பாசுரம் – 26

by Parimelazhagan P
178 views
பாசுரம் – 26

கண்ணன் அழகில் கட்டுண்ட பாவையர், இன்னும் அவன் மயக்கம் தீர்ந்தார்களில்லை. ‘நாராயணன்’ ‘உலகளந்த உத்தமன்’ ‘மாதவன்’ ‘மாயன்’ ‘வைகுந்தன்’ ‘பரமன்’ ‘தேவாதி தேவன்’ ‘கேசவன்’ ‘பூவைப் பூ வண்ணா’ ‘யசோதை இளஞ்சிங்கம்’ என்று கண்ணனின் அளவிட முடியாத பெருமைகளைப் பேசினாலும், மேலும் மேலும்., கோபியருக்கு கண்ணன் மேல் உள்ள ஆசை பெருகுகிறதே அன்றி குறையவில்லையாம்.

இன்றைய பாசுரத்திலும், ‘மாலே’ ‘மணிவண்ணா’ ‘ஆலின் இலையாய்’ என்று இன்னும் ஆவல் மீதூற அழைத்து மகிழ்கின்றனர்.

“மணி வண்ணா” என்றது… கண்ணன் மேல் அளவு கடந்த மோகம் கொண்டு அவனைக் காணாது துன்பப் பட்டாலும் அவன் நினைப்பை விட முடிய வில்லையாம். முந்தானையில் முடிந்து வைத்து காலமெல்லாம் அவனை ஆளலாம் என்னும் படிக்கு இருக்கிறதாம், கண்ணனின் வடிவழகு. மோகம் கூடி அவனை காணாதபோது கூட கண் முன் அவனுருவமே நிழலாடுகிறதாம். “பித்து; கண்ணன் பித்து.”

கண்ணனும், என்னை விரும்புவோர் வேறெதையும் விரும்ப மாட்டாரே! என்று பாவையரை செல்லமாய் சீண்டுகிறான். பாவையரும் அதற்கு பதிலாக, கண்ணா! உன்னை மனங்குளிர, கண்ணாறக் காணும் இப்பேறு பெற “பாவை நோன்பு” தான் சிறந்த வழியென்று ஆயர்பாடி பெரியவர்கள் சொல்லியே நாங்கள் நோன்பு நோற்கின்றோம். நீயும் அந்தப் பெரியோர்கள் சொன்ன, காலங்காலமாக உபயோகிக்கும் நோன்பு உபகரணங்களைத் தந்து அருள வேண்டும் என்றனர்.

பகவான் மிக எளிமையானவன், அவனும் பக்தர்களின் பால் தீவிர மோகம் கொண்டவன் என்பதின் உள்ளர்த்தத்திலே தான்., “மாலே! மணிவண்ணா!” என்றழைக்கிறார்கள். பாசுரம் பார்ப்போம்.

“நோன்புக்குத் தேவையானவற்றை கண்ணனிடம் வேண்டுதல்”

மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்,
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே

போல்வன சங்கங்கள், போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும்பறையே, பல்லாண்டிசைப்பாரே,
கோல விளக்கே கொடியே விதானமே,
ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்.

விளக்கம்:

எங்களைப் போன்ற அடியார்கள் பால் தீராத மோகம் கொண்ட திருமாலே! நீலமணி போன்ற நீலமேகக் கார் வண்ணனே, கண்ணா! பாவை நோன்பிருந்து மார்கழி நீராடுவதற்கு எம் குலப் பெரியவர்கள் கடைப்பிடிக்கும் முறைகளில், எங்களுக்குத் தேவையானவற்றை நீ கேட்டதினால் இப்போது சொல்கிறோம்.

இந்த பூமியிலுள்ள பகைவர்களெல்லாம் நடுங்கும்படி நாத முழக்கமிடும் பால் போலும் வெண்ணிற “ஸ்ரீபாஞ்ச சன்யம்” என்னும் உன் சங்கு போன்ற பல சங்குகளையும், பெரிய இடங்கொண்ட பறைகளையும், உன்னை வாழ்த்தி பல்லாண்டு பாடுகிறவர்களையும், அழகிய பெரிய விளக்குகளையும், கொடிகளையும், மேற்கட்டிகளையும் தந்து, ஆலின் இலைமேல் பள்ளி கொண்ட பெருமானே! எங்களை வாழ்த்தியருள வேண்டுகிறோம் என்று பணிகின்றனர்.

பள்ளியெழுச்சி பாடும் போது சங்கு ஒலி எழுப்ப வேண்டும். நாங்கள் புறப்படும் போது பறை முழக்கமிட வேண்டும். கூடவே பல்லாண்டு பாடுவோர், அழகிய தீபங்கள் வேண்டும். எங்கள் கோஷ்டியை தூரத்தில் வரும் போதே அடையாளம் காட்டும் கொடி வேண்டும், மார்கழிப்பனி தலையை நனைக்கா வண்ணம் தலையில் கட்டிக் கொள்ள மேற்கட்டி வேண்டும் என்பதே கோரிக்கை.

“ஆலின் இலையாய்” கண்ணா! பிரளய காலத்தில் இவ்வுலகம் அழிந்து போகாதிருக்கும் படி, சர்வ லோகத்தையும் உன் குழந்தை வயிற்றுக்குள் அடக்கி ஆலின் இலைமேல் குழந்தையாய் கிடந்த மாயனே! மகா சக்தியனே! வட பத்ர சாயியான சர்வேஸ்வரனே! உன்னால் முடியாததும் உண்டோ? எனவே எமக்கு அருள் செய் என்றதாம்.

சங்கின் ஓசை ‘ஓம்!’ என்னும் பிரணவம். பறையின் ஒலி ‘பகவத் ஞானம்’. பல்லாண்டு இசைப்பர், பாகவதர்களின் ஒத்துழைப்பு. என்பது நுண் பொருள்.

நண்பர்களே! பக்தி செய்வதில் பல நுட்பங்களும், மேலான சிறப்புகளும் விஞ்சி இருப்பதை,”பக்தி” செய்தே உணர இயலும்.

“ஆண்டாள் திருவடிகளே சரணம்”

“ஓம்! நமோ நாராயணா!!”

You may also like