேங்காஎண்ணெய் வந்ததும் தாத்தாவே அடிபட்ட இடத்துல எல்லாம் கனிவோட தேய்ச்சு விடும். சிலப்போ தாத்தாவே அழுதுரும்.. நான் அதைப் பாத்து இன்னும் கூடகொஞ்சம் அழுவேன். நல்லா சமாதான படுத்திட்டு கண்ணாடி கூட்டை தொறந்து ஒரு பத்துபைசாவை தந்து.. ஏதாவது மிட்டாசி வாங்கி சாப்பிடச் சொல்லும். நானும் சமாதானமாகிடுவேன்.

அந்த மாதிரி தாத்தா அடிச்சு திருத்தின தப்புகளை இன்று வரை செய்யமாட்டேன். செய்ய பயப்படுவேன். அப்பேர்பட்ட வாழ்க்கைப்பாடம் அது எனக்கு.

சரிய்ய்யா..! அதுக்கும் இந்த மஞ்சச்சீனிகிழங்கு படத்துக்கும் என்ன சம்பந்தம்..?ன்னு நீங்க ஏசுதது காதுல வுளுதுய்யா..சொல்லுதேன்.

அப்போ இந்த வெயில் காலத்திலே தான் இந்தமாதிரி மஞ்சச்சீனிகிழங்கு.,சிவப்பு சீனிகிழங்கெல்லாம் சந்தைக்கு வரும். தெருத்தெருவாவும் வித்துகிட்டு போவாங்க.

தாத்தா வீட்டுல தாய்மாமாக்கள் சித்தி..அக்கான்னு மத்த ‘வாராளு போறாளு’..ன்னு எண்ணிக்கை கூடுதலு.

நாந்தான் ஒரு நார் பெட்டியிலே மேலத்தெரு காய்கறி பிச்சையா மாமா கடையிலேயிருந்து இந்த மஞ்சச்சீனிக்கிழங்கை மூனு நாலு கிலோ..ன்னு வேங்கிட்டு வருவேன்.

மத்தியானம் சோறு தின்னபிறகு.. சித்தி பெரிய பானையிலே போட்டு கிழங்கை கழுவிட்டு போட்டு அவிப்பா.

நல்லா அவிஞ்சதும் சீனிக்கிழங்கு மேத்தோலு மவுந்து கெழங்கு கீறி உள்ளே ஒரு இனிப்பான கலரு தெரியும். பாக்கவே ருசியாயிருக்கும்.பெறவு திங்கதுகௌகு கேக்கனுமா.? வீட்டோட எல்லாருக்கும் இந்தக்கிழங்கு பிடிக்கும்.ஆனா..யாரும் ஒரு கிழங்கைக் கூட தொட மாட்டோம்.அத்தனை கட்டுப்பாடு..ஒழுங்கு..தாத்தாவின் வளர்ப்புல.

அவிச்ச கிழங்க வட்டச்சொளவுல தட்டி அசை மேலே வைச்சிருவா சித்தி.

ஒரு நாலு மணி சுமாருக்கு சாவடியிலே ஜாதகம் பாத்துக்கிட்டுருக்க தாத்தா வீட்டுக்குள்ள வருவாவொ. சித்தி ஒரு ஓரமா நின்னு..எய்ய்யா..! சீனிக்கிழங்கை அவிச்சு அசையிலே தூக்கி வெச்சிட்டேம்..பா.

அந்தாநிக்கி..தாத்தா அந்தச் சொளவோட சீனிக்கிழங்கை இறக்கிட்டு..இன்னொரு வட்டச் சொளவை எடுத்தா..ம்பாவொ.நாங்க ரெடியா வெச்சிருப்போம்.

வீட்டுல எத்தனை பேருன்னு எண்ணி.. ரெண்டு சொளவுலேயும் அத்தனை பங்கா சரிசமமா பிரிச்சு வைப்பாங்க. கூடக்கொறைய இருந்தா.. கிழங்கை ஒடிச்சும் துண்டுகளை போட்டு சரி பண்ணிடுவாவொ. அப்புறம் .. எல்லாரும் வாங்க.. ஆளுக்கொரு பங்கை எடுத்துக்கோங்க..லே..ம்பாங்க.

பண்டம் எல்லாருக்கும் கிடைக்கும்.சரிசமமா கிடைக்கும்.கூடுதலு கொறவுன்னு ஒருத்தருக்கொருத்தரு சண்டை போடமாட்டோம்.வேணுங்க அளவுக்கும் இருக்கும்.

எந்தப் பொருளானாலும் பழங்கள் ஆனாலும் தாத்தா..அது எல்லாருக்கும் ஒழுங்கா போய்ச்சேரனுமின்னு நெனைப்பாங்க.அதுல கண்டிப்பாவும் இருப்பாங்க.

அந்த பாரபட்சமின்மையும் பேரன்பும் பிரியமும் கண்டிப்பும் உள்ளவங்களை தேடி தேடி பாக்கென்.காணேனில்லை.

எனக்கு இந்த நல்ல குணங்கள் எல்லாம் அண்ணாவி தாத்தாவிடமிருந்து தானே வந்திருக்கனும்.

இப்பவும் அண்ணாவி தாத்தாவை கண்களில் நீரோட நெனைச்சுகிட்டேயிருக்கேன்.தாத்தா வந்து அவொகிட்ட அதேபோல அடி வாங்கி இப்போ செய்யிற தப்பெல்லாம் திருத்திக்கிறனுமின்னு ஆசையா இருக்கு.

தாத்தா வீட்டிலேயிருந்து 9 வரை செங்கோட்டையிலே படிச்சேன்.ஒன்னாங்கிளாஸிலிருந்து ஒன்பதாங்கிளாஸ்வரைக்கும் நான் ஸ்கூல் பஸ்ட்..

கண்டிப்பும் பேரன்பும் ஒழுக்கமும் இப்போதுள்ள சந்ததிகளுக்குப் போதிக்க…தாத்தா..நீங்க. எப்போ வருவீங்க..!

நீங்க வளத்தது தான் வளப்பு.

தாத்தா படம் இல்லை.

ஆனாலும் அப்போதுள்ள நினைவுகளைக் கிண்டிய இந்த மஞ்சச்சீனிகிழங்கு படத்தைப் போட்டு அண்ணாவி தாத்தாவை அதனுள் தேடுகிறேன். நிச்சயம் தாத்தாவின் துகள் அதற்குள் தான் இருக்குமென்று நம்புகிறேன்.

பே.பரிமேலழகன்
March 26, 2019

You may also like