பாசுரம் – 8

by Parimelazhagan P
94 views
பாசுரம் – 8

பறவைகள் சத்தம், சங்க நாதம், மந்திர உச்சாடனை என்று பலவாறாக பொழுது விடிந்ததை உணர்த்தி பல கோபியரை எழுப்பியாகி விட்டது. இன்று இவர்கள் கூட்டத்திலேயே முக்கியமான பக்தையை எழுப்புகிறார்கள். அவள் தான் “கோதுகலமுடைய பாவாய்”. ‘கௌதூஹலம்’ என்னும் வடமொழிச் சொல்லின் விகாரம்., கோதுகலம். ஆசை என்று பொருள். கண்ணன் மேல் ஆசையால் கடும் பக்தி காட்டும் முதல் நிலை தகுதி உடையவள். கண்ணனுக்கும் மிகவும் இஷ்டமானவள். இவளை அழைத்துக் கொண்டு போனால், இவள் பொருட்டு மற்றெல்லோருக்கும் கண்ணன் அருள் பூரணமாய் கிடைக்கும் என்பதால்., ஆசையாய் எழுப்புகிறார்கள்.

“கோதுகலமுடைய பாவாய் எழுந்திராய்”

கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலமுடைய

பாவாய்! எழுந்திராய்; பாடிப்பறை கொண்டு
மாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவாவென்றாராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

விளக்கம்:

கண்ணனால் பெரிதும் விரும்பப்படும் அழகிய பெண்ணே! கிழக்கில் வானம் வெளுத்து விட்டது. நம் ஆயர்கள் பால் கறப்பதற்கு, எருமைகளை அவிழ்த்து விட்டு அவை பனிப்புல் மேய்வதைப் பார். ஆயர்பாடி பெண்கள் நீராடப் போவதை உன் வரவுக்காக தடுத்து, உன்னை அழைத்துப்போக வந்தோம். உடனே துயில் நீங்கி நீராட வா என்று அழைக்கிறார்கள்.

நாம் அனைவரும் நீராடி, கண்ணனின் வீரப்பிரதாபங்களைப் பாடி, நோன்புக்குரிய பறை தர வேண்டுவோம்.

நம்கண்ணன், மாவாய் பிளந்தவன்; மல்லரை மாட்டியவன். கம்சனால் கண்ணனை அழிக்க அனுப்பப்பட்ட குதிரை முக கேசி என்னும் அசுரனின் வாயைப் பிளந்து அழித்தவன். மற்றும், கம்சனால் அனுப்பப்பட்ட சாணூராதி மல்லர்களுடன் போரிட்டு அழித்தவன், துரியோதனனின் நிலவறை மல்லர்களையும் அழித்த பராக்கிரமசாலி, கண்ண பரமாத்மா அல்லவா. அப்பிடிப்பட்ட தேவர்களுக்கெல்லாம் தேவனான கண்ண பகவானை நாம் அனைவரும் சென்று உள்ளன்போடு உருகி வணங்கினால், பகவான் நம் பக்தியில் நெகிழ்ந்து, ஆ..ஆ,. என்று இரங்கி நம் குறை அனைத்தையும் கேட்டு அருள் செய்வான், என்று பாடுகிறார் ஆண்டாள் நாச்சியார்.

“பக்தர்களுக்கு அருளும் பரம தயாளன்; பக்தர்களின் பாமாலைக்கும் பூமாலைக்கும் விரும்பி வருபவன்” என்பதைத் தெரிந்து தானே, பூ தேவி, ஆண்டாளாய் ஆசையோடு இம்மண்ணில் அவதரித்தார்!

நண்பர்களே! இறைவன் தொண்டே இவ்வுலக வாழ்வில் செம்மையாய் வாழ நம்மை ஊக்குவிக்கும். தொண்டு புரிவோம். தொழுது மகிழ்வோம்.

“ஆண்டாள் திருவடிகளே சரணம்”

“ஓம்! நமோ நாராயணா!!”

Image courtesy (With Thanks): Sourced via Google from VedicFolks site

You may also like