செண்பகப்பூஊஊஊஊ…

by Parimelazhagan P
134 views

“நெறைஞ்ச வாசனை செண்பகப் பூஊஊஊஊஊ”

எங்கள் வீட்டுத் தோட்டத்தில் பூத்த முதல் செண்பகப்பூ..உங்கள் பார்வைக்கும்..வாசனை கிறக்குகிறது.

என் நெடுநாளைய ஆசை இன்று நிறைவேறியது.

சில மாதம் முன்பு தென்காசி போய் விட்டு வரும்போது வாய்க்கால் பாலத்தில் உள்ள நர்சரியில் வாங்கி வந்தேன். இரண்டு செண்பகங்கள்.

இப்போது பூத்திருப்பது ஒட்டு ஜாதியாம்.ஆறு மாதத்தில் பூக்கும் என்றான் அதை விற்ற பையன். இதன் விலையும் அதிகம்.ஒரு கன்னுக்கே 350 ரூவா வேங்கிபோட்டான்.

ஆறு மாதம் ஆயிற்று.முதல் பூ வந்து விட்டது.இன்னும் பத்து பதினைந்து மொட்டுக்கள் இருக்கிறது.

இந்த மழை நாளில் மஞ்சளாக பூத்து மணத்தது எனக்கும் சௌந்தரிக்கும் பெரிய சந்தோசம்.

மற்றொன்று சாதா. செண்பகமரமாய் வளரும்.மூனு வருடத்திற்குப் பின்பு தான் பூக்கத் தொடங்கும். காத்திருப்போம்.

செண்பகப்பூ மேற்குத் தொடர்ச்சி மலையின் அருங்கொடை.

குற்றால மலைப் பிரதேசங்களில் நிறைய செண்பகப்பூ மரங்கள் உண்டு.பூக்களும் பிரசித்தம்.

குற்றாலம், தென்காசி, செங்கோட்டை வாழ் மக்களுக்கு சீசனில் இந்தப்பூ தாராளமாய் கிடைக்கும். மிகவும் விரும்பி வாங்கி கூந்தலில் சூடுவார்கள்.

சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்பு ஒரு பாட்டையா காசிமேஜர்புரத்துக்காரர் என்று நெனைக்கிறேன்.. மேற்சொன்ன மூன்று ஊர்களுக்கும் தினமும் விற்க வருவார்.நல்ல ராகத்தோடு சத்தமாக..

“செண்பகப்பூஊஊஊஊ.. நெறைஞ்ச வாசனை செண்பகப் பூஊஊ” என்று பாடிக் கொண்டே விற்பார். இப்போதும் அவர் உருவமும் அந்தக் குரலும் மனதுள் ரீங்காரமிட்டு அந்த நாட்களை நினைவூட்டுகிறது. எப்பவும் நான் சித்த நேரம் நின்னு அவர் விற்பதை ‘பராக்கு’ பாத்திட்டுத்தான் போவேன்.

இரண்டு கூவெலையை குறுக்கும் நெடுக்மாக வைத்து உள்ளே அஞ்சு செண்பகப் பூக்களை வைத்து மடக்கி நாரால் கெட்டித் தருவார். நாலாணா என்று நெனைவு.அப்போ பூக்களில் செண்பகத்திற்குத்தான் அதிகவிலை.

மரமேறி நைசாக பறித்துக் கொண்டு வருவதாலும் சீசனுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதாலும் மக்களும் நொரநாட்டியம் பண்ணாம வாங்கிக்கிருவாங்க.

பின்னாளில் நான் எங்கள் கீழப்புலியூர் கிராமத்தில் வாழ்ந்தபோது சமைஞ்ச பொட்டப்புள்ளைகள்ல்லாம் இந்த பூவுக்கு அடிபுடி சண்டை போட்டு வாங்குவாளுவொ.

தலைக்கும் வைப்பாளுவொ. அதவிட சுத்தமான தேங்காஎண்ணைய வேங்கி அதுல இந்த செம்பவப்பூவையும் வெந்தயத்தையும் போட்டு ஊற வச்சு தேய்ப்பாளுவொ. அப்பிடித்தான் மணக்கும்..பாத்துகோங்க..அந்த எண்ணை.

இன்னுஞ் சிலரு இதோட முயல் ரத்தம் நனைஞ்ச துணியையும் போட்டு ஊற வச்சு தேய்ப்பாவொ.

முடி நல்லா கரு..கருன்னு வளரும்பாவொ.

முசல் ரத்தத்துணிங்கதெல்லாம் சும்மா சாமானியப்பட்ட காரியம் இல்ல..வே.

எங்கூரிலேயே கொஞ்சம் பயவுள்ளைய தான் நாயெல்லாம் கூட்டிகிட்டு வெளங்காட்டுக்குள்ள ராத்திரிக்கு முசவேட்டைக்கு போவானுவொ. அஞ்சு கட்டை பேட்ரி..வெள்ளிப்பூணு பேட்ரில்லாம் அப்ப உண்டு. அத அடிச்சு கிட்டு வேல்கம்பு.. குத்தூசி எல்லாம் கொண்டுகிட்டு போயி வேட்டையாடுவானுவொ.

முயலை பாத்ததும் நாய ஏவி வுடுவானுவொ.நாயி முசலை விரட்டி இந்த பயலுவொ நிக்க இடத்துக்கிட்டே விரட்டிக் கொண்டாரும். அந்தால செறிக்கிவுள்ளைய நீள கம்பா வச்சிருப்பானுவொள்ளா.. குத்தி தூக்கிருவானுவொ. ஓடின வேகத்துல இவனுவொ குத்துவானுவொளா.. அந்தால அடிபட்டு சொளூ.. சொளூ..ன்னு ரத்தம் வடியும். அந்த ரத்தத்த தான்வே வெள்ளை வேட்டிய கிழிச்ச துணியிலே பெறட்டி நனைப்பானுவொ. வேட்டைக்கு போம்போதே வீட்டுக்கு வந்து துணிய வேங்கிட்டு போவானுவொ.

எங்கக்கா எங்க அப்பாவோட ஏகதேசம் பழைய வேட்டியா பாத்து பாதி கோவணத் துணி சைஸூக்கு கிழிச்சு குடுத்து வுடுவா. மறுநா காலையிலேயே முசல் ரத்தத்துல பெறட்டுன துணிய கொண்டாந்துருவானுவொ.

‘மொசலு நெத்தம்’ ன்னுதான் பொம்பளைய சொல்லுவாளுவொ. அந்தத் துணிய காய வச்சு அந்த தேங்கா எண்ணை சீசாக்குள்ள போட்ருவாங்க. ஆறு மாசம்..ஒருவருஷம் ன்னு பொருளெல்லாம் சீசாக்குள்ளேயே கெடக்கும். எண்ணைய மட்டும் மேலால காலியாவ காலியாவ ஊத்தி ரெப்பிக்கிடுவாவொ.

பச்ச தேங்கா எண்ணை, வெந்தயம், அஞ்சாறு செம்பவப்பூ, மொசலு நெத்ததுணி.. போட்ட எண்ணை தலைமுடி வளர பெஸ்ட் டானிக்..குல்லா.

“செண்பகப் பூஊஊஊஊ”

“நெறைஞ்ச வாசனை செண்பகப் பூஊஊஊ.”

அய்யாசெண்பகப்பூஊஊஊஊ..!!!

பே.பரிமேலழகன்
November 30, 2017

You may also like