பருவ மாற்றத்தால்
பயந்து போன
அம்மாவும் பொண்ணும்.
மகளுக்கெப்படி
எல்லாவற்றையும்
நானே சொல்வது..??..அம்மா.
தாயிடம் எப்படி
தயக்கம் நீக்கி
உண்மைகளை அறிவது,?..மகள்.
உடல் திறப்பினை
உணரும் நாள் முதலே
மகள் பெண்ணாகிறாள்.
பெண்
பெண்ணாக
வலம் வர
வாழ்வாங்கு வாழ
வரம் வழங்குகிறது
பூத்த நாள்.
காரணம்
Estrogen
என்னும் ஹார்மோன்
சுரப்பின் ஆரம்பம்.
அன்று நாள் முதல்
அங்கம் துலங்கி..துலக்கி
வெட்கம் புனைந்து
பட்டாம் பூச்சிகளாய்
சுற்றிச் சுழல்வர் பெண்கள்.
பூப்புக்குப் பின்னான
பெண்மையின்
இலக்கணச் சொத்தான,.
அழகு..,
மென்மை,
மிருதுத் தன்மை.,
கன்னக் கதுப்பு.,
அங்க பூரிப்பு.,
அந்தரங்க தயாரிப்பு.,
என எல்லா
ஏற்பாடும்
தடபுடலாய்த் தயாராகும்
சூட்சுமம்
“ஈஸ்ட்ரோஜன்” கையில்.
பெண்கள் அனைவரும்
அறிந்து கொள்ள வேண்டிய
அறிவியல் அதிசயம்.
ஆண்டவன் படைப்பின்
அற்புத ரகசியம்.
பூப்படைந்த காலம் முதல்
தூரம் நிற்கும் காலம் வரை
ஒவ்வொரு மாதமும்
ஒரு குழந்தை சனிக்கவே
மாத சுழற்சியில்
தயாராகிறது மங்கை உடல்.
என்ன விந்தை இது..??!!
கரு.. பெறாத போது
மாதாமாதம்
கலைந்து குருதியாய்
வெளிப்பட்டுச் சுத்தமாவதே
“மாதவிடாய்”.
இதுவே
பெண்மை
தாயாய் மலர
இயற்கை செய்துள்ள
இம்மியும் பிசகாத ஏற்பாடு.
இறைசக்தியின்
இனப்பெருக்க
அன்பின் வெளிப்பாடு.
இதில்
அசிங்கம் இல்லை;
வெட்கம் இல்லை.
தள்ளி வைக்க
வேண்டியதே இல்லை.
வலி உண்டு,
வயிற்று பிசைவு உண்டு,
கூடுதல்,குறைவாய் ரத்தப் போக்குண்டு.
நாளும் கூடிக்குறையும் துன்பமுண்டு.
தேவை நாலு நாள் பூரண ஓய்வு மட்டுமே.
அதோடு
அடுத்த சுழற்சிக்கு அவள் தயார்.
இதெல்லாம்
இயற்கையின் ஏற்பாடு என்றுணர்வீர்.
மனித சூழ்ச்சி
மருந்துக்கும் இதில் இல்லை.
ஆண்களுக்கு
இதில்
அஞ்சு பைசா சம்பந்தம் கூட இல்லை.
நம்புங்கள்.
வாழ்க தாய்மை!
வாழ்க பெண்கள்!
வாழ்க இறைசக்தி!
பே.பரிமேலழகன்
November 17, 2015