பாசுரம் – 14

by Parimelazhagan P
107 views
பாசுரம் – 14

ஆச்சரியம் தான்! இன்னும் பள்ளியெழுச்சி முடிந்த பாடாய் இல்லை. பொழுது விடிந்ததற்கு பல அடையாளங்கள் சொல்லியாயிற்று. பகவான் பெருமை, பல பாடியும் இன்னும் ஒருத்தி உறக்கத்தில். கண்ணனின் சுகாநுபவத்தில் இருந்து விடுபட முடியாத “வைராக்கியம்” அவளை. கொடுத்த வாக்கையும் மீறி துயில் கொள்ளச் செய்கிறது.

“நங்காய்”, “நாணாதாய்”, “நாவுடையாய்” என்று இவளைப் பாசமிகுதியால் ஆண்டாள் நாச்சியார் வருணிக்கிறார்.

கண்ணன் வாழும் ஆயர்பாடியில் எச்செல்வத்திற்கும் குறைவில்லை. ஆயர்பாடி மக்கள் அனைவருக்கும் சிறந்த வாழ்க்கை என்பது கண்ணனின் கருணை. இந்தப் பெண்ணை, நங்காய், என்றது பெண்களில் மிகச் சிறந்த குணவதி என்றும், வாய் பேசும் நங்காய், என்றது. நீ வாய் மட்டும் பேசுவதில் வல்லவள்; செயலில் ஒன்றும் இல்லை என்று செல்லமாய் கோபிக்கின்றனர். காரணம், இவள் தான் முந்தின நாள் இரவு, நாளைக் காலையில் நானே முதல் ஆளாய் வந்து உங்களையெல்லாம் எழுப்புவேன் என்று வார்த்தை சொன்னவள்; இன்னும் உறங்குகிறாள். இருந்தாலும் “நாவுடையாய்”…. இனிமையாகப் பேசுபவளானதால், இவள் பேச்சினிமையை கேட்க விரும்பி, இவள் பாடாய் படுத்தினாலும் இவள் மேல் அன்பு குறையவில்லை.

“கொடுத்த சொல்லை மீறி உறங்குபவளை எழுப்புதல்”

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பினகாண்

செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்

எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்

சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.

விளக்கம்:

எங்களில் சிறந்தவளே! உங்கள் வீட்டுப் பின்புறமுள்ள புழக்கடைக்கு சென்று பார். பொழுது நன்றாய் விடிந்தற்கு சாட்சியாய் அங்குள்ள சிறிய குளத்தில் செங்கழுநீர் மலர்கள் மலர்ந்திருக்கின்றன. ஆம்பல் மலர்கள் குவிந்து கொண்டு இருக்கின்றன. நிற்க, வீதியில் செங்கல் பொடி நிறத்தில் காவி உடை அணிந்த, வெண்ணிற சுத்தமான பற்களுடைய துறவிகள் தங்கள் கோயில் நோக்கி சங்கு ஊதும் பொருட்டு விரைகிறார்கள். காலையில் கோயில் நடை திறக்கும் போது சங்கு மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்குவது தெரிந்தது தானே?

ஆனால் எங்களை முன்னமே வந்து எழுப்புகிறேன் என்று வாய் பேசி விட்டு இப்பிடி கிடந்து உறங்குகிறாயே; சொன்ன சொற்படி நடக்கவில்லையே என்ற வெட்கம் சிறிதும் உன்னிடமுண்டா? சரி, இருந்தாலும் எப்போதும் எங்களிடம் இனிமையாகப் பேசும் அன்புத் தோழி அல்லவா! எழுந்திரு.

நாமெல்லாம் ஒன்றாய் சேர்ந்து சென்று, சங்கு சக்கரம் தரித்து, நீண்ட கைகளுடன், தாமரைக் கண்ணனான “திருமால்”ஐ பாடி வருவோம், திருமால் திருவாய் மொழிப் பாடுவதே நம் நோன்பின் நோக்கம், பலன், மற்றெல்லாம். எனவே எழுந்திராய்.

‘ஏல் ஓர்’ என்றால், தகுந்த ஒப்பற்ற பெண்ணே என்றபடி. ‘எம்பாவாய்’ என்றது எங்களின் அன்றைய நோன்பு முடிகிறது என்ற பொருளில்.

விஷ்ணு பக்தியில் “ஞான பக்தி வைராக்கியம்” உடைய ஆச்சாரிய பாகவதர்களை மற்றவர்கட்கு பகவத் சம்பந்தத்தை உண்டாக்க வேண்டி எழுப்புவது இப்பாசுரத்தின் உட்கருத்து.

நண்பர்களே! மனிதர்கள் பலவிதம் என்றாலும் ஒவ்வொருவரிடத்தும் ஒரு தனிச்சிறப்பு உறைந்துள்ளது தெளிவாகிறது. அனைவரும் பக்தியில் இணைந்து பகவான் நாமம் பாடுவோம்; அனைவருமே பகவான் கருணைக்குப் பாத்திரமானவர்களே!

“ஆண்டாள் திருவடிகளே சரணம்”

“ஓம்! நமோ நாராயணா!!”

You may also like