ஸ்ரீஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த “திருப்பாவை” யின் நோக்கம் யாதெனில், கோதை நாச்சியார், ஞானமும், இறைவன் மேல் வைராக்கியமும் மிகுந்து, தானே போய் பகவானை அடைந்து, “உனக்கு அடிமையாய் இருக்கும் இந்த ‘ஆத்மா’ இந்த உலகத்தில் உழன்று அலையாதபடி தனக்குத் தகுதியான திருத்தொண்டைச் செய்யுமாறு திருவருள் புரியவேண்டும்” என்று வேண்டுவது தான்.
முன்னொரு காலத்தில், கிருஷ்ணாவதாரத்தில், ஆயர்பாடியில் கண்ணனாய் பகவான் வளர்ந்த போது, ஆய்ச்சியர் கண்ணனை அடைய நோன்பிருந்து., தேவையானவற்றைப் பெற்றுக் கொண்டதைப் போல, அதிலிருந்து அநேக காலங்கடந்து, ஸ்ரீவில்லிபுத்தூரில் சுமார் 1200 வருஷங்களுக்கு முன், பட்டர் பிரான், பெரியாழ்வார் திருக்குமாரத்தியாக அவதரித்த ஆண்டாள் நாச்சியார், சங்கப் புலவர்கள் புகழும் படிக்கு செந்தமிழில் முப்பது பாட்டாய் “திருப்பாவை யை” அருளிச் செய்தார்.
திருப்பாவையை பொருள் தெரியாவிட்டாலும், முப்பது பாட்டையும் பாடி வணங்குவோருக்கு, சர்வதேச, சர்வகாலங்களிலும் ஸ்ரீலட்சுமிபதியான பகவான் ஸ்ரீவிஷ்ணுவின் பரிபூரண அருள் கிட்டும் என்று இன்றைய முப்பதாவது பாசுரம் உறுதி கூறுகிறது. மார்கழி நோன்பை கடைப்பிடித்தவர்களைப் போல, திருப்பாவையை மார்கழி முப்பது நாளும் ஒதுகிறவர்களுக்கும், பெருமாள்-பிராட்டியின் திருவருள் எங்கும், எப்போதும் கிடைத்து இன்புறுவர் என்பதும் நிச்சயம்.
என்பதும் நிச்சயம்.
வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட ஆற்றை, அணிபுதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கிப் பரிசுரைப்பார், ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்றின்புறுவர் எம்பாவாய்.
“திருப்பாவை பாடுவோர் திருமாலின் பூரணகடாட்சம் பெறுவர்”
விளக்கம்:
தேவர்களுக்கு அமிர்தம் பெற்றுத்தர திருபாற்கடலை கடைந்த திருமாலை, ஸ்ரீலட்சுமிபதியான கண்ணனை, கேசி யானையை அழித்த கேசவனை,
ஆயர்பாடியில் வளரும்., சந்திரபிம்பம் போன்ற அழகிய முகமும், கண்ணனும் நப்பின்னைப் பிராட்டியும் வழங்கிய புத்தாடை, ஆபரணங்களை அணிந்து மகிழ்ந்தவர்களுமான கோபியர்கள் மார்கழி நோன்பிருந்து கண்ணனின் அன்புக்கு முழுதும் பாத்திரமான “கிருஷ்ணாவதார” வரலாற்றை அறிந்தார் ஆண்டாள் நாச்சியார்.
தான் அவதரித்த புதுவை என்ற ஸ்ரீவில்லிபுத்தூரில், பசுமைச் செழிப்புடைய, குளிர்ந்த தாமரை மலர்களை மாலையாக அணியும் பெரியாழ்வாரின் திருக்குமாரத்தியான ஸ்ரீஆண்டாள் பகவானையே தியானிக்கும்படி அருளிச்செய்த, தமிழ்ச் சங்கம் போற்றிய, செந்தமிழ் மாலை “திருப்பாவை“. முப்பது பாசுரங்களைக் கொண்டது.
இந்த முப்பது பாசுரங்களையும் விடாமல் இந்தக் காலத்திலும் பக்தியோடு தியானிப்பவர்களுக்கு, நான்கு பெரும் மலைகளைப் போல் தோள்களையுடையவனும், செழுமை பூத்த சிவந்த கண்களும், ஐசுவரியமும், அழகும் பொருந்திய வடிவழகனுமான திருமாலின் திருவருள் எங்கும், எக்காலத்தும் கிடைக்கப் பெற்று பரமானந்தம் எய்துவர் என்று நிறைவு செய்கிறது ஆண்டாள் பாசுரம்.
‘சொன்ன’: ஆய்ச்சியர்கள் ஆயர்பாடியில் நோன்புக்காலத்தில் அநுபவித்த கஷ்டங்களை, ஆண்டாளும் பாவனையால் அநுபவித்தார் ஸ்ரீவில்லி புத்தூரில்.
‘சங்கத்தமிழ்’. தமிழ்ப் புலவர்கள் கூட்டம்., சங்கத்தில் வைத்து போற்றப்பட்ட தமிழ் நூல் ‘திருப்பாவை’. ஆண்டாள் தமிழுக்கு வழங்கிய அருட்கொடை.
நண்பர்களே! கடும், பெரும் முயற்சியில் “திருப்பாவை” விளக்கம் இன்றுடன் நிறைவடைகிறது. இது என்னால் முடிந்த எளிய முயற்சியாக நான் கருதவில்லை. என்னை நல்விதமாய் இயக்கிய சக்தி, ஸ்ரீஆண்டாளும், ஸ்ரீரங்கமன்னாருமே.
கண்கள் ஆனந்தத்தால் பனிக்கின்றன, மெய் சிலிர்கின்றது, என் வாழ்வின் தவம் போலும் இம்முயற்சிக்குத் துணை நின்ற அனைவருக்கும் பகவான்., பிராட்டி திருவருள் கிடைக்கப் பிரார்திக்கின்றேன். வாழ்க யாவரும்!
“ஆண்டாள் திருவடிகளே சரணம்”
“ஓம்! நமோ நாராயணா!!”