என் கருப்பு காளை..
என் கட்டு மஸ்தான ராசா..
ஒத்தை கையால
என்னை
ஒசக்க தூக்கி கொஞ்சும் ஆனை நீரு..
பாயும் புலி;
நீரு நா விரும்பும்
பட்டாளத்து துப்பாக்கி.

பிராயமா இருக்கையிலே
ஒம்மை
முன்னே விட்டு பின்னாலேயே நான் வரும்போது
ஒம்ம
உடலழகிலும் நடையழகிலும்
மயங்கின சிறுக்கி நானல்லோ..ராசா.

இன்னிக்கி வரைக்கும்
இறங்கலையே
அந்தப் பாசம்..ஆசை நேசம்.

ஒம்மை
பாத்து பாத்து ஆசைப்படுவேன்.
நீரு
திரும்பி என்னை பாத்தா
என் மொகம் சிவக்க வெக்கப்படுவேன்.

சோறு..தண்ணீ..துணி, மணி,
சொத்து..சொகம்..புள்ளைகுட்டின்னு..
நீரு
தந்ததெல்லாம் சொர்க்கந்தான்.
ஒம்ம கூட வாழும்
இந்த வாழ்க்கை தான்
எல்லாத்தையும் விட ஒசத்தி எனக்கு.
நீரு எஞ்சாமி..குலதெய்வம் ..கருத்தசாமி.

இப்போ
என்னைய முன்னே விட்டு
நீரு பின்னே வாரீறாக்கும்..

ஆமா..
வயசாயி கெழவி ஆயிட்டேமில்லா..
வழி எங்கும் நீரு தானே காப்பு.

ஒடிசலான தேகம்.
ஒடிஞ்சு விளுந்து கிடந்துரபிடாதுல்லா.
அப்பிடி ஒரு வெவரம் வச்சு தாங்குதியளே..
அது போதும்..மாராசா..

மைனரு மாறி முறுக்கேறி வருவீகளே..
அப்போ…
நீங்க தந்ததையெல்லாம் தாகமெடுத்த அன்னம் போல
அள்ளி அள்ளி ஆசையா அநுபவிச்சேன்.
பிளந்து போட்ட வெள்ளரியா மலந்து கெடப்பேன்.
ஒரு கொறையும் வைக்கலைய்யா..நீரு.

ஒரே ஒரு ஆசை தான் பாக்கி.
ஒமக்கு முன்னாலே
பூவு பொட்டோட..
வாவரசியா போயிரனுமின்னு தான்..நெனைக்கேன்.
நான் போயிட்டா
ஒம்ம காப்பாத்த யாருமில்லேயேன்னு தான் மலைக்கேன்.

பே.பரிமேலழகன்
May 04, 2016

You may also like