பழக்க வழக்கங்கள் – ஆசாரக்கோவை

by Parimelazhagan P
142 views

வணக்கம் நண்பர்களே!!

எப்படிப் பேசுவது, பழகுவதென்றே பலருக்குத் தெரியவில்லை என்பது, சிலருடைய நீண்ட நாள் ஆதங்கம் அல்லது புகார். குறிப்பாகப் பெரியவர்களிடம், ஆட்கள் கூடியிருக்கும் சபையில், பெண்கள் ஆகியோரிடம் பேச, பழக வரைமுறைகள் இருக்கின்றன.

பலருக்கு இது நிஜமாகவே தெரிவதில்லை. சிலர் தெரிந்திருந்தும் கடைப் பிடிப்பதில்லை. நீங்கள் எப்போதாவது இவ்வாறு உணர்ந்ததுண்டா?

“ஆசாரக்கோவை” தரும் அறிவுரை என்ன?

“ஆசாரக்கோவை” பெருவாயின் முள்ளியார் எழுதிய நாம் நாள்தோறும் பின்பற்ற வேண்டிய உயர்ந்த ஆசாரங்களை, பழக்க வழக்கங்களை கூறும் சிறந்த நூலாகும்.

நகையொடு கொட்டாவி காறிப்பு தும்மல்
இவையும் பெரியார் முன் செய்யாரே செய்யின்
அசையாது நிற்கும் பழி.

நகை-சிரிப்பு.
காறிப்பு-காறி துப்புதல்.
பழி-குற்றம்.

பெரியவர்கள் முன்பு, சத்தமாகச் சிரிக்கக் கூடாது. கொட்டாவி சத்தம் வருமாறும், கை சொடுக்கியும் விடக் கூடாது. சத்தமாகக் காறித் துப்பக்கூடாது. எச்சில் சளி சிதற சப்தமாய் தும்மல் போடக்கூடாது. அப்படிச் செய்வது பெரியோரை மதிப்பதாகாத குற்றமாகக் கருதப்படும். அந்த சந்தர்ப்பங்களில் அந்த இடத்தைவிட்டு நகர்ந்து அப்பால் சென்று விடவேண்டும்.

உடுக்கை இகவார் செவி சொறுண்டார் கை மேல்
எடுத்துரையார் பெண்டிர் மேல் நோக்கார்செவிச் சொல்லும்
கொள்ளார் பெரியார் அகத்து.

உடுக்கை -ஆடை.
இகத்தல் -களைதல்.
சொறுண்டார்-சொறியமாட்டார்.

பெரியவர்கள் முன்பு, உடுத்தி இருக்கும் ஆடையை அவிழ்த்துத் திரும்ப உடுத்தக் கூடாது. கைககளை நீட்டியோ, உயர்த்தியோ பேசக்கூடாது. பெண்களை நிமிர்ந்தோ, முறைத்தோ, ஜாடை செய்தோ பார்க்கக்கூடாது.

பெரியோர் முன் மற்றவர்களிடம் காதில் குசு குசு வெனப் பேசக்கூடாது. அவ்வாறு செய்வது மரியாதை தெரியாத குற்றமாகும்.

விரைந்துரையார் மேன்மேல் உரையார் பொய்யாய
பரந்துரையார் பாரித்துரையார் ஒருங்கனைத்தும்
சில் எழுத்தினாலே பொருள்அடங்கக் காலத்தால்
சொல்லுக செவ்வி அறிந்து.

பாரித்து-விளக்கி.
செவ்வி-சமயம்.

மற்றவர்களிடம் செய்திகளைச் சொல்லும்போது, வேகமாகச் சொல்லக் கூடாது. சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லக்கூடாது. பொய்ச்செய்திகள், நீண்ட நேரம் பேசுதல் கூடாது. சுருக்கமாகவும், எளிதில் விளங்கும்படியும், காலம், இடம் அறிந்து கவனமாகவும் பேசவேண்டும்.

நண்பர்களே,
மேற்சொன்ன அறிவுரைகள் எல்லாம் குறிப்பாக இளைஞர்களுக்குப் போய் சேருமாறு சொல்லுங்கள். சாதரணமாகத் தோன்றினாலும்,இவைச் சிறந்த பழக்க வழக்கங்களுக்குப் பெரிதும் உறுதுணையாய் இருக்கும். அவர்களுக்கு, நாம் சொல்லாவிடில் யார் சொல்வார்கள்?

இளைஞர்கள் தான் வருங்காலத் தலைவர்கள். அவர்களின் சிறப்பு நமக்கும் நாட்டுக்கும் பெருமை.

நன்றி! வணக்கம்!!

பே.பரிமேலழகன்
November 15, 2014

You may also like