பாசுரம் – 3

by Parimelazhagan P
106 views
பாசுரம் – 3

“உத்தமன் ” பேர் பாடி., நோன்பிருந்து நீராடினால்., நாடு செழிக்கும்; நல்ல மழை பெய்யும், நீர்வளம், நெல்வளம், பால்வளம் பெற்று எல்லாச் செல்வங்களும் ஆயர்பாடி தேடி வரும் என்கிறார், ஆண்டாள் நாச்சியார்.

திருமாலை “உத்தமன்” என்று பக்தி செய்கிறார் ஆண்டாள். யார் உத்தமன்? பிறரைத் துன்புறுத்தி வாழ்பவன் அதமன்; பிறரும் வாழனும் நாமும் வாழனும் என்று வாழ்பவன் மத்திமன்; தான் அழிந்தாலும் பிறர் வாழவேண்டும் என வாழ்பவனே “உத்தமன்”. திருமால் தேவர்களின் பொருட்டு வாமன அவதாரத்தில் தன்னை குறுகி, மூன்றடி இடம் யாசகம் கேட்டு., தேவர்களைக் காத்த காரணத்தினால் “உத்தமன்” என போற்றப் படுகிறார்.

எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. பிறரை ஆசீர்வாதம் செய்ய உகந்த பாடல் வரிகள்.

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீர் ஆடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெலூடு கயல் உகளப்

பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்

விளக்கம்:

கண்ணனையே எல்லா வகையிலும் உத்தமனாக உசத்தி., வேறு ஆசைகள் யாதுமின்றி நோன்பிருந்து நீராடி மகிழ்ந்து வணங்கினால், நாடெங்கும் மாதம் மூன்றுமுறை மழை பெய்யும். நெல், நீர், பால் வளங்கள் பெருகி மக்கள் யாவரும் சுபிட்சமாய் வாழ்வார்கள் என்று பாவை நோன்பின் சிறப்பான பலனைப் பேசும் பாசுரம் இது. ஆண்டாளின் கருத்துச் செறிவிற்கும், இயற்கை அழகிற்கும் அருமையான எடுத்துக்காட்டு இப்பாசுரம்.

இன்னும் மேலே அநுபவிப்போம்.

“தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து”

நாட்டிற்கும் மக்களுக்கும் எவ்வித தீங்கும் ஏற்படா வண்ணம் மாதம் மூன்று மழை வேண்டுமாம். ஓன்பது நாளுக்கு ஒருநாள் என்ற கணக்கில் மழை கேட்கிறார்ஆண்டாள். அப்படி பெய்தால் தானே நீர்நிலை, வயல்வரப்பு செழிக்கும். தொடர் மழையென்றால் ஆக்கத்திற்குப் பதில் அழிவு ஏற்படும் என்பது நாம் நன்றாய் அறிந்ததே; என்று மழை பெய்தால் தானே ‘நல்லமழை’.

“ஓங்கு பெருஞ் செந்நெலூடு கயல் உகள; பூங்குவளை போதில் பொறி வண்டு கண் படுப்ப”

நீரின் செழிப்பால் செந்நெல் சம்பா ஓங்கி பெரிதாய் வளர்திருக்க, அதன் ஊடே சேல்கெண்டை மீன்கள் அங்குமிங்கும் பாடி தாவி விளையாடுகின்றனவாம். அப்போது அங்கு பூத்துக் குலுங்கும் குவளை மலர்களில், புள்ளி போட்ட பொறி வண்டுகள் தேன் குடித்து மயங்கி, மீன்களின் பாய்ச்சலால் அங்குமிங்கும் அசைவதில் வண்டுகள் மெய்மறந்து தூங்குகிறதாம்.

ஆயர்பாடியில் கனத்த மடியுடைய வள்ளல்களைப் போன்ற பெரிய பசுக்கள், பால் கறக்கும் இடையர்கள் சலிக்காமல், ஏங்காமல் கறக்கும் பொருட்டு, மடியைப் பிடித்து இழுத்ததுமே குடம் குடமாய், பால் வெள்ளமாய் குடங்களை நிறைப்பதாக ஆண்டாள் ஆயர்பாடி செழிப்பை வருணிக்கிறார்.

நோன்பிருந்து கண்ணனை வணங்கினால் இச்சிறப்புகள் நீங்காத செல்வமாய் எந்நாளும் நம்மிடையே தங்கும் என்று ஆண்டாள் புளகாங்கிதம் அடைகிறார்.

முதல் பாட்டிலே “நாராயணனே” என்றும், இரண்டாவதில் “பையத் துயின்ற பரமன்” என்றும், மூன்றாவதில் “ஓங்கி உலகளந்த உத்தமன்” என்றும் பகவானை ஆண்டாள் குறிப்பிட்டு மகிழ்கிறார்.

நோன்பின் பயன் எத்தகைய செழிப்பை வாழ்வில் ஏற்படுத்தும் என்பது புரிகிறதா?

“ஆண்டாள் திருவடிகளே சரணம்”

“ஓம்! நமோ நாராயணா!!”

Image courtesy (With Thanks): Sourced via Google from Koyil website.

You may also like