பாசுரம் – 16

by Parimelazhagan P
97 views
பாசுரம் – 16

சென்ற பத்துப் பாசுரங்கள் மூலம் ஆயர்பாடி முழுவதும்., ஒருத்தி பத்து மாளிகை வீதம் எழுப்ப, ஐந்து லட்சம் குடியில் உள்ள ஆய்ச்சியர்கள் விழித்தெழுந்து கூட்டமாய்., கண்ணனுக்குப் பள்ளியெழுச்சி பாடுவதற்காக நந்தகோபன் அரண்மனையை சென்றடைந்தார்கள்.

இன்று முதல் ஏழு பாசுரங்களில் ஆய்ச்சியர்., அவர்களுக்கு மிகவும் பிரியமான கண்ணனை துயில் எழுப்பப் போகிறார்கள்.

நந்தகோபன் ஆயர்களின் தலைவன்; கண்ணன் அங்கே வளர்வதால், நந்தகோபன் திருமாளிகையில் காவல் அதிகமாக இருக்கிறது. கண்ணன் உறையும் இடமாதலால் கோவிலாகவே போற்றப் படுகின்றது. “கோயில் காப்பானே” “வாயில் காப்பானே” என்று இச்சிறுமிகள் அங்கு காவலுக்கு நிற்போரை அழைக்கின்றனர்.

மாளிகையின் வெளியே காவலுக்கு நிற்பவன் ‘கோயில் காப்பான்’ கொடிகள் தோன்றும் தோரண உள் வாசலைக் காப்பவன் ‘வாயில் காப்பான்’. சிறுமியர்களுக்கு அவர்களை வேறு எவ்வாறு அழைப்பது எனத் தெரியாததால்., அவர்களின் தொழிலை குறிப்பிட்டு அழைக்கிறார்கள். தொழிலையிட்டு அழைப்பதும் பாக்கியமே. இன்றும் நம்மோடு இருக்கிறது இவ்வழக்கம். பூசாரி, ஆசிரியர், ஓட்டுநர்., நடத்துநர் என்று. பாசுரம் பார்ப்போம்.

“நந்தகோபன் திருமாளிகையில் கோயில்/வாயில் காப்பானை எழுப்புதல்”

நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே! கொடித் தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை

மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம், துயிலெழப் பாடுவான்.
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.

விளக்கம்:

ஆயர்குலத் தலைவன், நந்தகோபன் திருமாளிகையை காவல் காப்பவனே! கொடித் தோரணங்கள் துலங்கும் தோரணவாசல் காப்பவனே! சிறந்த மணிகள் பொருந்திய கதவின் தாப்பாளை எங்களுக்காகத் திறந்து விடுங்கள். எங்களின் நோன்பு சிறக்க, மங்கல ஒலி எழுப்பும் பறைகளைத் தருவதாக., அற்புதங்கள் செய்யும் மாயனும், கருநீல ரத்தினத்தின் நிறமும் உடைய எங்கள் கண்ணன், மணிவண்ணன் நேற்றே எமக்கு வாக்களித்துள்ளான்.

வாயில் காப்போரே! எங்கள் நாயகன் கண்ணனை துயில் எழுப்பும் பொருட்டு நாங்கள் அனைவரும் அங்கம் துலக்கி அவன் புகழ் பாடி தூயவர்களாய் வந்திருக்கின்றோம். நீங்கள் எங்களின் இந்த புனித முயற்சிக்குத் தடையாக மறுப்பேதும் முதலில் சொல்லாமல், மிகுந்த பிரியமுடன் ஒன்றோடு ஒன்றாய் இணைந்திருக்கும் கதவைத் திறந்து எங்களுக்கு வழி விடுங்கள் என்று பணிவோடு விண்ணப்பிக்கின்றனர்.

“துயிலெழப் பாடுவான் வந்தோம்” கண்ணன் பள்ளியெழுச்சி ஆகும் போது, அந்த அழகை, ஆனந்தத்தை கண்ணாறக் கண்டு வாயாறப் பாடி மகிழ்வதை, வாழ்வின் பெரும் பாக்கியமாகக் கருதி வந்துள்ளோம். இந்த சுகானுபவத்தை, இனிமையை குலைக்கும் விதத்தில் மறுப்பேதும் சொல்லி விடாதீர்கள் என நேசத்துடன் பணிகிறார்கள்.

இன்றும் கூட, நல்ல காரியங்கள், மங்கள காரியங்கள் நடைபெறும் நேரத்தில் அமங்கலச் சொற்களோ., ஒலியோ எழுப்பக் கூடாது என்பது நடைமுறை. மீறி ஏதேனும் யாரேனும் சொல்லி விடலாகாது என்பதற்காகவே நாதசுர, மேள தாள முழக்கம் நமது பழக்கம்.

பகவான் நம்மைப் படைத்து இயக்குகிறவன். ஆயர்பாடி பெண்கள் அவனையே இயக்கி மெய்மறக்கின்றார்கள். இறை சிந்தனை இத்தனை அற்புதம் செய்ய வல்லதா?

“ஆண்டாள் திருவடிகளே சரணம்”

“ஓம்! நமோ நாராயணா!!”

You may also like