மகாவிஷ்ணுவின் அவதாரம், கருமைநிறக் கண்ணன் மேல் இவ்வளவு பக்தி செலுத்தி நோன்பு நோற்கின்றோமே, நாமெல்லாம் சாதாரண ஆயர்குல மக்களாயிற்றே, தெரிந்தும் தெரியாமலும் பல பிழைகளை ஏற்கனவே செய்துள்ளோமே; நமக்கு அந்த கண்ணபிரான் கடைக்கண் பார்வை மூலம் அருள் கிட்டுமா? நாம் அவ்வாறு செய்த பிழைகள் நோன்பிற்கு இடையூறாகாதா? என கோபியர்களில் ஒருத்தி தன் சந்தேகத்தோடு கேட்க, அவளுக்கு பதில் சொல்வது போல் அமைந்துள்ள பாசுரம்.
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூயப் பெருநீர் யமுனைத் துறைவனை,
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை,
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை,
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க,
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்!
விளக்கம்:
ஆயர்குலத்தை மேன்மை பெருவிக்க வந்துதித்த கண்ணனை பக்தி சிரத்தையோடு நோன்பிருந்து, பரிசுத்தமான மனதோடு நறுமண மலர்களையும் தூவி, வாயார வாழ்த்தி கையாரத் தொழுதால், நம் வாழ்வில் இதற்கு முன் செய்த பிழைகளும் இனிமேலும் செய்யும் பிழைகளும் தீயில் அகப்பட்ட பஞ்சு போல உடனே அழிந்து போகும் என்று ஆண்டாள் நாச்சியார் பாவை நோன்பின் பெருமையை பறைசாற்றுகிறார்.
‘மாயனை மன்னு வடமதுரை மைந்தனை’ கண்ணன் பிறர் அதிசயிக்கும் சேஷ்டைகளை புரிவதால், மாயன் என அழைக்கப் படுகின்றான். மேலும் பகவத்ஸம்பந்தம் நிலை பெற்ற வடமதுரை என்னும் துவாரகைக்கு மைந்தன் அல்லவா! மற்றும் தூய்மையான வெள்ளம் எப்போதும் உடைய யமுனாநதியில் வாழ்ந்தவன். ஆயர்பாடியில் தோன்றிய அழகிய மங்கள ஜோதி நம் கண்ணன். வடமதுரையில் பிறந்தான்; ஆயர்பாடியில் தோன்றினான். தாயாகிய யசோதா பிராட்டியின் வயிற்றைத் தன் பிறப்பால் பெருமைப்படுத்தியவன், யசோதா., வயிற்றில் கயிற்றால் கட்டியதால் தாம்புக்கயிறு தடம் பதிந்த வயிற்றான் – தாமோதரன். இந்தப் பெயர் பகவானின் எளிமைக்கு ஒரு சான்றாகிறது.
‘செப்பு’ என்றால் சொல்லு என்று பொருள். பகவானின் இத்தனை பெருமைகளையும் நோன்புக்காலத்தில் வாயாற அனைவருக்கும் கேட்கும்படிக்கு சொல்லி கண்ணனை மனதில் தியானித்து வணங்கி மகிழ வாருங்கள் என ஆண்டாள் நாச்சியார் பேருவகைப் பெருமையோடு நம்மையெல்லாம் அழைக்கின்றார்.
கண்ணனைத் தொழுதால் பிழைகள் தீயினில் தூசாகும்.
“ஆண்டாள் திருவடிகளே சரணம்”
“ஓம்! நமோ நாராயணா!!”
Image courtesy (with Thanks): Sourced via Google from webdunia tamil site.