முக்கியமான பாசுரம் இன்று. பகவானை தியானித்து, அனுதினமும் அவன் புகழ் பாடி, வழக்கமான ஆகாரம், அலங்காரம் தவிர்த்து நோன்பிருந்து பகவானோடு கூடியிருக்கும் பாவையர்கள், கண்ணனின் தரிசனத்திலும், பக்தியிலும் விஞ்சி., கண்ணனை வெற்றி கொண்ட பெருமிதத்தில் இரும்பூது அடையும் காட்சியை இப்பாசுரம் மூலம் ஆண்டாள் நாச்சியார் விளக்குகிறார்கள்.
“கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தன்”. பகவான் பக்தர்களுக்கு எளிதில் வசப்படுபவன். அவன் பொருட்டு பக்தர்கள் செய்யும் நோன்பு போன்ற காரியங்களில் விருப்பத்தோடு பங்கு கொண்டு, அவர்கள் கேட்டதைத் தந்தருளுபவன். பக்தர்களை கருணையால், அருளால், அன்பால் வென்றவன். அவன் திருவடிகளில் தன்னை ஒப்படைப்பவர்களின் பாதுகாவலன். அவர்களோடு கூடி மகிழ்பவன். அதே பகவான் தன்னை அடி பணியாதவர்களையும் (கூடாரை), பகைவர்களையும் வெல்லும் குணம், திறம் கொண்டவன். ஆபத்பாந்தவன்., அனாதரட்சகன் என்னும் பகவானின் சிறப்பு, ‘கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா’ வில் விளக்கப் படுகிறது.
மீண்டும் கண்ணன் ஆய்ச்சியர்களை நோக்கி., உங்கள் நோன்பு வெற்றியடைய நீங்கள் வேண்டியவற்றைத் தருகிறோம். அது மட்டும் போதுமா? என்றான். பதிலுக்கு ஆய்ச்சியர்கள், கண்ணா! இம்மட்டும் மகிழ்ந்தோம். ஆனால் இம்மட்டும் தானா என்றால்; நோன்பு முடிந்த பின் நீயும் உன் நாயகி நப்பின்னைப் பிராட்டியும் சேர்ந்து எங்களுக்குச் செய்ய வேண்டுய சன்மானம் பல உண்டு என்பதும் எங்கள் வேண்டுகோள் என்றனர்.
கோவிந்தா! உன்னோடும் பிராட்டியோடும் கூடி இருப்போம், புதிதாய் நீங்கள் தரும் ஆடை, அணிகலன்கள் அணிவோம், நன்றாய் புசிப்போம், குளிர்ந்து இருப்போம்., இதுவே எங்கள் விருப்பம் என்றதே இப் பாசுரம்.
“நோன்பு முடிந்த பின்பு வேண்டும் சம்மானம்”
கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா! உன்தன்னை
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்;
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
தன் திருவடிகளை வந்து பணியாதவர்களையும், பகைவர்களையும் வெற்றி கொள்ளும் கல்யாண குணங்களையுடைய சீர்க் கோவிந்தனே!
மிகவும் நன்றாக நம் குலப்பெண்கள் நோன்பு நோற்றார்கள் என்று நாட்டிலுள்ளோர் எங்களை கொண்டாடும் போது உன்னிடமும் உன் பிராட்டியிடமும் நாங்கள் பெற விரும்பும் பரிசு என்னவென்று சொல்கிறோம், அதன்படியே தந்தருளுங்கள்.
சூடகம் என்னும் கைகளுக்கு இடும் ஆபரணமும், தோளை அலங்கரிக்கும் தோள் வளைகளும், காதுகளில் பூட்டும் வைர மாணிக்கத் தோடுகளும், கர்ண புஷ்பமும், காலுக்கு சரண ஆபரணங்களான பாடகமும் போன்ற பல்வேறு ஆபரணங்களையும் நீயும் உன் பிராட்டியும் தர நாங்கள் பெரும் மகிழ்ச்சியோடு அணிந்து கொள்வோம்.
அதோடு பட்டாடைகளும் அணிந்து, பாற்சோறு மூடும் அளவுக்கு நெய்யூற்றி, முழங்கை வரை வழிய உங்களோடு கூடியிருந்து உண்டு மகிழ்வதே, இந்த பாவை நோன்பின் பரிசாக உன்னிடம் பறை என்னும் முரசு பெற்று விரதம் முடிக்கும் போது நாங்கள் பெற விரும்பும் சன்மானமாகும் என்று கோபியர் முடித்தனர்.
“உன் தன்னைப் பாடி”…கண்ணா! உன்னைப் பாடுவதே நாம் விரும்பும் பலன் என்று பலகாலமாய் பட்ட துயர் நீங்கப் பாடுகிறார்கள். பறை முழக்கம் ஊருக்காக.
“நாடு புகழும் பரிசினால்”…., நாட்டு மக்கள் இவர்களைப் பாராட்டுவதை ஒரு பேறாக நினைக்காமல், கண்ணனைப் பாடுவதல் கிடைக்கும் மேன்மைகளால் நாடு உயர்வதையே பரிசாக எண்ணுகிறார்கள்.
“கூடியிருந்து குளிர்ந்து”… கண்ணனையும் பிராட்டியையும் கண்ணாறக் கண்ட பிறகு சாப்பாடே தேவையில்லாது, பிரிவுத் துன்பம் நீங்கி எல்லோரும் கூடி மகிழ்ந்திருப்பதே விரும்பப் பட்டது.
நண்பர்களே! அனைத்து நற்செயல்களுக்கும் நற்பலன்கள் பரிசாய் கிடைக்கும். இப்பிறவியில் செய்யும் மிகப் பெரிய புண்ணியத்துக்கும், மிகப் பெரிய பாவத்துக்கும் இப்பிறவியிலேயே பலன் அநுபவிப்போம். புண்ணியம் செய்வோம். சந்ததி செழிக்க பாவம் பண்ணாதிருப்போம்.
“பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே.”
“ஆண்டாள் திருவடிகளே சரணம்”
“ஓம்! நமோ நாராயணா!!”