தூக்கம் – நான்மணிக்கடிகை

by Parimelazhagan P
81 views

வணக்கம் நண்பர்களே! நன்றாகத் தூங்கினீர்களா?

உடல் ஆரோக்கியத்திற்கு தூக்கம் அவசியம். அதிலும் இரவுத் தூக்கம்.

நம்மவர்கள் காலங்காலமாக இயற்கையோடு ஒட்டிய வாழ்க்கை தான் வாழ்ந்துள்ளனர். அதாவது சூரிய உதயத்திற்கு சற்றுமுன் எழுந்து பகல் பூராவும் உடலுழைப்புச் செய்து இரவு முழுவதும் சுகமாய்த் தூங்கி சிறந்த ஆரோக்கியம் பேணி ஆணும் பெண்ணும் நோய் நொடியின்றி வாழ்ந்தனர்.

தாத்தா பாட்டி வீட்டிலிருந்தால் கேட்டுப் பாருங்கள்! உண்மை விளங்கும்.

இன்றைய சூழ்நிலை தடுமாற்றத்தினால் ஆணும் பெண்ணும் இயற்கைக்கு எதிரான வாழ்க்கையையே வாழ வேண்டிய நிர்ப்பந்தம். ராப்பகலா வேலை செஞ்சாலும் தேவைகளைப் பூர்த்தி செய்ய திண்டாட்டமா இருக்கு. இதனால் இன்றைய சமுதாயம் தொலைத்த பல அருமையான விசயங்களில் முக்கியமானது ராத்தூக்கம்.

எப்பாடு பட்டேனும் பொருள் தேட வேண்டிய கட்டாயம். வீடு,கார்,ஆங்கிலக்கல்வி.,துணி மணி,பட்டம் பதவின்னு பெரிய லிஸ்டா ஆயிருச்சு வாழ்க்கை. தப்பும் தவறுமா பணம் வரவு. சேத்ததைக் காப்பாத்த பெருஞ்செலவுன்னு இருந்தா தூக்கம் வருமா?ஆரோக்கியம் பிழைக்குமா?

இப்பிடி தேவையற்ற தேவைகளுக்காகத்தான் திருட்டு,கொலை,களவு எல்லாம். வீட்டை பூட்டிட்டு வெளியூர் போகமுடியல.வீட்டில ஆட்கள் தனியா இருக்க முடியல. ஊரே தூங்கினாலும்,திருடன் மட்டும் தூங்காம இருந்து ருடுகிறான்.

இப்போது காதல் கூட கடைச்சரக்கு மாதிரி தான். புடிச்சா வாங்கு; புடிக்காட்டி போங்கு என்பதுபோல் உள்ளது. அதிலும் சில காதல்,பழம் விக்கிறவன் சொல்வானே, சாமி! சாப்புட்டு பாத்து பழம் புடிச்சிருந்தா வாங்கிக்கோன்னு, அந்த ரகத்துல இருக்கு.

எப்ப புட்டுக்குமோன்னு பயம் ஆணுக்கும் பெண்ணுக்கும். MOBILE, FACEBOOK, TWITTER, WHATSAPP, E-MAIL ன்னு பொட்டுத் தூக்கம் இல்லாம காதல், கள்ளக்காதல் வளருது.
யார் யாரைக் காப்பாத்தறதுன்னே தெரியல.

ஆனா அப்பவே, நான்மணிக்கடிகை எழுதிய விளம்பி நாகனாருக்குத் தெரிஞ்சுருக்கு. தூக்கம் யாருக்கெல்லாம் வராதுன்னு கொஞ்சம் தூக்கலாவே சொல்லிட்டு போயிட்டார்.

கள்வம் என்பார்க்குந் துயிலில்லை காதலிமாட்டு
உள்ளம் வைப்பார்க்குந் துயிலில்லை ஒண்பொருள்
செய்வம் என்பார்க்குந் துயிலில்லை அப்பொருள்
காப்பார்க்கும் இல்லை துயில்.

பொருள்:
திருடர்களுக்கும்,காதல் வயப்பட்ட தலைவன் தலைவிக்கும், பெரும் பொருள் தேடி உழைப்பாருக்கும், தேடிய பொருளை பிறர் அபகரிக்காமல் கட்டி காப்பாருக்கும் “தூக்கம்” வராது.

நண்பர்களே, தூக்கம் வராதவர்கள் இதில் எந்த லிஸ்டைச் சேர்ந்தவர்கள் என்று பார்த்து, திருந்தி வாழவும்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற முதுமொழி வாழ்க்கையின் எல்லா நிலைகளுக்கும் பொருந்தும். ஆகையால் அளவுடன் பெருக்கி வளமுடன் வாழ வாழ்த்துக்கள்.

வாழ்க யாவரும்!
நன்றி!!
வணக்கம்!!!

பே.பரிமேலழகன்
November 25, 2014

You may also like