ஆயர்பாடி பெண்கள் நோன்பு நோற்க இவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்களே, நாமும் இவர்கள் நோன்புக்கு ஆதரவாக உதவ வேண்டும் என்று மழை தேவதை “பர்ஜந்யன்” அதாவது மேகம் அருகே வந்து கோபியரின் கோரிக்கைக்கு காத்து நிற்கிறான். பெருமாளின் பக்தைகள் வேறு கடவுளை வணங்க மாட்டார்கள் என்பதால் பர்ஜந்யன்., இப்பெண்களின் கட்டளையை நிறைவேற்றச் சித்தமாய் உள்ளான்.
பாவை நோன்பின் போது சிந்தனை, சொல், செயல் யாவையும் கண்ணனை பற்றியே இருக்க வேண்டுமல்லவா. அதனால், மேகம் கருமையாய் திரண்டு மழை மேகமாய் மாறுவதை, ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கருத்து, என்று பாடுகிறார், ஆண்டாள். கண்ணனின் கருமையே மழை மேக உவமையாயிற்று.
ஆழி மழைக்கண்ணா! ஒன்றும் நீ கை கரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய்கறுத்துப்
பாழியந் தோளுடைப் பற்பநாபன் கையில்
ஆழி போல் மின்னி, வலம்புரி போல் நின்றதிர்ந்து,
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்,
வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
கம்பீரமான மழை மேகமே! நீ கடலில் சென்று., அதன் நடுவில் முங்கி மூழ்கி வேண்டுமளவு நீர் எடுத்து ஆகாயம் எங்கும் சூழ்ந்து, எம்பெருமான் கண்ணனின் திருஉருவம் போல் கறுத்து கன மழை மேகமாக மாறிவிடு.
பிறகு, வலிமை வாய்ந்த அழகிய தோள்களைக் கொண்ட எம்பெருமான் கையிலுள்ள சக்கரம் போல் வானமெங்கும் மின்னலாய் மின்னி, அவன் கையிலுள்ள வலம்புரி சங்கின் ஓசை போல் தொடர்ந்து இடியாக முழங்கி, எம்பெருமான் கை கொண்ட சார்ங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்பட்ட., உதைத்துத் தள்ளிய அம்புகள் போல ஓயாது சரஞ்சரமாய் மழை பொழிந்து இந்த உலகமனைத்துக்கும் போதுமான செழிப்புடன் மழை பெய்ய கட்டளை இட்டனர். அப்போது நாங்களும் பக்தியோடு அதிகாலை மார்கழி நீராட வேண்டுவதும் இதுவே என்று ‘பர்ஜன்ய’ தேவதையிடம் கோரினார்கள்.
“ஒன்றும் நீ கை கரவேல்”: என்றது, மேகமே! உன் வள்ளல் தன்மையில் ஏதும் மாறதபடி, உன்னிடத்தில் மிச்சமாய் ஏதும் வைத்துக் கொள்ளாது மழை பெய்ய வேண்டுகிறார். நீ ஒன்றும் வைத்துக் கொள்ளாதே, என்பது நோன்பிருக்கும் சிறுமிகளின் உள்ளத்தை ஒத்திருக்கிறது.
மழை வேண்டி, நாடு செழிக்க பெரியவர்களின் முயற்சி மட்டுமல்ல, சிறுமிகளான எங்கள் வேண்டுதலையும் கண்ணன் மனமுவந்து ஏற்று அவனருளோடு நல்மழையாய் இறங்கி வந்து உலகத்தையும் தங்களையும் குறைவின்றி காத்தருள்வான் என்ற கடும் பக்திக் குறிப்பும் வெளிப்படுகிறது.
உயர்ந்த பக்தியின் வெளிப்பாடு எத்தனை சக்தி உடையது, எவ்வளவு நம்பிக்கை ஊட்டுவது என்பதைப் பார்த்தீர்களா? சிறந்த பக்தியில் செயல் படுவோம். சிறப்படைவோம்.
“ஆண்டாள் திருவடிகளே சரணம்”
“ஓம்! நமோ நாராயணா!!”
Image courtesy (with Thanks): Sourced via Google from trident talkies site.