பாசுரம் – 22

by Parimelazhagan P
170 views
பாசுரம் – 22

கண்ணா! நீ தான் எங்களுக்கு எல்லாம்; எழுந்து வா, என்ற கோபியரின் உள்மனதை இன்னும் நன்றாய் அறிய வேண்டுமென்று, கண்ணன் பேசாதே கிடக்கிறான்.

கோபியர்கள் மீண்டும். “கண்ணா! இது வாமனனாகிய உன் பூமி. இதை உணர்ந்த அரசர்கள், இந்த நாடு தங்களுடையது என நினைத்த தங்கள் கர்வம் அழிந்து பவ்வியமாய் உன்னிடம் சரணடைந்துள்ளதைப் போல, நாங்களும் எங்கள் நினைப்பை, அபிமானத்தை விட்டோம்; போக்கற்று அனாதைகளாய் வந்து நிற்கிறோம். சரணாகதி., சரணாகதி. என்றனர். இப்போதாகிலும் நீ வந்து தாமரைக் கண்ணால் சிறிதாய் பார்த்தாலும் போதும், எங்கள் துயரமெல்லாம் தீரும் என்றனர்.

பகவானே சகலமும், சகல இயக்கமும், நம்மால் ஆவது ஒன்றுமே இல்லை என்ற தெளிவை நமக்கு ஏற்படுத்துவதே இன்றைய பாசுரம்.

கண்ணனின் அருட்கடாட்சம் மெல்ல மெல்ல வேணும்

அங்கண் மாஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட்டிற் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம்
கிண்கிணி வாய்ச்செய்த தாமரைப்பூப் போலே

செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டுங்கொண் டெங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.

விளக்கம்:

கண்ணா! வாமனாவதாரத்தில் இந்த பூமியை ஒரடியில் அளந்து சொந்தமாக்கியவன் நீ. இதை பூரணமாய் உணர்ந்த இம் மாநிலத்து அரசர்கள் எல்லாம்., தங்களுடையது என்று இதுகாறும் நினைந்திருந்த கர்வத்தை அழித்து, அகங்காரம் அடங்கி, உன்னிடம் தோற்று; நீ பள்ளி கொண்டிருக்கும் ஹம்சத்தூளிகா மஞ்சத்தைச் சுற்றி கூட்டம், கூட்டமாய் வந்து உன்னைப் பணிந்துள்ளனர்.

அவர்களைப் போல நாங்களும் உன் கல்யாண குணங்களிடம் தோற்று, கர்வம், அகங்காரம் நீக்கி., உன் கருணைப்பார்வைக்காக உன் படுக்கையைச் சுற்றி பக்தியோடு நிற்கிறோம், என்றனர்.

வாய் பக்கம் கொஞ்சம் திறந்திருக்கும் சதங்கை “கிண்கிணி”. கண்ணா! அந்த கிண்கிணியின் வாய் போல, சிறிதாய் மட்டும் மலர்ந்த செந்தாமரைப் பூ போல அசையும் உன் கண்களால் சிறிது சிறிதாக எம்மேல் விழிக்கலாகாதா?

சந்திரனும் சூரியனும் ஒரே நேரத்தில் உதயமாவது போல், பக்தர்கட்கு கருணையும், குளர்ச்சியும்; பகைவருக்கு எச்சரிக்கையும், வெப்பமும் கொடுக்கும் உன் அழகிய கண்களிரண்டும் கொண்டு அருள் நோக்கு அருளினால் போதும். உன்னைப் பிரிந்து அநுபவித்த கொடுமையான சாபம் நீங்கி விடும். உன் அருட்கடாட்சம் பெற்று மகிழ்வோம், என்று கண்ணனை நெக்குருகி பிரார்திக்கின்றனர்.

“சிறுச்சிறிதே விழியாவோ?“, பகவானின் முழு கடாட்சம் அல்லது அருட் பேரொளியை தாங்க இயலாது. அது கூசச் செய்து விடும். பகவான் தரிசனம் பங்கப்படும். எனவே சிறுச்சிறிதாய், பொறுக்கப் பொறுக்க மெதுமெதுவாய் எங்களை கண் திறந்து பார்; கடைக்கண் பார்வையாய் பார். உன் முழு தரிசனத்தையும் கண்டு அநுபவிப்போம், என்பதாம். நீயும் எங்களை அதிக நேரம் பார்த்து பூரண அருள் வழங்கு என்றும் பொருள்.

எங்கள் குற்றங்குறைகளை பார்க்க வேண்டாமென்று பாதி மூடியும், கடாட்சிக்க வேண்டி பாதி திறந்தும் சிறுச்சிறிதே……..என்றும்.

நண்பர்களே! பகவான் முன் “நான்” ஆகிய கர்வம் முற்றிலும் அழியனும். படைத்த அவனிடம், அவன் பொருளாய் நம்மை முழுசாய் ஒப்படைக்கனும்.

“ஆண்டாள் திருவடிகளே சரணம்”

“ஓம்! நமோ நாராயணா!!”

Image courtesy (With Thanks): Sourced via Google from Dhinasai site.

You may also like