கன்னி
நான்
பூத்து நிக்கேன் பல வருஷமா..
கள்ளிப்பூ
தள்ளிப்போ..ன்னு
போயிட்டாங்க பல பேரூ.
அன்னைக்கே
ஆத்தா சொன்னா…
அது அது
அந்தந்த நேரத்துல
கட்டையோ, நெட்டையோ
நடந்திரனும்.
அப்பத்தான்
பொம்பளைக்கு மரியாதைன்னா..
கேட்டுருக்கலாம்..ம்..ம்.
ஒரே ஒருத்தன்..
கண்ணே, கண்மணியே, கற்கண்டே..
காலம் பூரா
இன்பந்தாரேன் பொன் வண்டே,!
முத்தே, பவளமே, மூன்றாம் பிறையே..
முத்தழகே, முழுநிலவே..வா..வா என்றான்.
எல்லாம்
சொல்லியழைத்து
எங்கோ
பறந்து போனான்..பாவி.
எனக்கும்
புத்தி காணாது.
புளியங்கொம்புதான் வேணுமின்னு
எளியவர்களை
மறுத்து துரத்தியது
இப்போது உரைக்கிறது.
இனி
என்ன பிரயோஜனம்?
அழியாத கற்பால்..?
அணைக்காத தோளால்..?
ஜனகரின் வில்லா அது..?
ஸ்ரீராமன் வந்து ஒடிக்க…?
ஒல்லியா
இருந்தாலும்
பத்து வருஷத்துக்கு
முன்னாடி
விரும்பி வந்த
மூனாந்தெரு
கந்தசாமிகிட்ட
அதை
அப்பவே
ஒப்படைச்சிருக்கலாம்.
இப்போ
மூத்த பொண்ணு
மூனாப்பு படிச்சிருப்பா.
அழகு,
ஆணவம்,
அகங்காரம்,
விதி.
மலர்ந்தே இருந்தாலும்
நான்
இப்போ
யாரும் விரும்பாத
கள்ளிப்பூ….!!!!!!
பே.பரிமேலழகன்
November 16, 2015