மாயக்கண்ணன் அல்லவா? மாயங்கள் செய்வதில் அவனுக்கு நிகர் யார்? இன்றைய பாசுரம் அலாதி ருசியானது. கண்ணனும் நப்பின்னையும் நடத்தும் சுவாரஸ்யமான நாடகம்.
நேற்றைய பாசுரத்தில், மனைவியை முன்னிட்டுக் கணவனை எழுப்ப எண்ணிய ஆச்சியர், நப்பின்னைப் பிராட்டியை பலவாறாய் புகழ்ந்து பாடி எழுப்பினர். நப்பின்னையும் ஆய்ச்சியர் மேல் கருணை கொண்டு, எழ முற்படுகிறாள். ஓரக் கண்ணால் இதை கண்ணுற்ற கண்ணன், ஆகா! ஆய்ச்சியர்கள் நம்மவர்கள் ஆயிற்றே, நம் அருளைத்தானே வேண்டுகின்றனர்; நமக்குப் பதில் நப்பின்னை எப்படி போய் கதவைத் திறக்கலாம்? என்று நினைத்த மாத்திரத்தில் நப்பின்னையை எழவொட்டாது இழுத்து அணைத்துக் கொள்கிறான். தானும் உறங்குவது போன்ற பாவனையில் கண்ணை மூடிக் கொள்கிறான். பிராட்டியும் பெண்தானே! கண்ணன் அணைப்பில் மகிழ்ந்து அவனோடும் கட்டுண்டு மலர்கிறாள்.
ஆய்ச்சியர் வெளியேயிருந்து, கண்ணா! நீ வெளியே வரக் கூட வேண்டாம். உன்னையே எண்ணி நோன்பிருக்கும் எங்களுக்கு ஒரு வார்த்தையாவது சொல்லி அருள் செய்யக் கூடாதா? என்றனர். இப்போது நப்பின்னை மாயம் செய்கிறாள். இந்தப் பெண்கள் நம்மைத்தானே அழைத்தார்கள், எங்கே கண்ணன் நம்மையும் மீறி முன்சென்று ஆய்ச்சியரிடம் பேசி விடுவானோ என்று கண்ணன் கழுத்தை அழுத்தி படுக்கையில் கிடத்தி, “எதுவும் பேசாதே” என்று வாயில் விரல் வைத்துத் தடுக்கிறாள். இனி கண்ணன் பேச முடியுமா? மனைவியின் மந்திரத்திற்கு மயங்குகிறான்.
வெளியே ஆய்ச்சியர்கள், கண்ணன் நம்மவன். இந்த நப்பின்னை தான் அவன் அணைப்பு சுகத்தில் மயங்கி நமக்கு உதவி செய்ய மறுக்கிறாள் என்றெண்ணி, பெண்ணுக்கு பெண்ணே உதவாத இந்த நப்பின்னை ஒரு கண நேரம் கூட பிரிய மனமில்லாது புருஷனோடு உறங்குவது தகுமா? என்று புலம்புகின்றனர்.
மாயக்கண்ணன் மனைவியை மீண்டும் எழுப்புதல்.
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்.
மைத்தடங் கண்ணினாய்! நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்,
எத்தனையேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
சுற்றிலும் குத்து விளக்குகள் எரிய, யானைத் தந்தத்தால் கால்கள் செய்த அழகிய கட்டிலில், மெத்மெத்தென்றிருக்கும் பஞ்ச சயனத்தில், கொத்தாய் நறுமண பூக்களால் தன்னை உனக்காக அலங்கரித்துக் கொண்டிருக்கும் நப்பின்னைப் பிராட்டியை, மிகுந்த வாத்ஸல்யத்தோடு மார்போடு இன்பமாய் அணைத்து உறங்குகின்ற, பரந்த உன் மார்பிலும் மாலைகளணிந்த எங்கள் கண்ணனே! உன் திருவாய் மலர்ந்தருளி எம்பொருட்டு ஆசி வழங்குவாய், என கோபியர் கேட்டனர்.
நப்பின்னையே, எங்கள் அன்னையே! அஞ்சன மை தீட்டி இன்னும் பெரிதான, அழகிய கண்களையுடையவளே, இது என்ன விளையாட்டு? நீ உன் கணவன் கண்ணனை, நாங்கள் எவ்வளவோ வேண்டியும் எழுப்ப மறுக்கிறாய். ஒரு கணம் கூட கண்ணனை பிரிய சம்மதமில்லாமலும், சக்தியற்றவளாயும் இருப்பது உன் சுவாபத்திற்கும் தகுதிக்கும் ஒத்த செயலாயில்லை. இருவரும் எங்களுக்கு தரிசனம் தாருங்கள் என்றனர்.
‘பஞ்ச சயனம்’ – அழகு, குளிர்ச்சி, மென்மை, சுகந்தம், வெண்மை என்ற ஐந்து குணங்களுடைய பஞ்சு, பட்டு, வெண்கம்பளம், மலர்கள், தளிர்கள் ஆகியவைகளால் ஆனது பஞ்சசயனம். ஆகா! நினைக்கவே சுகம்.
‘மைத்தடங் கண்ணிணாய்’ என்றது, பிராட்டியே! நீ அஞ்சன மை தடவி., கண்களை மேலும் அழகாக்கி உன் கணவன் உன்மேல் மேலும் பிரியமாயிக்கச் செய்கிறாய். நாங்கள் நோன்பின் பொருட்டு மையிடவில்லை; மீண்டும் உன் போல் மையிட்டெழுதி, மலரணிந்து கணவனைக் கூடச் செய்வது உன் கடமை, என்பதாம். புருஷனோடு சேர்ந்திருக்கும் பெண்கள் தங்கள் கடமையை மறந்து விடலாகாது என்பதும் உட்பொருளே.
நண்பர்களே! “பஞ்ச சயனம்” ஆசையை கிளப்புகிறதா? தப்பில்லை. பகவானின் அநுபவங்கள், பாமரனும் அநுபவிக்கவே. அன்பில் ஊறுவோம். பக்தியில் பக்குவமடைவோம்.
“ஆண்டாள் திருவடிகளே சரணம்”
“ஓம்! நமோ நாராயணா!!”