சின்னவயசு வெளையாட்டு…

by Parimelazhagan P
132 views

அப்பப்பா..

கிராமத்து வாழ்க்கையிலே கிறுகிறுத்து போயி வாழ்ந்தது தான் எத்தனை விசயங்களிலே இருக்குங்ஙேன்..!!

உப்புக்கு சப்பாணிய வெச்சு “தொட்டுபுடிச்சு” விளையாட்டு.

உத்திபிரிச்சு.. தனித்தனி டீம்..ஆ விளையாடினது.

சாட்பூட்த்ரீ.. போட்டு டீம் பிரிச்சு வெளையாடினது.

செறுக்காந்தட்டு.. (பாண்டி) விளையாட்டுல அவுட்டர் கோட்டை தண்டியா..யானதடம் போல கீச்சி.. கட்டம் வரைஞ்சு விளையாடினது..

கழிநீர்பானை.. அரிசி களைஞ்ச தண்ணீ.. பழசுகள்.. வடிகட்டின சுடுதண்ணீயெல்லாம் கொட்டுத கருத்த பெரிய மண்பானை.. அப்புறம் அந்தத்தண்ணிய மாட்டுத்தொட்டியிலே வுட்டு கலக்கி..மாட்டுக்கு தண்ணீ காட்டுவாங்க.

எருக்குழி..யிலே எருவை அள்ளி மாட்டு வண்டிக்கு செமப்போம். அப்புறம் எரு வண்டிய வயக்காட்டு அடிச்சுகிட்டு போயி எருவை தட்டுவோம். போம்போதும் வரும்போதும் அம்புட்டு மகிழ்ச்சியா இருப்போம் ஒன்னு மன்னா வேலை செய்ய.

நெல்அவிப்பு..நாட்கள்.. அது ஒரு தனிக்கதை. ரைஸ்மில்லுக்கு நெல்குத்த சக்கடாவண்டில போறதெல்லாம் சாகசம் நிறைந்த நாட்கள்..ல்லா.

அப்பாவுக்கு ஓடிஒளியும் ஆச்சி..
மருமவனுக்கு மொகங்குடுத்து பேசாத மாமியார்களை பாத்து.. சிரிப்பாணியா சிரிப்போம். அதென்னமோ அப்பிடி ஒரு மருவாதி.

பொங்கல் சமயத்தில்..செம்மண்ணை வெட்டியாந்து வீட்டு முத்தத்துல போட்டு தண்ணி ஊத்தி குழைச்சு மரக்காலுகுள்ள போட்டு..பூப்போல தரையிலே கொட்டுனா பொங்ககட்டி ரெடி. அப்பிடி பொங்ககட்டி போட்டு வெயிலுல காயவெச்சு பிறவு கலரு அடிப்போம். பொங்ககட்டி போடுதல்…படு சுவாரஸ்யம் மிகுந்த நாட்கள் அப்போ.

ஆஹாஹாஹா..ன்னு தினமும் ஏதாவது ஒரு வகையில வாழ்க்கை இனிக்கும்.

இதெல்லாம் நிறைந்தது தான் என்னோட சின்னவயசு வாழ்க்கையும்..

இன்னும் கால்தாண்டி.. கிளித்தட்டு.. அணில்மரநாய்.. உப்பு மூட்டை.. கபடி.. செல்லாங்குச்சி.. வீட்டுக்குள்ளேன்னா.. தாயக்கட்டம்.. தட்டாங்கல்லு.. தார்தார் வாழைக்கா.. பல்லாங்குழி.. தொட்டுபிடிச்சு(கள்ளன்போலீசு).. வயக்காட்டு கெணத்துல முங்குநீச்சல்.. அது இதுன்னு ஏகப்பட்ட வெளையாட்டுக்கள்.

பெறவாசல் வீட்டுக்கு வீடு உண்டு. வாதமடக்கி மரம்..பூவரசு மரம்..அந்திமந்தாரை செடிகள்..ன்னு பலதும்.

பூவரசு இலையைச் சுருட்டி குழல் செஞ்சு ஊதுன மகிழ்ச்சி இன்னிக்கு வரைக்கும் கெடைக்கலை.

ஏலே..ராசப்பா..வாலே..பீப்பீ செஞ்சு வெளயாடுவொம்..ன்னு சேக்காளிமாரு கூப்பிடுவானுவொ.

எங்க தோப்புல கொடுக்காபுளி மரந்தான் வேலி. பெரிய மரங்கள். கொடுக்காபுளி சீசன்ல நல்லா காச்சு உலுப்பிடும்.
அதோட முள்ளு நல்ல பெரீசா இருக்கும். நான் சின்ன அருவாளுட்டு முள்ளை செதுக்கிகிட்டே மரத்திலே ஏறி பழமும் பருத்த காய்களையும் புடுங்கி கீழே எறியுவேன்.
அதும்பொறவு எல்லாருஞ்சேந்து பங்கு பிரிச்சு கொடுக்காபுளி தின்ன சாகசம்..

இனி எங்கே வரப்போவுது..??

பே.பரிமேலழகன்
November 25, 2019

You may also like