பட்ட அறிவு

by Parimelazhagan P
397 views
Parimelazhagan

நம்மில் பல பேருக்கு நம் வாழ்க்கை அநுபவத்தைக் கொண்டும்..நாமே புரிந்து கொண்டதை வைத்தும்..நம்முடைய பல செயல்களை நமக்கு நாமே நியாயப்படுத்தி வாழ்கிறோம். இதிலே பிறரின் மாற்றுக் கருத்துக்களைக் கூட சமார்த்தியமாக பேசி..நாம் கொண்டே நிலையே சரி..யென திரும்பத் திரும்ப ஊர்ஜிதப் படுத்திக் கொள்வோம். அதிலொரு குரூர திருப்தியும் அடைந்து கொள்வோம்.

இப்பதிவை முழுசா படித்த பின் இவ்விசயத்தை.. “ஆமாம்” ..என்று ஒருவேளை பலபேரு ஒத்துக்கொள்ள முன் வரலாம். சரி.. பார்ப்போம்.

நான் 1970 முதல் 1974 வரை பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் PUC முதல் BSc வரை படித்தேன்.

ஒழுக்கத்துக்கும் அதீத கட்டுப்பாட்டுக்கும் பேர்போன..சேவியர் கல்லூரியும்..சேவியர் ஹாஸ்டலும் தங்களின் பெருமையை காற்றில் பறக்க விட்ட வருடங்கள் அவை.

PUC முதலே..தோசை ஸ்ட்ரைக், லூர்துநாதன் ஸ்ட்ரைக், மாணவர் யூனியன் ஸ்ட்ரைக்….. இன்னும் பல Social Strikes என்று நாலு வருடமும் கல்லூரி எந்த ஆண்டிலும் முழுதாய் நடக்கவில்லை.

எல்லா ஒழுக்கங்களும் கட்டுப்பாடுகளும் யூனியனைக் காரணம் காட்டி..மாணவர்களால் முழுதாய் மீறப்பட்டன.

மாலை 6 மணிக்கு பூட்டும் ஹாஸ்டல் வாசக்கதவு..இந்த நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் இரவு முழுக்கவும் திறந்தே கிடந்தது. செகண்ட் ஷோ சினிமாவுக்கு தினமும் ஒரு க்ரூப் மாணவர்கள் போய் கொண்டே இருப்பார்கள்.யாரும் கேள்வி கேட்க முடியாது.

சேவியர்ஸ் கல்லூரியிலும் கிளாஸை கட்..அடிக்கும் கலாச்சாரமும் தொடங்கி..மாணவர்கள் அனைவரும் ..அவுத்துவுட்ட கழுதைகளைப் போல..ஒழுங்காகப் படிக்காமல் நாட்களை வீணடித்தனர்.

ஹாஸ்டலிலோ..தினமும் மாலை நாலு மணிக்கு எல்லாவித விளையாட்டுத் திடல்களிலும் நெட்..கட்டி..பந்துகளை வைத்து விளையாடத் தயாராக வைத்திருப்பார்கள்.

நான் என் வாழ்க்கையிலேயே அந்த காலகட்டத்தில் தான்..பாஸ்கெட்பால்..த்ரோ பால்..வாலிபால்..டேபிள் டென்னிஸ்..புட்பால் என எல்லா விளையாட்டுக்களையும் விளையாடப் பழகினேன். பிற்பாடு கல்லூரி பாஸ்கெட் பால் டீமிலும் விளையாடினேன்.

காணாகுறைக்கு ஏகப்பட்ட நண்பர்களின் நட்பும் அரட்டையும் சேர்ந்ததினாலே நான் ஆரம்பத்திலிருந்தே நன்றாகப் படிக்கவில்லை.

கடைசியில் BSc யில் SECOND CLASS ல் பாஸ் பண்ணி கீழப்புலியூர் பட்டதாரிகளில் ஒருவன் ஆனேன்.

படிப்பைப்பற்றி யார் கேட்டாலும் இந்த ஸ்ட்ரைக்குகளை காரணமாகச் சொல்லி நான் அவர்களையும் ..முக்கியமாக என்னையும் மிக அழகாக சமாதானப்படுத்தி வந்தேன்.

வந்தது..புத்தி கொள்முதல் ..ஆன அந்த பொன்னாள்.

தொடர்ந்து ரெண்டு மூனு முறை மெட்ராஸ்க்கு வேலைக்கு இண்டர்வியூக்கு சென்றேன்.

அதிலே ஒரு கம்பெனி இண்டர்வியூவில் மூன்று பேர் கேள்வி கேட்டார்கள்.

என்னுடைய கல்விச் சான்றிதழ்களைப் பார்த்து விட்டு அதில் ஒருவர்.. So.. You have got second class in your degree..isn’t it..?ன்னாரு.

நான் ..Yes..sir..ன்னேன்.

அடுத்தாப்புல..அடுத்தவர்..நீ ஏன் First class ல் பாஸ் பண்ணலை..?ன்னார்.

இந்தக் கேள்வியை நான் எதிர்பார்த்து இருந்தேன்.அதற்கான பதிலாக..கல்லூரி நாலு வருடமும் ஒழுங்காக நடைபெறவில்லை..என்பதை காரண காரியங்களோடு பெருசா விளக்கினேன்.

அந்தக் கேள்விக்கு மிக நன்றாக பதில் சொன்னதாக கொஞ்சம் இறுமாப்புடனும் இருந்தேன்.

பின்னர் மூவரும் அடுத்த பத்துபதினைந்து நிமிடங்களுக்கு பல கேள்விகளைக் கேட்டனர். நானும் சளைக்காமல் பதில் சொன்னேன்.

திடீரென அவர்களில் ஒருவர் மீண்டும் கல்லூரி தேர்வுகள் பக்கம் சென்றார்.

நீங்கள் படித்தபோது உங்கள் கல்லூரியில் BSc Physics லே எத்தனை பேர் First class வாங்கினார்கள்..?என்றார்.

எனக்கு நன்றாக நினைவிருந்தது. 14 பேர் First class..என்றேன்.

உடனே அவர்..அப்படியானால் நீ ஏன் அந்த 14 பேரில் ஒருவனாக முதல் வகுப்பில் பாஸாக வில்லை..?என்றார்.

நான் விதிர்விதிர்த்துப் போனேன்.

அவர் மேலும்..நீ நன்றாக படிக்க முடியாமல் போனதற்குச் சொன்ன காரணங்கள் அனைத்தும் உண்மை என்று ஏற்றுக் கொண்டாலும்..அந்த 14 First class மாணவர்களும் அதே சூழ்நிலையில் தானே படித்தார்கள்..அவர்களால் மட்டும் எப்படி First class வாங்க முடிந்தது..என்றார்.

நான் சுடும் உண்மையின் எதார்த்தத்தை உடனடியாகப் புரிந்து கொண்டு..Sorry sir..இப்போது புரிகிறது.சூழ்நிலை எதுவானாலும் நான் இன்னும் நன்றாக படித்திருக்க வேண்டும்..மற்ற சூழ்நிலைகளை காரணம்காட்டி..என்னுடைய தரப்பை..நியாயம் என வாதிட்டது என் முட்டாள்தனம் தான்..என்றேன்.வெட்கினேன்.

Ok..it is alright ..என்றார்கள்.

மற்ற கேள்விகளுக்கு நான் பதில் சொன்ன விதத்துக்காகவும்..இந்தக் கேள்வியில் உண்மையைப் புரிந்துகொண்டு..உடனே தவறை ஒப்புக்கொண்ட நேர்மைக்காகவும் அந்த வேலை எனக்குக் கிடைத்தது.

ஆனாலும் அன்று நடந்த இண்டர்வியூ எனக்கு பெரிய பாடத்தை வாழ்நாள் பாடமாக புகட்டியது.

நாம் வாழ்க்கை நிகழ்வுகளைக் கொண்டு உண்மையான..உண்மையையும் நியாயத்தையும் ஒப்புக் கொள்ளாமல்..ஆராயாமல்..தான் கற்பிக்கும் நியாயமே சரியானது..போதுமானது..என்று நான் வாழ்ந்தது முட்டாள்தனம்..என்றுணர்ந்தேன்.அதுபோன்ற தவறு திரும்பவும் நிகழா வண்ணம் வாழ்கிறேன்.

என் பிள்ளைகளுக்கு நான் அடிக்கடி சொல்லிக் கொடுத்த பாடமும் இதுதான்.

We should be 100% fair in our approach ..even 1% on the wrong side might force you to take an unfair decision /judgement about people /things.

ஆகவே..நண்பர்களே..இளமையிலேயே எனக்கு ஏற்பட்ட ..புத்தி கொள்முதல்..என் வாழ்க்கையை பல சமயங்களில் என்னை செம்மைப்படுத்த உதவியாக இருந்தது..இருக்கிறது என்று சொல்லி நிறைவு செய்கிறேன்.

வாழ்க யாவரும்.!

பே.பரிமேலழகன்

You may also like