பெண்களுக்கு அணிகலனான நால்வகைக் குணங்களில், மடம் என்பதை பேதமை என்று ஔவையார் குறிப்பிடுகிறார். மடம், மடமை, பேதமை என்றால் ஏதோ புத்திகுறைவு, பெண்புத்தி பின்புத்தி, முட்டாள்தனம் என்று அவசரப்பட்டு அர்த்தம் செய்து கொள்ளாதீர்கள்.
பொம்பளைக்கு என்ன தெரியும்? என்ற போக்கும் அதிகமாக இருக்கிற சமூகம் இது.
இவர்களுக்குத்தான் ஔவையார் சொல்கிறார்.,
“பேதமை என்பது மாதர்க்கு அணிகலம்”
அதெப்படி அறிவைப் பயன்படுத்தாத செயல்கள் ஒருவருக்கு அணிகலன் ஆக முடியும்??
எல்லாவற்றையும் அறிவுப்பூர்வமாக சிந்தித்து கேள்விகள் பல கேட்டு பதில் தெரிய விரும்பினால், வாழ்க்கை தர்க்க, வாத போராட்டமாகவே இருக்கும். அறிவை பயன்படுத்த வேண்டியபோது மட்டுமே பயன்படுத்தனும். இல்லையென்றால் அறிவு மற்றவர்களை பாடாய் படுத்திவிடும்.
இந்த உலகம் அன்பால் இயங்குகிறது.
அன்பு செய்ய அறிவு தேவையில்லை. கேள்விகள் தேவையில்லை. மனம் முழுக்க அன்பு இருந்தால் அறிவு பின்னுக்குத் தள்ளப்பட்டு விடும். அன்பான காரியங்கள் அறிவை மீறி அழகாய் நடக்கும். அங்கே அறிவுக்கு வேலையில்லையாதலால் அவை பேதமையாகவும், மடமையாகவும் தோன்றும்.
பெண்களின் சிறப்பு… “பேதமை”.
அவர்கள் எதையும் அறிவுப்பூர்வமாக சிந்திக்காமல், அன்பின் அடிப்படையில் சிந்திக்கிற, அந்த ஒருவித அறியாமைக் குணமே பெண்களின் அழகு!
அது தான் மடம்.
அது தான் குடும்பத்தையும் கணவன், குழந்தைகளையும், கேள்வி கேக்காத அன்பால் அரவணைக்கிறது. அள்ளக்குறையாத பாசத்தை அள்ளி வழங்குகிறது. கருணையோடு காரியமாற்ற உதவுகிறது. எல்லாரையும் எல்லா சமயத்திலும் எளிதாக மன்னித்து ஏற்றுக் கொள்கிறது.. இல்லையா?
தன் விருப்பு, வெறுப்புகளையும் தாண்டி கணவனை, குழந்தைகளை மிகுந்த பிரியத்துடன் ஒத்துக்கொண்டு அவர்களுக்காகவே தன் வாழ்க்கையை வலிய வந்து அர்ப்பணித்து வாழ்வது தான், பெண்களின் மடமைக் குணச் சிறப்பு.
இவன் எனக்கு பொருத்தம் தானா? எனக்குப் பிடிக்காத இவனோடு ஏன் உடன்படனும்? பிரச்சனை உள்ள பிள்ளையை நான் ஏன் வளர்க்கனும்? வீட்டின் பல சூழ்நிலைகளை நான் ஏன் சமாளிக்கனும்? எனக்கு இவர்களால் முழு திருப்தி தர முடிகிறா? இது போன்ற அறிவுசார்ந்த கேள்விகளை எல்லாப் பெண்களும், எல்லா காலகட்டத்திலும் கேட்டு பதில் பெற விரும்பினால், அன்பான, இன்பமான, அமைதியான வாழ்க்கை சாத்தியமாகுமா?
பெண்கள் வாழ்க! பெண்கள் பேதமை வாழ்க!!
பே.பரிமேலழகன்
November 15, 2015