ராசாவே..!

by Parimelazhagan P
195 views
ராசாவே

வித்து தின்னு போட்ட
விதை நெல்லைப் போல

சட்டுன்னு
விட்டுட்டு போயிட்டியே..
சடங்கான புள்ளை நான்
என்ன செய்யுவேன்..?

அக்கம் பக்கத்திலே சொல்லி
ஆற முடியுமா..?
அப்பன் ஆத்தாகிட்ட சொன்னா..
தேற முடியுமா.?

நாத்தை புடுங்கி வச்ச கையால
நல்லா ‘முடி’ போட முடியலையே..

பாத்து பாத்து
நெஞ்சுக்குள்ள விதைச்ச உன்னை ..

காத்தடிச்சு விலகின மாதிரி
கடந்து போக முடியலையே..

சூத்தையின்னா எண்ணி..
தூர எறிஞ்சிட்டு போயிட்ட என்னை..?

சூது வாது தெரியாம
கோதி முடிஞ்சேனே..ராசாவே..!

ஏது என்னன்னு சொல்லாம
ஒத்தையில வுட்டுபுட்டியே..!

நான் விடும் கண்ணீரை இந்த
நாத்து அறியுமிங்ஙேன்.

நாடறிய சேதி சொல்லி
நல்ல கலியாணம் நடக்கலியே.

பூமியிலே பொண்ணா பொறந்தாலே
நட்டமும் கட்டமுந்தானா.?

பூமியாத்தா….!
ஒன்னைப் போலவே
பொறுமையா போயிடவோ..?
பொட்டப்புள்ள..என்ன செய்வேன்..?

பே.பரிமேலழகன்
November 23, 2016

படம் உபயம் திரு.ராம்குமார் – தி ஜானகிராம் ஹோட்டல் – முதலாளி.

You may also like