பாசுரம் – 20

by Parimelazhagan P
126 views

நேற்றைய காட்சி இன்றைய பாசுரத்திலும் தொடர்கிறது. ஒற்றுமையாய் இருக்கும் தம்பதியரிடம், ஒருவரை மட்டும் பிரித்து பேசினால் மற்றவர் அதை ஆமோதிப்பாரா? நாமெல்லாம் இதை உணரும் வண்ணம் உள்ளது பகவான் பிராட்டியின் அன்பின் நெருக்கம்.

கண்ணனும், நப்பின்னையும் எழுந்து வரவில்லை, வார்த்தை சொல்லவில்லை என்றதும் ஆய்ச்சியர்கள் செய்வதறியாது பதறுகிறார்கள். நப்பின்னையை நோக்கி, ‘தத்துவம் அன்று; தகவு’ என்று குறைபட்டதினால் தான் பிராட்டி வரவில்யோ? என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால் நப்பின்னையோ, ஆய்ச்சியர் குறைபட்டுக் கொண்டதில் வருத்தம் அடையா விட்டாலும், பகவான் கண்ணனின் திருவுள்ளம் அறிந்து, அதன்படிச் செய்யலாம் என்று நினைத்து உறங்குகிறாள். “என்னே பதிபக்தி”.

என்ன இருந்தாலும் கண்ணன் ஆயர்பாடிக்குச் சொந்தமானவன், நம்மவன் என்றெண்ணி, ஆய்ச்சியர்கள் கண்ணனையே மீண்டும் எழுப்ப முயல்கின்றனர். பக்தர்களைக் காக்கும் பரிவையும், எதிரிகளை பயந்து நடுங்கச் செய்யும் வீரத்தையும் சொல்லி புகழ்ந்து பாடுகிறார்கள். ஆனாலும் கண்ணன் வாய் திறக்கவில்லை. மீண்டும் பதற்றம், கவலை ஆய்ச்சியர்களிடம். என்ன செய்வது?!

நாம் அவனது பிராட்டியை குறைபட்டுப் பேசியதால் தான் கண்ணன் நம்மை வெறுக்கிறானோ? எனப் பயந்த ஆய்ச்சியர், மீண்டும் நப்பின்னையை புகழ்ந்து பேசுவோம்; அதனால் கண்ணன் கோபம் குறையுமென்றெண்ணி, மீண்டும் நப்பின்னையை புகழ்ந்துரைத்து அவள் தயவினாலேயே காரியம் சாதிக்க நினைக்கிறார்கள்.

புருஷன் பொண்டாட்டி நல்ல புரிதலோடு ஒற்றுமையாய் இருந்தால் விளையும் சிறப்பை இதன் மூலம் அறிவோம்.

“நீராடச் செய்யுங்கள் என்று கண்ணன், நப்பின்னையை எழுப்புதல்”

முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!
செப்பம் உடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!

செப்பன்ன மென்முலை., செவ்வாய், சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்!
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்.

விளக்கம்:

ஆயர்குலத்துதித்த மாயக் கண்ணனே! நீ நித்திய வாசஞ்செய்யும் வைகுண்டத்தில் உன்னனோடு வசிக்கும் முப்பத்தி மூன்று வகை தேவர் கூட்டத்தாருக்கு, துன்பம் வருவதற்கு முன்பே நீ எதிரிகளிடத்திற்குச் சென்று., அவர்கள் நடுக்கத்தைப் போக்கும் மிடுக்கான வீரனல்லவா! எம் பொருட்டு எழுந்து வா.

பகைவர்களை நொடியில் அழிக்கும் வல்லமையும், நீதி, நேர்மையுடனும் விளங்கும் கண்ணனே! எம் போன்ற பக்தர்களைக் காக்க, எங்கள் பகைவர்களை பயமுறுத்தி காய்ச்சல் கொடுப்பவனே! தயை கூர்ந்து எழுந்து வந்தருளுவாயாக!

அப்படியே நப்பின்னையை மீண்டும் எழுப்புகிறார்கள். நப்பின்னை நங்காய்! நீ எப்பேர்ப்பட்ட அழகுடையவள்! மிருதுவான, செம்பொன் கலசம் போலும் திருமுலைத் தடங்கள், சிவந்த திருப்பவளம் போலும் திருவாய், இல்லையோ என்றெண்ணுமளவுக்கு சிறுத்த, அழகிய இடையும் கொண்ட எம்பிராட்டியே! பெரியபிராட்டி மகாலட்சுமிக்கு ஈடானவளே! நீயும் எம்பொருட்டுத் துயில் நீங்கி எழுந்து வா, என்றனர்.

மேலும், எங்கள் நோன்பு சிறக்க வேண்டி எங்களுக்குத் தேவையான விசிறி போன்ற ஆலவட்டமும், வெங்கலக் கண்டி எனும் கண்ணாடியும் தந்து, கூடவே உன் மணாளனான கண்ணனையும் அனுப்பித் தந்து., உடனடியாக எங்களை நீராடச் செய்ய வேண்டுகிறோம் என வணங்குகின்றனர்.

“முப்பத்து மூவர் அமரர்” – அஸ்ட வசுக்கள்-8, ஏகாதச ருத்திரர்-11, துவாதசாதித்தியர்-12, அசுவினி தேவதைகள்-2, ஆக மொத்தம் 33. இவர்களை முன்னிட்ட தேவர்கள் கூட்டமே “முப்பத்தி முக்கோடித் தேவர்கள்” எனப்படுகிறது.

விசிறி எனும் ஆலவட்டம்: பகவான் சேவையில் ஈடுபட்டோரின் அகப்பற்று, வெளிப்பற்று என்ற மாசுகளை விசிறி விரட்டுவதற்கு என்பதாம்.

வெங்கலக்கண்டி எனும் கண்ணாடியில் நம் ஸ்வரூப ஞான ஒளியை தரிசிக்கும் குறிப்பு.

நண்பர்களே! பகவான், பிராட்டியின் நெருக்கத்தையும், பக்தர்கள் மேல் அவர்களுக்கு இருக்கும் ஈடுபாட்டையும் உணரும்போது, நாமும் பகவான் குடும்பத்துடன் ஒன்றும் உணர்வு ஏற்படுகிறதல்லவா! வாழ்க!

“ஆண்டாள் திருவடிகளே சரணம்”

“ஓம்! நமோ நாராயணா!!”

You may also like