பாசுரம் – 23

by Parimelazhagan P
139 views

இன்றைய பாசுரத்தில் ஆய்ச்சியருக்கு உதவி செய்யும் பொருட்டு இறங்கி வந்து விட்டாரே! கருணைக்கடல் கண்ண பரமாத்மா அருளோடு துவக்குவோம் இந்நாளை. வாழ்த்துக்கள்!

நன்பின்னை பிராட்டியை முன் நிறுத்தி கொண்டு, ஆயர்குல மகளிர் கண்ணனிடம், எங்களுக்கு உன்னை விட்டால் வேறு கதி இல்லை; போக்கற்று நிற்கிறோம் என்று சரண் புகுந்ததும், கண்ணன் படுக்கையில் இருந்தவாறே கேட்டருளினான். கண் விழித்து அந்த மயக்கத்திலேயே, “உங்களுக்கு நான் என்ன செய்து உதவ வேண்டும்?” என்றான்.

இந்த இடத்தில் ஆய்ச்சியர்கள் சுதாரித்துக் கொள்கிறார்கள். மிக அருமையான பாசுரம் இது.

எங்கே படுக்கையில் வைத்துக் கேட்டுப் பெற்றால், பலர் அறியாமல்., ரகசியமாய் போய் விடுமோ? சட்டப்படி செல்லாதோ? காலகாலத்துக்கும் நம் குலப் பெண்களுக்கு இந்த வார்த்தை பொருந்தாமல் போய்விடுமோ? என நினைத்து, மீண்டும் பவ்வியமாக விண்ணப்பிக்கின்றனர்.

பகவானே! எங்கள் கோரிக்கை இப்பிடி ரகசியமாக தெரிவிக்கக் கூடியதல்ல. நீ உன் ஆஸ்தான மண்டபத்தில் கம்பீரமாய் உன்னுடைய சீரிய சிங்காசனத்திலே அமர்ந்து, எங்கள் கோரிக்கையைக் கேட்டு அருள் செய்ய வேண்டும். யசோதை இளஞ்சிங்கம், உலகளந்த உத்தமன், நாராயணன் என நாங்கள் போற்றும் பெருமானே! ஆஸ்தான மண்டபத்தில் நீ கொடுக்கும் வாக்கு காலங்காலத்துக்கும் அறுதியானதாய் உறுதியுடன் இருக்கும் என்பதை நன்கறிவோம், என்றனர்.

மலைக்குகையில் படுத்துறங்கும் சிங்கம் விழித்தெழும் போது கம்பீரமாய் கர்ஜித்து, மயிர் உதறி, நெருப்புப்பொறி பறக்கும் கண்களோடு., காட்டு ராஜா என்ற கர்வத்துடன் நடந்து வருவதைப் போல் கண்ணனும் எழுந்து, மன்னனாய் அலங்கரித்து மணிமண்டபத்தை நோக்கி சீரிய சிங்கம் போல் நடந்து வர வேண்டும் என்று ஆய்ச்சியர் விருப்பம் தெரிவிக்கின்றனர். பாசுரம் பார்ப்போம்.

“சீரிய சிங்காசனத்திலிருந்து காரியம் கேட்பாய், கண்ணா!”

மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்

போதருமாப்போலே, நீ பூவைப் பூவண்ணா! உன்
கோயில் நின்றிங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்திலிருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந் தருளேலோர் எம்பாவாய்.

விளக்கம்:

மழைக்காலத்தில் மலைக்குகைக்குள் படுத்து உறங்கும் சீரியசிங்கம், மழைக்காலம் முடிவுற்றதை உணர்ந்து, தீ பிழம்பு உமிழும் கண்களைத் திறந்து கொண்டு, ஒருவிதமான வாசனை பொங்கும் தலைமயிரை விசிறி கொண்டு பெருத்த கர்ஜனையோடு உடம்பை உதறி, சோம்பல் முறித்து, கம்பீரமாய் குகையிலிருந்து வெளிவருவதைப் போல, காயாம்பூ போன்ற நீல நிறக் கண்ணா! நீ உன் இல்லம் விட்டு, நாங்கள் உனக்காகக் காத்திருக்கும் இவ்விடத்தில் எழுந்தருளுவாயாக!

மேலும், நீ பல்வித சிறப்புக்களும், பெருமையும் வாய்ந்த இந்த சீரிய சிங்க சிம்மாசனம் ஏறியமர்ந்து, நாங்கள் வந்த காரியத்தை செவிமடுத்து நிறைவேற்றித் தர வேண்டுமாய் மிகப் பணிந்து விண்ணப்பிக்கிறோம் என்றனர்.

“கோப்புடைய சீரிய சிங்காசனம்”

பகவான் இருந்த இடத்திலிருந்து ஏழுலகையும் அறிந்து பரிபாலனம் செய்யும் சீர்மையும் சிறப்பும் உடைய சிங்க ஆசனம்.

தர்மம், அதர்மம், ஞானம், அஞ்ஞானம், வைராக்கியம்., அவைராக்கியம், ஐசுவரியம், அஐசுவரியம் என்னும் எட்டு கால்களையுடைய சிங்காசனம்., “தர்மாதிபீடம்” பரமபதத்தில் மகா விஷ்ணு வீற்றிருக்கும் ஆசனமாகும்.

காயம்பூ நிறமுடைய கண்ணன் கோபியரின் காதலுக்கு உரிய இளஞ் சிங்கம் என்பதால், தங்கள் மனம் விரும்பும் கண்ணன்., “ராஜ சிங்கமாய்” நடந்து வர வேண்டுகின்றனர்.

அவனே, “தேவாதி தேவன்” ஆனதினால், சீரிய சிம்மாசனம் மேல், ராஜாதி ராஜனாய் அமர்ந்து, தங்கள் விருப்பத்தை முறைப்படி நிறைவேற்ற வேண்டும் என்றதாய். இப்பாசுரம் ஆண்டாளின் அற்புதமான கவித்துவம் நிறைந்தது.

நண்பர்களே! முக்கியமான காரியங்கள் நிறைவேற்ற, எடுத்தேன்; கவிழ்தேன் என்றில்லாமல், ஆண்டவனே ஆனாலும் முறைப்படி விண்ணப்பித்து, சரியான இடத்திலிருந்து, சாட்சியாய் பலரிருக்க, நிறைவேற்றினால் தான் காலங்காலத்துக்கும் பயன் தரும். புரிந்ததா!?

“ஆண்டாள் திருவடிகளே சரணம்”

“ஓம்! நமோ நாராயணா!!”

You may also like