திருமாலின் சிறப்பு – நாலாயிர திவ்யப் பிரபந்தம்

by Parimelazhagan P
89 views

நண்பர்கள் அனைவரும் நீடூழி வாழ்க பல்லாண்டு!

பக்தி மார்க்கத்தில் தங்களை முழுமையாய் ஈடுபடுத்திக்கொண்ட ஆழ்வார்கள், நாயன்மார்கள் மூலம் நமக்குக் கிடைத்த பாடல்கள், தமிழுக்கு வைக்கப்பட்ட மகுடங்கள். இறைவனை இறைவனாலேயே கூட இவ்வளவு சிறப்பாய் எண்ணியிருக்க முடியாது. அந்த அளவுக்குப் பக்தியில் உயர்ந்தவர்கள் நம் முன்னோர்கள்.

மனித மனவோட்டம் இறைவன் புகழ் பாடும்போது கூட, இம்மையிலும் மறுமையிலும் இறைவனுக்கே தொண்டாற்ற வேண்டும் எனும் சிரத்தையை வெளிப்படுத்தும் விதம் மகிழ்ந்து, அநுபவித்துப் பாராட்டத்தக்கது.

இன்று நாலாயிர திவ்யப் பிரபந்தத்திலிருந்து, பெரியாழ்வார்., திருமாலின் சிறப்பு இயல்களைப் பற்றிப் பாடிய பாசுரம் ஒன்றை அநுபவிப்போம்.

“பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை” ஆண்டாள் நாச்சியார். ஆண்டாள் நாச்சியாருக்கு கோதை எனப்பெயர் சூட்டி வளர்த்து உரிய காலத்தில் ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு திருமணம் செய்து வைத்த பெரும்பேறு வாய்க்கப் பெற்றவர் பெரியாழ்வார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில், விஷ்ணுசித்தராய் பிறந்து பிற்காலத்தில் அவரே ‘பெரியாழ்வார்’ என்று போற்றப்பட்ட ஞானி ஆனார். பெரியாழ்வார், கருடாழ்வாரின் அம்சமாகப் பூமியில் அவதரித்து., பெருமாள் கைங்கரியத்திற்கே தன்னை அர்ப்பணித்தவர்.

பெரிய பெருமாள் திருமாலுக்கே இப்பிறவி முடிந்தபின்னும் சேவை செய்ய வேண்டும் என்ற தன் விருப்பத்தை நிறைவேற்றித் தர பிரார்திக்கிறார். அதன்படிக்கு, மரணம் வரும் சமயம் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, உடல்நலிந்து பெருமாள் பெயரை உச்சரிக்க முடியாது போய்விடுமோ என அஞ்சி, அத்துன்பத்திலிருந்து தன்னை காத்தருள வேண்டும் என்று பெரியாழ்வார்., பெருமாள் திருவடிகளில் சரண் புகும் அழகே தனி சுகம்.

பாசுரம் அநுபவிப்போம், வாரீர் !!

துப்புடையாரை அடைவதெல்லாம்
சோர்விடத்துத் துணையாவர் என்றே
ஒப்பிலேன்! ஆகிலும் நின்னடைந்தேன்
ஆணைக்கு அருள் நீ செய்தமையால்;
எய்ப்பு என்னை வந்து நலியும்போது அங்கு
ஏதும் நான் உன்னை நினைக்க மாட்டேன்;
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்,
அரங்கத்து அரவணைப் பள்ளியானே!

துப்புடையார் – நல்லவர்கள்
ஒப்பிலேன் – ஈடாக மாட்டேன்

பெருமாளே! உம்மைப் போன்ற நல்லவர்களைத் துணையாகச் சேருவதற்கு காரணமே, உடல், மனமெல்லாம் தளர்ச்சி அடைகிற காலத்தில் அதாவது அந்திம காலத்தில் உற்ற துணையாய் இருந்து காத்தருள்வாய் என்பதனால் தான்.

பகவானே! எனக்கு நன்றாய்த் தெரியும், அதாவது உம்முடைய மற்ற சிறந்த பக்தர்களுக்கு நான் ஈடாகமாட்டேன். என்னை அவர்களோடு ஒப்பிட முடியாதபடி நான் சாதரணமானவன்.

இருந்தாலும் நீ “காப்பாய்” என்று உன்னைச் சரணடைகிறேன். ஏன் தெரியுமா? உன்னையே சரண் என நம்பிய கஜேந்திர ஆழ்வான் என்ற ஆணைக்குத் தக்க சமயத்தில் அருள் செய்து முதலை வாயிலிருந்து காத்தவன் நீ என்பதால் நானும் சரணடைந்தேன். ஆகையால், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கத்தில் ஆதிசேசனை படுக்கையாய் வைத்துப் பள்ளி கொண்டுள்ள பெருமாளே!

என் அந்திமக்காலத்தில் உடல், மனம், புத்தி நலிந்து இளைத்த சமயத்தில், உன் நாமம் சொல்லி மகிழ சக்தியற்றுப் போய்விடுவேன் என்பதால் அப்போதைக்கு இப்போதே உன் நாமம் சொல்லி மகிழ்கிறேன். நீயே கதி எனச் சரணடைகிறேன். காத்தருள்வாய் பெருமாளே!! என்கிறார் பெரியாழ்வார்.

நண்பர்களே, எவ்வளவு உயர்ந்த பக்தி, ஈடுபாடு, நம்பிக்கை இறைவன் மீது? நாமும் பெருமாளை பக்தி சிரத்தையோடு தொழுவோம். யாவும் அவன் தருவான்.

மேலும் மனித உருவில் நம்முடன் வாழும் இறையாம் சக மனிதர்களுடனும் இதே சிரத்தையோடும், நம்பிக்கையோடும் அன்பு செலுத்தலாமா?

ஓம்! நமோ நாராயணாய!! நன்றி! வணக்கம்!!

பே.பரிமேலழகன்
November 20, 2014

You may also like