எப்போதும்
காலத்தின் கையில் தான்
எதிர்காலத்தின் சாவி
இறுக்கி கட்டி விடப்பட்டுள்ளது.
தேவையான பொழுதுகளில்
தேவையான மாற்றங்களை
சிப்பி தன்னைத் திறந்து
முத்தைத் துப்புவது போல
இயற்கையாகவும் இயல்பாகவும்
அந்த மாற்றங்கள்
காலச்சாவியால் திறக்கப்படுகின்றன.
நாமும் தான்
நம் கண் முன்னே
எத்தனை மாற்றங்களைப் பார்த்து விட்டோம்.
இனியும்
எத்தனை மாற்றங்களை பார்க்கப் போகிறோமோ..?
சரியாய் தெரியாது.
ஆகவே
இன்றையை சூழ்நிலை கண்டு
இன்றைய அவலம் கண்டு
அநாவசியமாக பதற வேண்டாம்.
எல்லாம்
சில காலத்திற்கே உயிர்ப்புடன் இருக்கும்.
பின்
காலத்தின் பிடியில் சிக்கி
உரு மாறும் ; நிறம் மாறும்; குணம் மாறும்.
நல்லவைகளுக்கும்
அதே கதியில் தான் மாற்றம் நிகழ்கிறது.
பிறந்த இவ்வுலகில்
எதுவும் நிரந்தரமல்ல…என்றாலும்
மாற்றம் நிரந்தரமானது.
தினம் தினம்
ஏதோ ஒரு வகையில் எல்லாமே மாறுவது தான்
பிரபஞ்ச ரகசியம்; பிரபஞ்சச் செய்தி.
மாற்றத்தை
உடனே ஏற்றுக் கொள்பவர்கள்,
பாக்கியவான்கள்.
நின்று நிதானித்து
சமாதானமாகி ஏற்றுக் கொள்பவர்கள்
வாழத் தெரிந்தவர்கள்.
என்ன ஆனாலும் சரி,
நான் மாறமாட்டேன் என்று முரண்டு பிடிப்பவர்கள்,
அபாக்யசாலிகள்..
துன்பத்தை
அதிக விலைக்குக் குத்தகை எடுத்தவர்கள் எனலாம்.
மாற்றத்தை கண்ணுறும் போதெல்லாம்
முக மலர்ச்சியோடு நாமும் மாறுவோம்.
அது ஒன்று தான் சுகானுபவ வாழ்வுக்கு வழி.
இதில்
அறிவைப் புகுத்தி அசிங்கப் பட வேண்டாம்.
கௌரவம் பார்த்து கெட்டுப் போக வேண்டாம்.
காலம் தான் ஞானகாரகன்.
காலங்காலமாக நம்மை நடத்திச் செல்பவன்.
காலம் தான் இறைவனும் ஆகும்.
பே.பரிமேலழகன்
June 02, 2016