பாசுரம் – 28

by Parimelazhagan P
165 views

எல்லாம் கூடி வருகிறது ஆய்ச்சியருக்கு. நோன்பை முடித்து, ஆடை ஆபரணங்கள் அணிந்து பகவானோடு உண்டு களிக்கும் உற்வசம், இதோ. நெருங்கி விட்டது. ஆனாலும் கண்ணன் இன்னும் சோதிக்கிறான்.

பெண்களே! நீங்கள் கேட்டதையெல்லாம் தருகிறேன்; இவைகளைப் பெறுவதற்கு நீங்கள் அனுஷ்டித்த வழிமுறைகளைக் கூறுங்கள், என்றான்.

திடுக்கிட்ட ஆய்ச்சியர்., கண்ணா! எங்களுக்கு வேறு வழிமுறைகளோ, உபாயங்களோ தெரியாது. நீ தான் உபாயம் மற்றெல்லாம். அருள் கூர்ந்து நோன்பை நல்லபடியாக முடித்துத் தா, என வேண்டுகிறார்கள்.

பகவானை நெருங்கும் வழிமுறைகளைச் சொல்லுகிறது இன்றைய பாசுரம். ஆறு உபாயங்களைச் சொல்லி, உனக்கும் எங்களுக்கும் எக்காலத்திலும் பிரிக்க முடியாத உறவு இருக்கிறது; எங்கள் கோரிக்கையை நிறைவேற்று என்கிறார்கள்.

கண்ணா! மற்ற மேலான பக்தர்களைப் போல், நாங்கள் குருகுல வாசம் இருந்து உனக்கு தொண்டு புரியவில்லை. (முதல் வரி)

வேதவிற்பன்னர்களாகவோ, உயர்குலத்தவர்களாகவோ நாங்கள் இல்லை. (இரண்டாம் வரி)

ஆனால், நீ குறையொன்றும் இல்லாத கோவிந்தன் என்பதை உணர்வது. (நான்காம் வரி)

உனக்கும் எங்கள் குலத்துக்கும்.,எக்காலத்திலும் ஒழிக்க முடியாத உறவை உணர்வது. (ஐந்தாம் வரி)

அறியாமல் செய்யும் குற்றங்களுக்கு மன்னிப்பு வேண்டுவது. (ஏழாம் வரி)

நீயே எங்களின் மேலான உபாயம் என சரணடைவது. என்று ஒவ்வொரு வரியிலும் கண்ணன் மேல் உள்ள தீவிர பக்தியை தெரிவிக்கிறார்கள். (எட்டாம் வரி.)

“அறியாத பிள்ளைகள்; அன்பினால் அருள வேண்டும்”

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆய்குலத்து உன்தன்னைப்
பிறவிப் பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்;
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன் தன்னோடு

உறவேல் நமக்கிங் கொழிக்க ஒழியாது!
அறயாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே,
இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.

விளக்கம்:

கண்ணா! உன்னையே தொழும் எங்கள் குலத்துக்கு, காடு தான் வைகுண்டம்., திருப்பதி எல்லாம். மாடுகளை கூட்டமாய் காட்டுக்கு மேய்ச்சலுக்குக் கூட்டிச் சென்று அவைகளுடனேயே பொழுதைப் போக்கி, அங்கேயே உணவருந்தி திரிகிறோம். எங்களுக்கு நித்ய பூஜை, நீராடல் கிடையாது.

சிறிதளவு அறிவு கூட இல்லாத ஆயர்குலத்தில், உன்னைப் பிறவியாகப் பெற்ற நாங்கள் பெரும் புண்ணியம் செய்த பாக்கியசாலிகள். வைகுண்ட வாசா! உன் இருப்பிடத்தை விட்டு பசு மேய்க்க எங்களோடு பிறந்தது, குறையுள்ள எங்களை நிறைவாளர்களாக்கியவனே! நீ குறை ஏதும் இல்லாத எங்கள் “கோவிந்தன்”. கோ-பசு. பசுக்களின் பாதுகாவலன்.

உன்னோடு எங்களுக்கிருக்கும் உறவு நித்யமானது; சத்தியமானது. அதை உன்னாலும் எங்களாலும் எப்போதும் ஒழிக்க இயலாது. ஆயர்குலத்து சிறு பிள்ளைகள் நாங்கள்; எங்களுக்கு உலக விபரம் தெரியாது. உன் மேல் உள்ள அன்பினால், உன்னை கோவிந்தா! நாராயணா! , மாதவா! என்று தகுந்த மரியாதையின்றி சிறு பேர் சொல்லி அழைத்ததை எண்ணி எங்கள் மேல் கோபம் கொள்ளாது, மன்னித்து அருள வேண்டும்.

கண்ணா! எங்கள் கண்கண்ட தெய்வமே! பறை தந்து நோன்பு முடிக்க அருளுவாயாக! என்று சரணடைந்து பணிகின்றனர்.

அறிவொன்றும் இல்லாத…. என்றது, நிரம்பக் கற்ற ஞானம் இல்லை என்பதாக. எங்கள் வாழ்வே காட்டுக்குள் தான். கற்றறிவு இல்லை.

நண்பர்களே! பகவானை அடையும் எளிய வழி, அவனே அனைத்தும் என உணர்வதும், அந்த உணர்வுடனே நாளும் அவனிடம் “சரண்” புகுவதுமே ஆகும்.

“ஆண்டாள் திருவடிகளே சரணம்”

“ஓம்! நமோ நாராயணா!!”

Image courtesy (with Thanks): Sourced via Google from Webdunia site.

You may also like