மகாவிஷ்ணு ஆயர்பாடியிலே கண்ணனாக அவதரித்த காலத்தில், ஆயர்பாடியிலுள்ள இடைக்குலப் பெண்கள் கண்ணனுடன் உயிராய் இருந்து வந்தனர். இதைக்கண்டு வெகுண்ட ஆயர்கள் தம் வீட்டுப் பெண்களுக்கும் கண்ணனுக்கும் தொடர்பு உண்டாகா வண்ணம்., இடைக்குலப் பெண்களை நிலவறைகளில் தள்ளி பூட்டி காவல் வைத்தனர்.
கோபியரும் கண்ணனும் ஒருவரையொருவர் காணாமல் துன்பம் அடைந்ததால் அவர்கள் மேற்கொண்ட சங்கற்பத்தினால் கோகுலம் மழையின்றி வறண்டது. பெரிய செல்வந்தர்களாகிய ஆயர்கள்,மழை வேண்டும் என்பதற்காக இடைக்குலப் பெண்களை “பாவை நோன்பு” நோற்கச் சொல்கிறார்கள். கண்ணனை அழைத்து., பெண்களுக்கு நோன்பு வெற்றியாய் நிறைவேறும்படிக்குத் தேவையானவைகளை செய்து கொடுக்கச் சொல்லி பெண்களைக் கண்ணனிடம் ஒப்புக் கொடுத்தார்கள்.
இடைப்பெண்களும் இந்த அரிய சந்தர்பத்தைப் பயன்படுத்தி தங்களுக்கு மிகவும் இஷ்டமான கண்ணனோடு கலந்து பரிமாறி, அதிகாலை நீராடி அவன் பூரண அன்பில் திளைத்து நோன்பை கண்ணன் அருளால் நிறைவேற்றினர். மழை பெய்து ஆயர்பாடி சுபிட்சமடைந்தது.
தோழிகள் மூலம் இதைக் கேட்டறிந்த ஆண்டாள், திருவரங்கன் மேல் கொண்ட பக்தியைப் பூர்த்தி செய்ய, ஆயர் குலப் பெண்களை அநுசரித்துக்கொண்டு அருளிச் செய்தது தான் இந்த “திருப்பாவை” பிரபந்தம்; ஆண்டாள் தமிழுக்குச் செய்த அருட்பெரும் கொடை.
P.பரிமேலழகன்