பாசுரம் – 25

by Parimelazhagan P
157 views
பாசுரம் – 25

கண்ணனுக்கு “பல்லாண்டு” “போற்றி” பாடி, அவன் அருகில் இருப்பதையே பாக்கியமாய் உணர்ந்து, கோபியர்கள் குதூகலமாய் இருக்கிறார்கள்.

கண்ணனும், இவ்வளவு குளிரில், அதிகாலை நீராடி, கூட்டமாய் வந்திருக்கிறீர்களே; பறை மட்டும் தந்தால் திருப்தியா? என்கிறான். கோபியர்கள், கண்ணா! உன்னிடமிருந்து பறை பெறுவது தான் பிரதான நோக்கம் என்றாலும்; உன்னைக் கண் குளிரக் காணவே கடுங்குளிரையும் பொருட்படுத்தாது வந்தோம். நாங்கள் உன்னை அடைவதில் உள்ள தடைகளை களைந்து, தரிசனம் தந்து உன்னைப் பிரிந்திருந்த துயரமும், குளிரில் நடுங்கும் துயரமும் நீக்கி, எங்களை பரிபூரண கடாட்சத்தோடு பார்த்து அருள் செய்ய வேண்டும் என்று வேண்டுகின்றனர்.

நம்முடைய நோன்போ, வேண்டுகோளோ கண்டிப்பாக நிறைவேறும் என்பதில்லை. பகவானின் கைங்கரிய சேவையும், பகவானின் இடையறாத நினைவுமே பயன் தரக்கூடியவை. “தருதியாகில்” என்று., அதாவது கண்ணனுக்குத் திருவுள்ளமாகில் எங்களுக்குச் செய்தருளுங்கள், என்று கேட்பது தான் பெரியோர்களிடம் விண்ணப்பிக்கும் முறை.

அதன் படி, முதல் ஐந்து அடிகளில் கண்ணனின் திறமையும், வீரமும், பெருமையும் போற்றப்படிகிறது. இவ்வளவு பெரிய ஆளான கண்ணனுக்கு இந்த சிறுமிகளின் விருப்பத்தை நிறைவேற்றித் தருவது மிக எளிது என்ற பாவனை இப்பாசுரத்தில் தொனிக்கிறது.

“பறை தந்து கண்ணன் தங்களை அங்கீகரிக்கக் கோரி பிரார்த்தனை”

ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர,
தரிக்கில்லானாகித் தான் தீங்கு நினைத்த
கருத்தைப் பிழைபித்து கஞ்சன் வயிற்றில்

நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம்; பறை தருதியாகில்,
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தோலோர் எம்பாவாய்.

விளக்கம்:

கம்சன் சகோதரி, தேவகிக்கு மகனாகப் பிறந்து, தாய்மாமன் கம்சன் மற்ற பிள்ளைகளைப் போல் கண்ணனையும் கொன்று விடுவானோ என்றெண்ணி, ஒரே இரவில் ஆயர்பாடி அடைந்து, யசோதை மகனாக மறைந்து வளருகிறான்.

இதை அறிந்த கம்சன், ஆயர்பாடியில் கண்ணன் வளர்வதைப் பொறுக்காதவனாய், கண்ணன் உயிருக்கு பல்வேறு தீங்குகள் இழைக்கிறான். அப்பிடிப்பட்ட கம்சனின் சூழ்ச்சிகளை முறியடித்து, அவன் வயிற்றில் நெருப்பாய், பயாக்கினியாய் நின்ற பெருமானே! நெடுமாலே! பக்தர்களிடம் பேரன்பு பூண்டவனே! நாங்கள் உன்னிடம் உன்னையே வேண்டி வந்துள்ளோம்.

எங்கள் வேண்டுகோளை ஏற்று ‘பறை’ தந்தருளுவாயானால், பெரிய பிராட்டி மகாலட்சுமிக்கு தக்க உன் செல்வத்தையும், வீர பராக்கிரமங்களையும் விருப்பத்தோடு பாடி மகிழ்ந்து, உன்னை இதுகாறும் பிரிந்திருந்த துன்பத்தையும், கடுங்குளிரில் வந்த வருத்தமும் தீர்ந்து, எங்கள் நோன்பை நிறைவோடு முடிப்போம் என்று பணிகிறார்கள்.

கம்சன் மற்றவர்கள் வயிற்றில் பயாக்னியாய் இம்சை செய்ததால், பகவான் கம்சன் வயிற்றில் நெருப்பாகவே வளர்ந்து நின்று வாட்டினான்.

‘திருத்தக்க செல்வம்’ — லட்சுமிபதியாக இருக்கும் பகவான், மகாலஷ்மியும் விரும்பும் செல்வமாவான்.

நண்பர்களே! நோக்கம், இலக்கு நிறைவேற., பகவானே ஒரே இரவில் இடம் விட்டு இடம் மாறி., தக்க தருணத்திற்காக காத்திருக்கிறான். முடிவில் வெற்றி கிட்டுகிறது. நம் வாழ்க்கைக்கும் இது நல்ல பாடமாகும்.

“ஆண்டாள் திருவடிகளே சரணம்”

“ஓம்! நமோ நாராயணா!!”

Image courtesy (with Thanks): Sourced via Google from webdunia

You may also like