பேசினால் தான் என்றில்லை.
மௌனமும்
உணர்த்தும் பல சங்கதிகள்.
பெரும்பாலும் பிழியும்
சங்கடங்கள்.
நம்பிக்கைகள் பொய்ப்பதே
அதிர்ச்சியாகி
வாயை மூடி விடுமே.
நயவஞ்சகம் வெளிப்படும் போதே
முகம் வெளரி
மௌனம் தைக்குமே.
அதீத எதிர்பார்ப்புகளோடு
ஆரம்பித்த வாழ்க்கை.
நிதர்சன நிஜத்தை ஏற்கத்
தடுமாறுகிறது.
நெஞ்சுருக்கித்
தனிமைப் படுத்தி விடுகிறது.
தடம் புரண்டு
வாழ மறுக்கிறது மனசு.
தனிமையில் அமர்ந்து தீனி போட்டும்
திரும்ப மறுக்கும் சகஜம்.
எல்லா வாழ்க்கையிலும்
இது இன்று பிரதானமாகி விட்டது.
பொய்களை விதைத்தே
உள்ளே இழுக்கும் யதார்த்தம்.
உண்மை தெரியும் போது
புடுங்க முடியாத ஆழத்தில்
புதைந்திருக்கும் வாழ்க்கை.
யாரைக் குற்றம் சாட்ட…?
யார் ஏற்பார் பழி..?
பழியை நம்மிடமே திருப்பி
நாடகம் போடும் உலகம்.
பெண்களின் பாடு
இதில் பெரும்பாடு.
இருந்த பெரிய சொத்து
“இளமையும் கற்பும்.”
பல பொய்கள் சொல்லி
கமுக்கமாய் தாலிகட்டும்
திருமண பந்தத்தால்
இரண்டுக்குமே பெரும் சோதனை..
இரண்டையும் ஒரே நாளில் இழப்பார்கள்.
திரும்ப எக்காலத்திலும்
மீட்க இயலாத பெண்களின் சொத்து
கசக்கிய பூவாய் சருகாகி விடும்.
பாதி மனசோடு பாதி ஒப்புதலோடு
பாழாகிக் கழியும் வாழ்க்கை.
நிம்மதி என்ன விலையென்று தெரியாமல்
சஞ்சலம் சூழ்ந்ததால்
“மௌனம் ” தான் பேசும் மொழி.
பிறவி ஊமையாய் வாழ்ந்து,அப்பப்போ
பேசி நடிப்பார்கள்..ஒப்புக்கு.
பே.பரிமேலழகன்
November 23, 2015