பாசுரம் – 2

by Parimelazhagan P
118 views
பாவை விரதம் மேற்கொள்ள, கடைப்பிடிக்க வேண்டிய நியமங்களைக் கூறுதல்.

பாவை விரதம் மேற்கொள்ள, கடைப்பிடிக்க வேண்டிய நியமங்களைக் கூறுதல்.

வையத்து வாழ்வீர்காள்! நாமும்நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ; பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி

மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாறெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

கிரிசைகள் – கடைப்பிடிக்கும் முறைகள்.

ஐயம் – உபகாரம், உதவி.
பிச்சை – இல்லாதவர்க்கு பிச்சையாக உணவு கொடுப்பது.
ஆந்தனையும் – திருப்தி ஏற்படும் அளவிற்கு., வேண்டுமளவுக்கு.
தீக்குறள் – பிறருக்குத் தீமை ஏற்படும்படி கோள் சொல்லுதல்.

விளக்கம்:

கண்ணன் மனமுவந்து வந்து பிறந்திருக்கும் ஆயர்பாடியில் பிறந்த பாக்கியசாலிகளே! பாவை நோன்பின் போது நாம் கைக்கொள்ள வேண்டிய நியமங்கள், விதிமுறைகளை கேளுங்கள். அவை இரண்டு வகைப்படுகிறது –  பின்பற்ற வேண்டியவை., விலக்கி வைத்து விரத காலம் மட்டும் செய்யக் கூடாதவை.

பின்பற்ற வேண்டிய, ‘பிரவ்ருத்தி’ நியமங்கள் மூன்று. திருபாற்கடலில் பையத் துயில்கின்ற அதாவது யோகநித்திரை செய்கின்ற திருமாலின் பொருட்டு மூன்றையும் கடைப்பிடிக்கனும்.

1) பரமன் அடி பாடுதல்., 2) அதிகாலை நீராடுதல்., 3) வேண்டியவர்களுக்கு உதவியும், பிச்சை கேட்போருக்கு தாராளமாய் பிச்சையிட்டு மகிழ்தல்.

இனி விட்டுவிட வேண்டிய, ‘நிவ்ருத்தி’ ரூபமான நியமங்கள் நான்கு. 1) நெய், பால் உண்ணக் கூடாது., 2) மையாலும் மலர்களாலும் கோபியர்கள் தங்களை அலங்கரித்துக் கொள்ளக் கூடாது., 3) விரத காலமாகையால் பிறருக்குத் துன்பம் தரும் செயல்களைச் (செய்யாதன), செய்யக் கூடாதவைகளை செய்யாதிருத்தல்., 4) தீமை ஏற்படுத்தும் கோள் மூட்டும் செயல்களிலும் ஈடுபடக் கூடாது.

அதாவது, நோன்பின் போது நமக்கு விருப்பான உணவு, அலங்காரம், அரட்டைகளை விலக்கி வைத்து, கண்ணனுக்குப் பிரியமான, அவனருள் பெற உதவும் செயல்களான பரோபகாரம் செய்து கண்ணன் அன்புக்கு பாத்திரமாக வேண்டும் என்கிறார் ஆண்டாள் நாச்சியார். மேலும், மார்கழிப் பூக்கள் யாவும் மாலவனுக்கே அன்றி மற்றவர்க்கு இல்லை என்பதால், மலரிட்டு நாம் முடியோம் என்றார். கண்ணனைக் காணாமல் கண்களுக்கு மையிட்டு அழகு செய்ய மாட்டோம். அவன் திருவடி பாதமலரே நம் தலைமேல் சூட வேண்டிய மலரென்கிறார்.

“உய்யுமாறு எண்ணி உகந்து” – என்று ஆண்டாள் சொல்வது, திருமாலையே எதிலும் எப்பொழுதும் கண்டு அவன் பக்தியை முழுமையாய் அநுபவிக்க வேண்டும் என்கிறார். உண்ணும் உணவு, பருகும் நீர், மெல்லும் வெற்றிலை என யாவற்றிலும் ருசிப்பது கண்ணனே என்று எண்ணி அநுபவிக்கும் வண்ணம் பக்தியில் திளைக்க வேண்டும் என்கிறார் ஆண்டாள்.

நாமும் முழுசாய் பெருமாளிடம் சரணடைவோம்.

“ஆண்டாள் திருவடிகளே சரணம்”

“ஓம்! நமோ நாராயணா!!”

Image courtesy (With Thanks): Vedicfolks Blog via Google

You may also like