பாசுரம் – 29

by Parimelazhagan P
153 views

இதுகாறும் நோன்புக்கு “பறை தர வேண்டும்; அது தான் யாம் வந்த காரியம்” என்றெல்லாம் சொல்லி வந்த கோபியர், இன்றைய பாசுரத்திலே தங்களின் அந்தரங்க ஆசையை, இஷ்ட நாயகனிடம் விருப்பத்தோடு வெளியிடுகிறார்கள். அது என்ன?

சிற்றஞ் சிறு காலே வந்து, அதாவது அதிகாலையில். பிரம்ம முகூர்தத்தில் (4.30-6.00 மணிக்கு), அப்போது தான் “சத்வ குணம்” மனிதர்களிடத்தில் நிரம்பி இருக்கும், அப்பிடிப் பட்ட நல்ல நேரத்திலே வந்துன்னைத் தொழுது, உன் திருவடிகளுக்கு., “பல்லாண்டு” பாடி, நித்ய கைங்கரியம் செய்வதே எங்களின் அந்தரங்க விருப்பம்.

இந்த விருப்பத்திற்கு மாறாக வேறு இச்சைகள் எங்கள் மனதில் தோன்றினால், கண்ணா! நீ அவைகளை மாற்றி விட வேண்டும். இனி எடுக்கும் அனைத்து பிறவிகளிலும் இந்த பந்தம் தொடர வேண்டும்; அதற்கு நீ அருள் செய்ய வேண்டும் என்று, குழந்தைகள் காலைக் கட்டிக் கொண்டு அடம் பிடிக்குமே, அது போல் தீர்மானமாய் வேண்டுகிறார்கள்.

ஏழை எளிய மக்களும், வேதவிற்பன்னர் அல்லாதாரும் எளிதாக உன்னை அடையும் பொருட்டே, நீ ஆயர்பாடியில் வந்து தோன்றினாய். நாங்கள் உன் மேல் அளவுகடந்த பிரேமை கொண்டு, உனக்குச் செய்யும் சேவைகளை நீ ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்கின்றனர். அப்படி நீ ஏற்க மறுத்தால் உன்னுடைய ‘கிருஷ்ணாவதாரம்’ என்னும் இப்பிறவி முழுமை அடையாது என்பது மறை பொருள்.

“பாவையரின் அந்தரங்கத்தை கண்ணனுக்கு அறிவித்தல்”

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள் கேளாய்;
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது.

இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே ஆவோம், உனக்கே நாம் ஆட்செய்வோம்;
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.

விளக்கம்:

கண்ணா! எங்கள் மணிவண்ணா! சூரியன் எழுவதற்கு முன்பே, அதிகாலையில் நாங்களெல்லாம் எழுந்து, நீராடி, உன்னிடத்தை அடைந்து வணங்கி, உன் ‘தங்கத்தாமரை’ திருவடிகளுக்கு “பல்லாண்டு” பாடி மகிழ்ந்து உன்னைப் போற்றுவதன் பயன் என்ன தெரியுமா? கொஞ்சம் கேட்டருள்வாய்.

சதா சர்வ காலமும் பசுக்களோடு தான் எங்கள் வாழ்க்கை. மேய்ச்சலும், பாய்ச்சலும், பால் கறந்தும் மாடுகளோடு போராடும் கடின வாழ்க்கை. இதைத் தவிர வேறு ஒன்றும் தெரியாத ஆயர்குலத்தில், எங்களின் பாக்கியமாய் அவதரித்த தேவரீர், ஆயர் குலச் சிறுமிகளான எங்களின் சேவையை, கைங்கர்யத்தை ஏற்றுக்கொள்ளாமல் போவது, உன் அவதாரப் பெருமைக்குத் தகாது.

பகவானே! இன்று நீ தர சம்மதித்த பறை வாத்தியத்தை மட்டுமே பெற நாங்கள் வந்தோமில்லை. வேறு சிலவும் உண்டு. நீ எடுக்கும் எல்லா அவதாரத்திலும், நாங்கள் எடுக்கும் எல்லா பிறவிகளிலும், கோவிந்தா! உன்னுடைய உறவாகவே பிறந்து, உன் புகழ் பாடி, உனக்கே எம்குலம் சேவை செய்ய வேண்டும். இந்த விருப்பத்திற்கு மாறாக வேறு சிந்தனை எங்கள் மனோரதத்தில் தோன்றினால், அவைகளை நீயே மாற்றி உன் நினைவாகவே வாழ அருள் புரிவாய் என்று சொல்லி பகவானின் திருவடியில் சரணடைகின்றனர்.

‘உற்றோமே ஆவோம்; உனக்கே நாம் ஆட்செய்வோம்’, எங்களின் எல்லா உறவும் நீயே ஆக வேண்டுதல், உற்றோமே ஆவோம் என்றது. உனக்கு மட்டுமே எங்கள் சேவை, வேறு எதிலும் வசமிழக்க மாட்டோம் என்றதே, உனக்கே நாம் ஆட்செய்வோம்.

பிரம்ம முகூர்த்த வேளையான அதிகாலையை, “சிற்றஞ்சிறுகாலே” என ஆண்டாள் பாடியது தமிழின் சிறப்பு.

நண்பர்களே! அரிதான மானிட பிறவி தந்த இறைவனை, இதுநாளும் இல்லாவிட்டாலும், இன்று முதல் நெஞ்சில் நிறைத்து எஞ்சிய காலம் பூராவும் “பூஜிப்போமா?!” பிறவி தந்த இறையை அறிய முயலுவோம். வாழ்க!!

“ஆண்டாள் திருவடிகளே சரணம்”

“ஓம்! நமோ நாராயணா!!”

You may also like