வா
என் மகளே..!
வா.
இந்தப் பிறவிக்கு
மட்டுமே இந்த உறவு…
என்பதை
நீயும் அறிவாயா..!!
நான்
அப்பா.
என்
மகள் நீ.
எத்தனை பிறவியில்
தேக்கி வைத்தோமோ..?
அன்பொழுகும்
இனிமையான
பந்தம்
அப்பா – மகள்.
என் செல்லமகள்
எனும் போதினிலே
இமைக்கும் நொடிகளில் பாசப் பித்தாவேன்..
உயிரே
நீ..என
உணர்ந்த தருணங்களும் உண்டு.
எல்லா
பொழுதுகளிலும்
என்னை மலர வைக்கும்
இறைவன்
தந்த
அற்புத பூ..நீ..
எனக்கே எனக்கான
வரம் என் மகள் தான்.
என் மகள் எனக்கு,
குழந்தைத் தெய்வம்.
என் குதூகலம்.
மகிழ்ச்சித் திறவுகோல்.
பளிச்சிடும் பாச விளக்கு.
பல யுகங்களின் பரிசு.
நீ
எங்கிருந்தாலும்..
உனக்கான
குடும்பம் இருந்தாலும்
எனக்கான
என் மகள் எப்போதும்
என் குழந்தையாய்..என் தேவதையாய்
நெஞ்சுக்குள்ளேயே …
அந்த நாள் நினைவுகளோடு அடைக்கலம்.
வளர்ந்த பின்பும்
உன்
திருமணத்திற்குப் பின்னும்
அந்த பிஞ்சு முகத்தையே நினைவில் கொண்டு
உன்னை நினைக்கிறேன்..
பைத்தியம் போல்
உன்னோடு பேசுகிறேன்..
விளையாடுகிறேன்..முடிவில் அழுகிறேன்.
எந்தப் பிறவியில்
இனி
எனக்கு நீ திரும்பக் கிடைப்பாய்..?
இனி
எப்பிறவியிலும்
உன்னை மகளாகவும்
என்னை அப்பாவாகவும்
பெறவே முடியாதே..
அடையாளம் கூடக் காண முடியாதே..
அடடா..தாங்கவே முடியவில்லையே..என் செல்வமே..!
வாழும் வரை
நீ
என்னுடைய இன்னொரு ஜீவனாய்
எனக்குள் என்னை உயிர்ப்பிப்பாய்.
மகளே!
எப்போதும்
என் ஆசிகள் உனக்கு.
சௌபாக்கியவதியாய் வாழ்க..!
பே.பரிமேலழகன்
May 03, 2016